

மெய்ஞானி ஷாகியின் நண்பரான எக்ஸா, தனது வீட்டுக்கு வந்திருந்த நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்: பூமியிலேயே அழகான ஒலி என்று எதைக் கூறுவீர்கள்?
புல்லாங்குழலின் ஒலி என்று சொன்னார் ஒரு நண்பர். பறவையின் பாடல் என்றொரு இன்னொருவர். பெண்ணின் குரல் என்றார் மூன்றாமவர். அவர்கள் நள்ளிரவுவரை விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்களால் ஒரு முடிவுக்கு வரவே இயலவில்லை.
சில நாட்களுக்குப் பின்னர் ஷாகி, எக்ஸாவையும் சில நண்பர்களையும் தனது வீட்டுக்கு இரவு உணவுக்கு அழைத்திருந்தார். சிறந்த இசைக் கலைஞர்கள் சிலரை அழைத்து அவர்களை அடுத்த அறையிலிருந்து பாடச் சொல்லித் தன் நண்பர்களைக் கேட்கச் செய்தார். அவர்களும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் இரவு உணவு பகிரப்படவேயில்லை. நள்ளிரவு ஆகிவிட்டது. விருந்தினர்கள் எல்லாருக்கும் கடும்பசி வந்திருந்தது. ஷாகி, அப்போது அருமையான விருந்து உணவுகளை அறைக்கு எடுத்து வர ஏற்பாடு செய்தார்.
“மணிக்கணக்காக உணவு ஏதுமின்றி இருந்த பிறகு, பீங்கான் தட்டுகள் எழுப்பும் ஓசை எத்தனை தெய்வீகமாக இருக்கிறது” என்று வியந்து கூறினார். “இந்த உலகின் மிக எழிலார்ந்த ஒலி எது என்று நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னுடைய எளிய பதில் இது” என்றார் ஷாகி.
“நாம் விரும்பும் பெண்ணின் குரலாக இருக்கலாம்; பறவைகளின் பாடலாக இருக்கலாம், தட்டுகள் எழுப்பும் ஓசையாக இருக்கலாம்; நேசத்துக்குரியவர் உறங்கும்போது எழுப்பும் மூச்சொலியாக இருக்கலாம்; சரியான சமயத்தில் இதயம் எதைக் கேட்க விரும்புகிறதோ அதுதான் இந்த உலகிலேயே அழகான இசை” என்றார் ஷாகி.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்குப் பிடித்த எழுத்தாளர் பாவ்லோ கொய்யோ. புகழ்பெற்ற பாடகி மடோனா வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் இவரது எழுத்துகள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான வாசகர்களால் பின் தொடரப்படுபவை. ஆன்மிகத் தேடல் கொண்ட இளம் தலைமுறை வாசகர்களுக்கு இவரது கதைகள் நம்பிக்கையைத் தருகின்றன. பிரேசில் நாட்டைச் சேர்ந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளரான பாவ்லோ கொய்லோவின் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை இது. >http://paulocoelhoblog.com)