

பகவானுடைய பத்தினியாகவும், உலகிற்கெல்லாம் தாயாகவும் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரே மகாலக்ஷ்மி. அந்த மகாலக்ஷ்மி தாயாரை ஒரே ஒரு முறை நமஸ்கரித்தாலும் போதும், சகலவிதமான பலன்களையும் ஒரு சேர அளிக்கிறாள் என்று பராசர பட்டர் தனது குணரத்னகோசம் என்னும் நூலில் கூறுகிறார்.
வேதபாகங்களில் மிக மிக முக்கியமான மந்திரங்களைச் சூக்த மந்திரங்கள் என்கிறோம். அம்மந்திர சூக்தங்களில் ஐந்து சூக்தங்கள் மிக முக்கியமானது. அவற்றை பஞ்ச சூக்தங்கள் என்கிறோம். அதில் இரண்டு சூக்தங்கள் பகவான் ஸ்ரீமந் நாராயணனைக் குறிப்பவை. மூன்று சூக்தங்கள் அவனுடைய முப்பெரும் தேவியர்களான மகாலக்ஷ்மி (ஸ்ரீதேவி), பூதேவி, நீளாதேவியைக் குறிப்பன.சிறப்பு என்னவென்றால் நாராயணனைக் குறித்த சூக்தமும் அவன் மகாலட்சுமியோடு இருப்பதாகவே கூறுகின்றன.
நற்குணங்களைத் தருபவள்
காகாசுரன் என்றொருவன் தேவன். இந்திரனுடைய மகன். அவன் சீதையைக் காமநோக்கோடு அணுகினான்; கண்ணிழந்தான்; அசுரனானான்; காகாசுரன் என்ற பெயர் பெற்றான். அசுர வம்சத்தில் தோன்றிய பிரகலாதன் பகவானையும் பிராட்டியையும் வணங்கினான்; தேவனானான். பிரகலாதாழ்வான் என்ற பக்தனானான்.அவனுக்கென்றே பகவான் ஒரு அவதாரம் எடுத்தார். அதுதான் நரசிம்ம அவதாரம்.
தேவகுணம் பெறவும், அசுரகுணம் நீங்கவும் மகாலட்சுமியை வணங்கவேண்டும்.
பாற்கடலில் ஏன் அவதாரம்?
ஒருமுறை துர்வாசர், மகாலட்சுமியின் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு இந்திரனைப் பார்க்கச் சென்றார். ஐராவதம் என்ற யானையின் மீது கம்பீரமாக வீற்றிருந்த இந்திரன் செல்வச் செருக்கோடு அந்தப் பிரசாதத்தை யானையின் மீது வைக்க அது தன் காலில் போட்டு நசுக்கியது. மகாலட்சுமியின் பிரசாதத்தை அவமதித்த இந்திரன் தனது புகழ், செல்வம் அனைத்தையும் இழந்தான். தன் தவறை உணர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, இழந்த செல்வங்கள் அடுத்தடுத்துக் கிடைத்தன.
அப்போது, ஆயிரம் சூரியப்பிரகாசத்துடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் மகாலட்சுமி தோன்றினாள். அத்தனை தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்க நேராகச் சென்று மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்தாள்.
ஐராவதம், நவமணிகள், இந்திரப் பதவி என எத்தனைச் செல்வங்கள் இருப்பினும் அவை அதன் அதிபதியான மகாலட்சுமிக்கு இணையாகாது. அதே சமயம் மகாலட்சுமி என்கிற செல்வத்தை அடைந்துவிட்டால் அத்தனைச் செல்வத்தையும் பெற்றதாகி விடும். பகவான் விஷ்ணு எல்லாம் உடையவராக விளங்குவதற்கு காரணம், அவர் ‘ஸ்ரீ”யாகிய மகாலட்சுமியை உடையவராக இருக்கிறார்.
தேவனும் தேவனாகிறான்
மகாலட்சுமியின் தொடர்பினால்தான் தேவனும் தேவனாகிறான் என்கிறது வேதம். ஆழ்வாரும், “திருவில்லாத் தேவரைத் தேறேன் மின் தேவு”- வைணவ மரபில் வெறும் நாரணன் கிடையாது. திருநாரணன்தான். திருமால் தான். திருவடிதான்.
கூரத்தாழ்வான் ஸ்ரீஸ்தவம் என்றொரு நூலை இயற்றியிருக்கிறார். அதில் அவர் அறுதியிடுகிறார்.
“மகாலட்சுமித்தாயே! உன் மகிமையும் பெருமையும் குணங்களும் கருணையும் உன் கணவனான எல்லாம் அறிந்த பகவானுக்கும் தெரியாது. அவ்வளவு ஏன் உன்னாலும் உன் பெருமை அறிய முடியாது!” மகாலஷ்மி மகோன்னதங்களை அளிப்பவள்.
திருவிளக்கின் ஜோதியே ஸ்ரீமகாலட்சுமி
ஸ்ரீமகாலட்சுமித்தாயார் எப்போதும் தனியாக இருப்பதில்லை. எப்போதும் எம்பெருமானோடு சேர்ந்தே இருக்கிறாள். தீபலட்சுமி என்று போற்றுதல் உண்டு. தீபத்தில் மகாலட்சுமியை ஆவாஹணம் செய்து பூஜிப்பதால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, புத்திரப்பேறு, தைர்யம், தனம், தான்யம், சுகம், இன்பம், அறிவு, அழகு, கௌரவம், அறம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய நீங்காத செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால், மகாலட்சுமியைத் தனியாக வழிபடக் கூடாது. விஷ்ணுவோடு சேர்த்தே வழிபடவேண்டும். இதற்கு எளிய வழி திருவிளக்கு பூஜையே ஆகும். எரியும் திருவிளக்கு மஹாவிஷ்ணு. திருவிளக்கின் ஜோதியே ஸ்ரீமகாலட்சுமி.