

ஜூலை 10: ஆனித் திருமஞ்சனம்
சிவன் கோயில் என்றாலே விநாயகரை வணங்கி, கோயிலின் உள்ளே செல்வது வழக்கம். விநாயகர் சிந்தனைக் கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகர் பல திருப்பெயர்கள் தாங்கி சிதம்பரம் கோயிலில் வீற்றிருக்கிறார். முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அவர்கள் திருநாமத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார் என்பது நம்பிக்கை.
பொள்ளாப் பிள்ளையார்
சிதம்பரம் கோயிலுக்குள் திருமுறைச் சுவடிகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையார் காட்டிக் கொடுத்ததாகக் கூறுவர். பொல்லாப் பிள்ளையார் என்று சொல்வது சரியல்ல. பொள்ளா என்றால் உளியால் பொள்ளப்படாதவர், சுயம்பு என்று அர்த்தம். எனவே பொள்ளாப் பிள்ளையார் எனக் கூறுவதே சரியானது. அத்திருப்பெயர் மருவி பொல்லாப் பிள்ளையார் ஆகிவிட்டது.
மூலவரை தரிசிக்கும் முறை
கோயில்களில் உள்ள அனைத்துச் சன்னிதிகளையும் தரிசித்து, பின்னர் அம்பாளைத் தரிசித்து, கடைசியாகத்தான் மூலவர் சிவனைத் தரிசிக்க வேண்டும். நேராகச் சிவனைத் தரிசித்து, அம்பாளைத் தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது. எனவே இத்திருகோயிகளில் உள்ள நவக்கிரக சன்னிதி, பதஞ்சலி சன்னிதி, கம்பத்து இளையனார் சன்னிதி ஆகிய சன்னிதிகளை வணங்க வேண்டும்.
திருக்கோயில் சிறப்பு
தங்களது பக்தியால் அறுபத்து மூவர் என்று சிறப்பு பெற்றவர்களுள், முக்கியமானவர்கள் நால்வர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்நால்வர் என்பது சிவனடியார்களுக்குத் தெரிந்ததுதான். இவர்கள் நால்வரும் இத்திருத்தல நாயகன் திருமூல நாதர் மீதும், உமையாம்பிகை மீதும் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.
கூத்தன் கோயில்
இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோயில் என்ற திருநாமமும் உண்டு. தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தில்லைக் கூத்தன் கோயில் என்றும் அழைக்கப்படும் கோயில். `சித்` என்ற ஞானத்தையும், அம்பரம் என்ற ஆகாயத்தையும் குறிப்பதால் சிதம்பரம் என்பார்கள். அதனால் சிதம்பரம் தில்லைக் கூத்தன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றே அழைக்கப்பட்டது. இதுவே பூலோகக் கைலாயம்.
தீர்த்தங்கள்
சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் எனத் தீர்த்தங்கள் பல.
மானியங்கள்
சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விஜயநகர அரசுகளால் அவர்கள் ஆண்ட காலங்களில் மானியங்கள் வழங்கப்பட்டன. இம்மன்னர் ஆட்சி காலங்களில் கோயில் புனரமைப்புகளும் நிகழ்ந்துள்ளன.
முனிவர்கள்
சிதம்பரம் என்னும் இத்திருத்தல சிவ பெருமான் திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரால் வணங்கப்பட்டவர் ஆவார்.
கோயிலும் கோபுரமும்
திசை நான்கிலும் கோபுரங்கள் கொண்டு, நாற்பது ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். கிழக்குக் கோபுரத்தில் சிவனின் நூற்றியெட்டு பரதநாட்டிய முத்திரைகள் கொண்ட சிலைகள் உள்ளன.
பஞ்ச சபை
சபைகளுக்கும் இக்கோயிலில் குறைவில்லை. அவை மொத்தம் ஐந்து. மூலவர் குடி கொண்ட இடம் கனக சபை. கனகம் என்றாலே பொன்தான். ஆனாலும் பராந்தகச் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டதால் பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு
கோயில் அமைப்பும், மனிதர்களின் உடலமைப்பும் ஒன்றென எண்ணத்தக்க வகையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மனித உடல் அன்ன மயம், பிராண மயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்னும் ஐந்து ஆதாரங்களைக் கொண்டது.
அதைப் போலவே சிதம்பரம் கோயிலும் ஐந்து சுற்றுப் பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப் பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம் அமைந்துள்ளதுபோல இது இருக்கிறது என்கிறது தல புராணம்.
கோயில் அதிசயம்
மனித உடலைப்போல அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையை கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளது.
அதிசய அபிஷேகங்கள்
இக்கோயிலில் ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் விசேஷமாக நடைபெறும். சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலை அபிஷேகம். ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் ராஜ சபையில் அதிகாலை அபிஷேகம்.
ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலை அபிஷேகம். புரட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலை அபிஷேகம். மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜ சபையில் அதிகாலை அபிஷேகம். மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலை அபிஷேகம். தமிழகத்தில் நடராஜர் கோயில் கொண்டுள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகப் பிரியன் சிவன் என்பது உலகப் பிரசித்தி.