

சர்வம் சிவமயம் என்பார்கள் சிலர். சிலரோ சர்வம் சக்திமயம் என்பார்கள். இந்த சர்ச்சை திருவிளையாடல் காலம்தொட்டே இருந்துவருவதுதான். சிவமும் சக்தியும் ஒருமையே என்பதை பாரதிய வித்யா பவனில், பரதநாட்டியத்தின் வழிநின்று விளக்கினார் பிருந்தா செல்வராஜ்.
தனஞ்ஜெயன்-சாந்தா தம்பதியிடம் நடனம் பயின்ற பிருந்தா, பொறியியல் பட்டதாரி, சோழமண்டல ஓவியர், வீணை வித்வாம்சினி எனப் பல திறமைகளை தன்னுள் கொண்டிருக்கிறார். இவருடைய தந்தை செல்வராஜிடமும், மாயா வினயனிடமும் தொடக்கத்தில் பரதம் கற்றார். பரதகலாஞ்சலி நாட்டியப் பள்ளி நடத்திய ராம நாடகம், ஐக்கிய பரதம், மௌனக் குரல், தியாகராஜ வைபவம் போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்ததன் மூலம் தன்னுடைய நாட்டியத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
நாட்டிய குருமார்களின் வழிநடத்துதலோடு கணவரும் பரதநாட்டியக் கலைஞருமான வெங்கடகிருஷ்ணனின் நட்டுவாங்கமும், முரளி பார்த்தசாரதியின் பாட்டும், வேதகிருஷ்ண ராமின் மிருதங்கமும், அனந்தநாராயணனின் வீணை இசையும், தேவராஜின் புல்லாங்குழல் இசையும், கணேசனின் தம்புரா ஸ்ருதியும் பிருந்தாவின் நாட்டியத்தைச் சிறந்த காட்சி அனுபவமாக்கின.
பவம் பவானி
``பிரபஞ்ச தோற்றத்திற்கு மூலமான சிவமே எழுச்சி நிலையில் சக்தியாகவும் இருப்பு நிலையில் சிவனாகவும், சிவமும் சக்தியும் இணைந்து செயல்படும் தருணங்களில் பஞ்ச பூதங்களாகவும், பஞ்ச பூதக் கூட்டு இயக்கமே பேரியக்க அண்டமாகவும் உருமாறின. பஞ்ச பூதங்களின் எழுச்சி நிலையில் சிவமும் சக்தியும் ஒலி, ஒளி, சுவை, மனமாக உணர்ச்சி நிலையாகவும் மாறின. நான் யார் என்ற சிந்தனையில் ஆராய்ந்திட முதலில் மனமாகவும், பின்பு மனதிற்கு மூலமான உயிராகவும், உயிருக்கு மூலமான சிவமாகவும் உள்ளது. அகம்பாவத்தினால் தோற்றமே என்றிருத்தல், பேரறிவில் சிந்திக்க, நலிவில்லா மெய்ப்பொருள் சிவமே நானாக உள்ளதை உணர்ந்து முழுமை பெற்றேன் என்பதே `பவம் பவானி’ என்பதற்கான அர்த்தம்’’ என்றார் பிருந்தா. அந்த சிவசக்தி தத்துவமே அன்றைய நிகழ்ச்சிக்கு அடிநாதமாக விளங்கியது.
காட்சியாகிய இறைப் பிரேமை
தஞ்சை நால்வரால் எழுதப்பட்ட சாகித்யத்துக்கு குரு தனஞ்ஜெயன் அளித்த நடன அமைப்பை நிருத்யோபஹாரமாக வழங்கினார் பிருந்தா. தியாகராஜப் பெருமான் மீது தான் கொண்ட காதல், அதைத் தோழியிடம் விவரிக்கும் நாயகி, பிரிவுத் துயரை இனியும் தாங்க முடியாது என்பதைத் தோழியிடம் எடுத்துரைக்கும் பாங்கு, என இறைவனின் மீதான ஈர்ப்பை வெகு நளினமாக வெளிப்படுத்தினார் பிருந்தார்.
நீயே கதி ஈஸ்வரி
முத்துசுவாமி தீட்சிதர், தஞ்சை நால்வர், வேதாத்ரி மகரிஷி ஆகியோரின் வரிசையில் வெகுஜன ரசிகர்களுக்கும் பக்தர்களுக்கும் மிகவும் பரிச்சயமான திரைப் பாடலாசிரியர் மருதகாசியின் `நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி’ பாடலுக்கு பிருந்தா அபிநயம் பிடித்தது, ரசிகர்கள் நிகழ்ச்சியோடு மிகவும் நெருக்கமாவதற்கு உதவியது. இறுதியாக சிந்துபைரவி ராகத்தில் வெங்கடகிருஷ்ணன் அமைத்திருந்த தில்லானா விறுவிறுப்பாக இருந்தது.