Last Updated : 09 Oct, 2014 11:45 AM

 

Published : 09 Oct 2014 11:45 AM
Last Updated : 09 Oct 2014 11:45 AM

தத்துவ விசாரம்: நிதர்சனத்தை ஏற்பதா வேண்டாமா?

மாயை எப்படி வந்தது, ஏன் வந்தது? எப்போது வந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

மாயை அஞ்ஞானத்தால் வந்தது என்று அத்வைத ஞானிகள் சொல்கிறார்கள். அஞ்ஞானம் எப்படி வந்தது? மாயையால் வந்தது. சொல்லப்போனால் அஞ்ஞானமும் மாயையும் பிரிக்க முடியாத அளவில் ஒன்றுடன் ஒன்று கலந்தவை.

ஒன்றை ஒன்று உருவாக்குபவை. ஒன்று இருக்கும்வரை மற்றொன்றும் இருக்கும். ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லாமல்போகும்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. விதை காரணம், மரம் காரியம். அடி காரணம், வலி காரியம். அப்படியானால் மாயையின் காரணம் என்ன?

காரண – காரிய விதியே மாயையின் உருவாக்கம்தான். எனவே மாயை ஏன் வந்தது என்னும் கேள்வியிலும் பொருள் இல்லை என்பது அத்வைதத்தின் வாதம்.

காலமே மாயையின் கருவி

இந்த மாயை எப்போது வந்தது? இதற்குப் பதில் சொல்ல முடியாது என்கிறது அத்வைதம். எப்போது என்பது காலத்தைக் குறிக்கிறது. காலம் என்பதே கற்பிதம். காலமே மாயையின் கருவி. மாயைதான் காலத்தை உருவாக்கியது. நேற்று, இன்று, நாளை என்பதெல்லாம் மாயை. எனவே மாயை எப்போது தோன்றியது என்னும் கேள்விக்கே இடமில்லை. மாயை உருவான பிறகே காலம் உருவானது. மாயை விலகினால் காலமும் விலகும். எனவே எப்போது என்னும் கேள்வியே அர்த்தமற்றது என்கிறது அத்வைதத் தத்துவம்.

அஞ்ஞானத்தைப் போக்கத் தூய அறிவு, ஞானம் தேவை. அது வந்துவிட்டால் அஞ்ஞானமும் மாயையும் விலகும். அதுதான் உண்மையான விடுதலை என்கிறார்கள் அத்வைதிகள்.

பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின் அறியாமை என்றும் ஆதிசங்கரர் சொல்கிறார். புறவுலகம் பிரம்மம்தான். ஆனால் அதில் நாம் காணும் தோற்றங்கள், குணங்கள் ஆகியவை பொய்த் தோற்றங்கள் என்கிறார் சங்கரர்.

தூய ஞானத்தில் உதவியால் இந்தத் தோற்றங்களை விலக்கினால் அறிபவன், அறிபொருள், அறிவு ஆகிய எல்லாமே ஒன்றாகிவிடுகின்றன. மூன்றையும் பிரித்துக் காட்டுவது மாயை. மாயையை ஞானத்தால் கடந்தால் உணரப்படுவது ஒருமை.

மாயையை ஏற்காத பார்வை

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான். பேதங்கள் மேலோட்டமானவை, தற்காலிகமானவை என்பதை ஒப்புக்கொள்ளும் பலரும் மாயை என்னும் கருத்தை ஒப்புக்கொள்வதில்லை. அதாவது, அத்வைதத்தை (ஒருமைத் தத்துவம்) ஏற்பவர்களில் பலரும் மாயாவாதத்தை ஏற்பதில்லை.

“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்னும் கவிதையில் மாயாவாதத்துக்கு எதிரான வாதங்களை முன்வைக்கும் பாரதியார் அடிப்படையில் அத்வைதத்தை ஏற்பவர். ஆனால் காண்பதெல்லாம் மாயை என்பதை அவர் ஏற்கவில்லை.

இந்த உலகம், உலகில் நாம் காணும் வித்தியாசங்கள் ஆகியவை ஒரே சக்தியின் மாறுபட்ட தோற்றங்கள் என்பதைப் பலரும் ஏற்கிறார்கள். ஒருமைத் தத்துவத்தின் சாரம் அனைத்தும் அடிப்படையில் ஒன்று என்பதுதான் என்பது இவர்களின் வாதம். எல்லாம் பொய் என்பதை விடவும் எல்லாம் வேறு வேறு என்னும் தோற்றம் தற்காலிகமானது, மேலோட்டமானது என்பதை இவர்கள் நம்புகிறார்கள்.

