Published : 29 Jun 2017 10:19 AM
Last Updated : 29 Jun 2017 10:19 AM

கந்தன் காதல் கொண்ட மலை

அறுபடை வீடுகளில் சென்னைக்கு மிகவும் அருகில் உள்ள ஆலயம் திருத்தணிகை. சென்னையிலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழகத்தின் வடக்கு எல்லையாகத் திருவேங்கடத்தைப் பண்டைய நூல்கள் குறிப்பிட்டிருந்தாலும் தற்போது அந்தத் திக்கின் எல்லையாக விளங்கும் தலம் திருத்தணிகை. சூரனுடன் செய்த போரின் போதும் வள்ளியம்மைக்காக வேடுவர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு கோபமும் தணிந்து அமர்ந்த மலை. ‘குன்றுதோறாடல்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

மலையின் சிறப்பு

தணிகை என்ற சொல்லுக்குப் பொறுத்தல் என்ற பொருளும் உண்டு. அடியவர்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம் தணிகை. ‘திருத்தணிகை மலை மேலே குமார தேவன்’என்னும் பாடலில் பாரதியின் கற்பனை சிறகடிப்பில் திருத்தணி மிளிரும்.

ஆலயத்தின் தொன்மை

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் திருப்புகழில் 63 பாடல்களில் தணிகை வேலனைத் துதி பாடியுள்ளார். அதனால் இதன் புகழ் 600 ஆண்டுகளுக்கு முன்பே வியாபித்திருந்தது என்பது தெரிகிறது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் தமது கந்த புராணத்தில் மலைகளில் சிறந்தது தணிகையே எனவும், சிவன் கயிலையைக் காதலித்தது போலவே, முருகன் தணிகை மலையைப் பெரிதும் விரும்பி அங்கு உவகை கொண்டு வீற்றிருக்கிறார் என்றும் போற்றுகிறார். மேலும், இங்கே அபராஜித வர்மன் என்ற பல்லவ மன்னனின் கல்வெட்டும் முதலாம் பராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயத்தின் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன.

இலக்கியத்தில் திருத்தணி

அப்பர் இந்த மலையை ‘கல் மெலிந்தோங்கும் கழு நீர் குன்றம்’ என்று பாடுகிறார். இந்த ஆலயத்தில் வள்ளி இச்சா சக்தியாக விளங்குகிறார். வள்ளலார், கச்சியப்ப முனிவர் உள்ளிட்ட சான்றோர்களும் இதைப் புகழ்ந்து பாடியுள்ளார்கள். இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘ஸ்ரீ நாதாதி குருகுஹ ஜயதி ஜயதி’ என முருகனின் அருளைப் பெற்று சாகித்யங்களை இயற்றியது இங்குதான். அருணகிரியார் கந்தரலங்காரம், கந்தரந்தாதி, திருவகுப்பு ஆகிய நூல்களிலும் இந்தத் தலத்தைத் துதித்துப் பாடியுள்ளார்.

தேவர்களின் தேவன் தணிகை வேலன்

திருமால், முருகனை வழிபட்டு தாரகாசுரனால் கவரப்பட்ட சங்கு, சக்கரம் முதலியவற்றை மீண்டும் பெற்றார். ராமபிரான் இங்கு முருகனை வணங்கி தசகண்டனை வெல்லும் ஆற்றலையும் அவனை வென்ற பிறகு முருகனை மீண்டும் பூசித்து சிவஞானமும் பெற்றார். பிரம்மனும் கலைமகளும் இத்தலத்தில் முருகனை வழிபட்டு அருள் பெற்றனர். மும்மூர்த்திகளும் வழிபட்டு உயர்ந்த வரலாற்றுக் குறிப்பைத் திருப்புகழில் ‘சிலை மகள் நாயன்’ (261) என்ற பாடலில் காணலாம். இந்திராதி தேவர்களும் அகத்தியர், வசிஷ்டர் போன்ற ரிஷிகளும் முருகனை வழிபட்டு ஈடிலா ஞானத்தையும் பெற்ற தலம் இது.

ஞான சக்திதரன்

திருத்தணியில் முருகன், லிங்கம் அமைத்துத் தந்தையை வழிபட்டு ஞான சக்தி எனும் வேற்படையைப் பெற்ற ஞான சக்திதரனாகக் காட்சி அளிக்கிறார். இதன் மூலம் சிவன், குமார லிங்கம், குமாரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இவரின் சன்னிதி உட்பிரகாரத்தில் உள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்ய குமாரக் கடவுள் வரவழைத்த தீர்த்தமே சரவணப் பொய்கை என்ற தல தீர்த்தம்.

வாகனமான ஐராவதம்

ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் உமா மகேஸ்வரரின் சன்னிதியும் மேற்கில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் சன்னிதியும் உள்ளன. கொடிக் கம்பத்தின் அடியில் ஐராவதம் நிற்கும். இதுதான் இங்கு முருகனின் வாகனம்.

கிழக்கு முகம் நோக்கும் ஐராவதம்

திருத்தணி வேலனை நோக்காமல் ஐராவதம் கிழக்கு நோக்கி இருக்கும். முருகன்-தெய்வானை திருமணத்தின்போது இந்திரனால் மகளுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டதாம் இந்த யானை. ஐராவதம் சென்றதால் இந்திரனின் ஐஸ்வர்யம் குறைந்தது. இதனால் கவலையுற்ற இந்திரன், முருகனிடம் முறையிட்டார். கருணா மூர்த்தியான முருகன், ஐராவதத்தைத் திருப்பி எடுத்துச் செல்லும்படி அருளினார். ஆனால், சீதனமாகக் கொடுத்ததைத் திரும்பப் பெற மனமில்லாத இந்திரன், ஐராவதத்தின் பார்வை தன் இருப்பிடத்தை நோக்கி இருந்தாலே போதும் என்று கூறினாராம். அப்படியே ஆகட்டும் என்று முருகன் அருள, ஐராவதம் கிழக்கு நோக்கி, இந்திரப்பட்டினம் நோக்கி உள்ளதாக ஐதீகம்.

ஆலயத்தின் நான்காவது பிரகாரத்தில் மூலவர் குடி கொண்டுள்ளார். ஞானசக்திதரராகச் சித்தரிக்கப்படும் சுப்ரமணியரும் இவரே. அவருடைய இயல்பான 16 வடிவங்களுள் ஒன்று இது. வலது கையில் வேலுடன், மற்ற கை தொடையின் மீது கீழ் நோக்கி தொங்க விடப்பட்டுள்ள நிலையில் அருள் பாலிக்கிறார் முருகன். அவருடைய சன்னிதிக்கு இரு புறத்திலும் வள்ளி, தெய்வானைக்குத் தனித் தனி சன்னிதிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x