தெய்வத்தின் குரல்: சரணாகதிதான் ஒரே கதி

தெய்வத்தின் குரல்: சரணாகதிதான் ஒரே கதி
Updated on
2 min read

ஆரம்பகால வித்யா குருவான வேதவித்தானாலும் சரி, நம் ஆத்மாவைப் பரமாத்மாவிடம் சேர்க்கிற ஞான குருவான பிரம்ம வித்தானாலும் சரி, இரண்டு பேருக்கும் ஒழுக்கம், பக்தி இரண்டும் முக்கியம் என்று சொன்னேன்.

பரலோகத்துக்கு வழி காட்டுகிற குரு, பிரத்யக்ஷ ஈச்வரன் மாதிரிச் சித்தம் கொஞ்சம்கூடச் சலியாதவராக, மஹா ஞானியாக, கிருபா மூர்த்தியாக, பரம சுத்தராக இருக்க வேண்டும் என்றேன். இப்படிப்பட்ட குரு கிடைத்துவிட்டால் ஈசுவரனேகூட வேண்டாம் என்றேன்.

சுத்தியாக வேண்டுமென்று நிஜமான தாபம் இருந்தால், அப்படித் தாபப்படுகிறவர்களிடம் பகவானே குருவை அனுப்பித் தீருவான் என்றுதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

குரு என்று நாம் தேடிப் போகிறவர் வாஸ்தவத்தில் ஒரு போலியாக இருந்துவிட்டால் என்ன பண்ணுவது? அவர் சுத்தரா இல்லையா என்று நமக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? சுத்தர் என்றே போகிறோம், அப்புறம் வேறு தினுசாகத் தோன்றுகிறது என்றால் என்ன பண்ணுவது? இன்னோரிடத்துக்குப் போகலாம் என்றால், அங்கேயும் இதே மாதிரி ஏமாந்து போகமாட்டோம் என்று என்ன நிச்சயம்? இப்படி குழப்பமாயிருக்கிறது.

நாலு தினுசாகப் பேசும் லோகம்

லோகம் பொல்லாதது. நாலு தினுசாகப் பேசும். ஒரு சுத்தரைப் பற்றியே அபவாதமாக சொல்லிவிடுகிறது. அது நிஜமாக இருந்துவிட்டால் நம் கதி என்ன ஆவது என்று அவரை ஆச்ரயித்தவர்களுக்கு பயம் உண்டாகிறது.

இதற்கு என்ன பண்ணலாம்? வித்யாப்யாஸ குரு விஷயத்தில் இது பெரிய பிரச்சனை இல்லை. அவரிடம் மனுஷ்யர்களுக்குள் நல்ல சிஷ்யர்களால் முடியக்கூடிய ஒழுக்கங்களைத்தான் எதிர்ப்பார்க்கிறோம். இதை அநேகமாக அவர் பூர்த்தி பண்ணிவிடுவார். அவர் கிருஹஸ்தர் என்பதாலேயே சந்நியாச குருவுக்கு ரொம்பவும் களங்கமாகிற தப்புக்கள் இவருக்கு ஏற்படுவதற்கே இடமில்லாமல் போகிறது. அதுவும் தவிர இவரிடம் சிஷ்யனாக இருப்பது பால்யத்தில்தான். அப்போது மனசு தோண்டித் தோண்டி எதையும் ‘ஜட்ஜ்' பண்ணாது. அதனால் இவரையும் ஜட்ஜ் பண்ணாது. இவர்தான் தெய்வம் மாதிரி என்று ரொம்பவும் இளமனசில் ஏற்றிவிட்டதால், அது அப்படியே நினைத்துக் கொண்டு பக்தியோடு இருந்துவிடும்.

குருவின் யோக்யதாம்சம் பற்றி முன்னே சொன்னதையெல்லாம் இப்போது நானே வாபஸ் வாங்கிக்கொண்டுவிடப் போகிறேன்.

அதாவது, குருவுடைய யோக்யதாம்சத்தையே பார்க்காதீர்கள் என்கிறேன். வித்யாப்யாஸ குருவிடம் குழந்தை சிஷ்யன் இருக்கிற மாதிரியே, மோக்ஷ மார்க்கத்தைக் காட்ட வேண்டிய இவரிடம் வயதான சிஷ்யர்களும் இருந்துவிட வேண்டும் என்கிறேன். அதாவது அவரிடத்தில் முழு நம்பிக்கை வைத்துவிட வேண்டும். அது கண்மூடித்தனம் என்று மற்றவர்கள் சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்.

குரு வேண்டும் என்று தேடினோம். சுத்தமானவர், பூர்ணமானவர் என்று நம்பித்தான் இவரை ஆச்ரயித்தோம். இவரிடம் வந்தபோது இவர் அசுத்தமானவர், அபூர்ணமானவர் என்று நாம் நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் வந்தேயிருக்க மாட்டோம். வந்தபின் இப்போது சந்தேகம் ஏற்பட்டு விட்டதென்றால் என்ன செய்யலாம்?