நம்புவதா வேண்டாமா

மாயை என்பதை நம்புவதா வேண்டாமா என்பதற்குத் தெளிவான பதிலைச் சொல்லிவிட முடியாது. மாயை ஏற்பட்ட காரணம், மாயை உருவான காலம் ஆகியவற்றைப் பற்றிக் கேள்வி கேட்க முடியாது என்றும் மாயாவாதம் சொல்கிறது.

அப்படியானால் நடைமுறை வாழ்வின் அடிப்படையில் மாயை பற்றிப் பேசவும் முடியாது. அப்படி இருந்தும் இந்த உலகம் மாயை என்று சொல்வது யதார்த்தத்தைப் புறம் தள்ளும் செயலாகவே முடியும். அப்படி யதார்த்தத்தைப் புறம்தள்ளும் பார்வையின் அடிப்படையில் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதை நடைமுறை வாழ்வில் புரிந்துகொள்ளவோ நிரூபிக்கவோ முடியாது என்பதால் எல்லாம் மாயை என்று சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை என்று சிலர் வாதிருகிறார்கள்.

ஒருவர் மாயையைத் தாண்டிவிட்டாரா என்பதை அறிய வழி ஏதும் இல்லை. அவர் மாயையைத் தாண்டிவிட்டார் என்றால் அவருடைய நிலையே மாறிவிடும். இந்த “மாய” உலகின் சரி, தவறு, நிரந்தரம், தற்காலிகம் ஆகிய எல்லா பேதங்களையும் அவர் கடந்திருப்பார்.

மாயையைக் கடந்த நிலையில் அவர் சொல்வதை, மாயையைக் கடக்காத நிலையில் இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அப்படியானால் அதுபற்றிப் பேசவோ விவாதிக்கவோ முடியாது. எனவே மாயை குறித்த விவாதமே நடைமுறை சத்தியத்துக்கும் அனுபவத்துக்கும் அப்பாற்பட்டது.

மாயாவாதிகள் இந்த உலகை மாயை என்றும் பொய் என்றும் சொல்வதன் மூலம் உலகின் ஏற்றத்தாழ்வுகளை அலட்சியம் செய்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. எல்லாம் மாயை என்று ஒருவர் சொல்லிவிட்டால் அவர் எதுவுமே செய்ய வேண்டாம். எந்த அநீதிக்கும் எதிராகப் போராட வேண்டாம்.

ஆனால் பேதங்கள் அன்றாட வாழ்வின் நிதர்சனங்கள். மாயாவாதம் இந்த நிதர்சனத்தை அலட்சியப்படுத்துகிறது. எல்லாமே அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் தெரியும், மாயையைக்

கடந்தால் எல்லாமே ஒன்றாகிவிடும் என்று மாயாவாதி சொல்லக்கூடும். ஆனால் நடைமுறை அனுபவம் அதற்கு நேர் எதிரான திசையில் இருக்கும். அடித்தால் வலிக்கும். பசித்தால் அவஸ்தை ஏற்படும்.

பிரம்மமே இந்த உலகின் அடிப்படை, அதுவே அனைத்து உயிர்களின் ஆதாரம். அது நம்மால் புரிந்துகொள்ள இயலாத ஒரு காரணத்தால் பலவாக வெளிப்படுகிறது. இவற்றுக்கு அடிப்படையில் உள்ள ஒருமையை உணர்ந்து பேத எண்ணங்களையும் போக்குகளையும் களைவதே உண்மையான ஞானம் என்றும் சிலர் சொல்கிறார்கள். உலகை மாயம் என்று சொல்லாமல் வித்தியாசங்களுக்கு அடிப்பரப்பில் இருக்கும் ஒருமையைக் காண விழைபவர்கள் இவர்கள்.

உலகம் வெறும் மாயை என்பது சரியா தவறா என்று அனுபவபூர்வமாக யாரும் யாருக்கும் நிரூபிக்க முடியாது. எனவே, கண்கூடான நிஜத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையான நிஜத்தை உணரும் நிலைக்குச் செல்வதே ஆன்மிகப் பயணம் என்று ஒரு நிலைப்பாடு உள்ளது.

உலகம் மாயை என நம்புவது, நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு அடிப்படை ஒருமையைக் காண முற்படுவது - இவை இரண்டில் எது சரி என்பதற்கான பதிலை ஒவ்வொருவரும் தமது தேடலின் வழியாகவும் அனுபவத்தின் அடிப்படையிலும்தான் கண்டுகொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x