Published : 11 Mar 2014 02:29 PM
Last Updated : 11 Mar 2014 02:29 PM

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 19-ல் நடைபெறுகிறது

புகழ்பெற்ற குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப் பெருமான் திருக்கோயிலுக்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 19-ல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம்தவத்திரு பொன்னம்பல அடிகளாரைபரம்பரை அறங்கா வலராகக் கொண்டது குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில். இத்திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தற்போது 11 புதிய கான்கிரீட் மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மலையேறும் பக்தர்கள் வசதிக்காக மலையின் இரண்டு பக்கங்களிலும் எவர்சில்வர் கைப்பிடிகளும், மலையில் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறிச் செல்ல பெஞ்ச் வசதிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. கோயில் திறக்கப்படாத நேரங்களில் பக்தர்கள் தங்கி இளைப்பாறிக் கொள்ள மலையோரத்தில் பூங்காக்கள் இரண்டும் கழிப்பறைகளும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மார்ச் 16-ம் தேதி (பங்குனி 2) ஞாயிற்றுகிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 19-ம் தேதி புதன்கிழமை காலை வரை ஆறு காலங்களாக, நான்கு நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

அருள்தரு சண்முகநாதப் பெருமானுக்கு 33 யாகக் குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 12 யாகக் குண்டங்களும் ஆகமொத்தம் 45 யாகக் குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலையாக அமைக்கப்பட்டு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

19-ம் தேதி காலை 7.15 மணிக்கு திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு கோயிலுக்குச் சென்று காலை 9.30 மணிக்கு விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெறும். காலை 10 மணிக்கு மூலவர் சன்னதிக்கு திருக்குட நன்னீராட்டும், மாலை மகா அபிஷேகமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x