இன்னொருவரிடம் போவதென்றால் அவர் கதையும் பிறகு எப்படியாகுமோ என்று ஒரு பயம். இன்னொரு பயம், குரு என்று இவரை வரித்துவிட்டு, இன்னொருவரிடம் போனால் பதிவ்ரத்ய தோஷம் [கற்பில் தவறுவது] போல், குருத்ரோஹம் என்ற பாபம் சம்பவிக்குமோ என்பது.

இந்த நிலையில் ஒரே ‘ஸொல்யூஷன்' [தீர்வு], யோக்யதாம்சத்தைப் பார்க்காமலிருந்து விடுவதுதான் என்று தோன்றுகிறது. நாம் குருவைத் தேடினபோது, இவர்தான் கிடைத்து, இவரைத்தான் சரணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், ஈச்வரனே இவரைத்தான் நமக்கு குருவாக அனுப்பி வைத்திருக்கிறான் என்றுதானே அதற்கு அர்த்தம்? அப்படியே வைத்துக்கொள்வோம். குருவை ஈச்வரன் அனுப்பினான் என்று மட்டுமில்லாமல் ஈச்வரனே குருவாக வந்திருக்கிறான் என்று பாவிக்கும்படி தானே சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.

இவர் மநுஷ்ய குரு என்கிற வரையில்தான் இவர் நிர்தோஷமானவரா, தோஷமானவரா என்ற கேள்வி வருகிறது. இவரே ஈச்வரன் என்று நம்பிவிட்டால், இந்தக் கேள்விக்கே இடமில்லை. தோஷமுள்ள ஈச்வரன் என்று உண்டா என்ன? ஈச்வரனிடத்தில் தோஷம் மாதிரி ஏதாவது தெரிந்தால்கூட, அதுவும் நம் திருஷ்டி தோஷம் தானே? இப்படியே குருவைப் பற்றியும் நினைத்துவிட்டால் போகிறது. இவர் ஈச்வரனே என்று வைத்துவிட்டால் இவரைவிட்டு இன்னொருவரிடம் போவதற்கும் இடமில்லை. ஈச்வரன் ஒருத்தன் தானே? ஒரு ஈச்வரனை விட்டு இன்னொரு ஈச்வரனிடத்தில் போவது என்பது பரிஹாஸமான விஷயமல்லவா?

மோக்ஷத்துக்குப் போகும் வழி

அதனால் குரு என்று ஒருத்தரை அடைந்த பிறகு, அவர் எப்படியானாலும் இருக்கட்டும் என்று நாம் நம் பக்தியில் இறங்காமல், சலிக்காமல் அவரையே உபாஸித்து வரவேண்டும்; சுஸ்ரூஷை பண்ண வேண்டும். இப்படிப் பண்ணினால் கடைசியில் ஈச்வரன் அவர் மூலமே நமக்கு சுத்தியை, ஞானத்தைக் கொடுத்துவிடுவான். அவர் மோக்ஷத்துக்குப் போனாலும் போகாவிட்டாலும் நாம் போய்விடுவோம்.

தூர்த்த குணம், கெட்ட பழக்கமுள்ள குருவை உபாசிக்கிறோம் என்று உலகம் பரிஹாஸம்தான் செய்யும். செய்துவிட்டுப் போகட்டும். இதனால் நமக்கு எந்த அளவுக்கு நஷ்டம் வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டும். முடிவில் இதற்கெல்லாம் ஈடு செய்வதான பரம லாபம் கிடைக்காமல் போகாது.

நமக்கென்று லாப-நஷ்டம், மானாவமானம் பார்க்காமல், ஓரிடத்தில் நம்பி சரணாகதி பண்ணிவிட்டால், முடிவில் அதற்காக ஈச்வரன் பரம லாபமான ஆத்ம ஞானத்தைக் கொடுத்து விடுவான்.

பாக்கி இடங்களில்தான் லாபநஷ்டம் பார்த்தாலும் பார்க்கலாம்; குருவிடத்தில் மட்டும் லாப நஷ்டம் பாராமல் சரணாகதி பண்ணிவிடவேண்டும்.

முதலில் ஒருத்தரை நம்பினபோது அவரிடம் பண்ணின சரணாகதியை எக்காலத்திலும் மாற்றிக் கொள்ளாமலிருந்துவிட்டால் எந்த ப்ரயோஜனத்துக்காக இந்த குருவிடம் நாம் வந்தோமோ அது ஈச்வர பிரசாதமாகக் கிடைத்துவிடும்.

தெய்வத்தின் குரல்
(இரண்டாம் பாகம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in