

கத்தி முனையின் கூர்மையை ஒத்த வாதங்கள், மூளையைக் கொதிக்க வைக்கும் தருக்கங்கள், நூல்கள், குருமார்கள், புண்ணியத் தலங்கள் எனத் தேடி அலையும் சாதகங்கள், கடுந்தவங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் கடவுளை நேரடியாகவும் எளிமையாகவும் அணுக உதவுபவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். அவரது வாழ்வும் வாக்கும், மனித வாழ்வின் ஆகப் பெரிய தேடலான கடவுளைக் குறித்த தேடலை மிக எளிமையானதாகவும் ஆழமானதாகவும் மாற்றும் வல்லமை படைத்தவை.
குழந்தையின் எளிமையுடனும் மாசற்ற தன்மையுடனும் கடவுளை அணுகும் அதிசயமே ராமகிருஷ்ணரின் ஆன்மிகம். அவர் கூறும் கதைகளும் அவர் முன்வைக்கும் சிந்தனைகளும் நேரடியான, எளிய தளத்தில் ஒரு பொருளையும் ஆழமான தளத்தில் முற்றிலும் வேறொரு பொருளையும் தரக்கூடியவை.
மிகச் சிக்கலான கேள்விகளுக்கும் மிக எளிமையாக மிகச் சரியான பதிலைக் கூறும் மந்திரச் சொற்களைத் தந்தவர் ராமகிருஷ்ணர். உலக வாழ்க்கையில் ஈடுபடும்போது உலக பந்தங்களிலிருந்து விடுபட முடியவில்லையே என்று கேட்டால், எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழத்தை உரித்தால் பிசுக்கு ஒட்டாது. அதுபோலவே ஈஸ்வர சிந்தனையை மனதில் கொண்டு செயல்களில் ஈடுபட்டால் பந்தங்கள் ஒட்டாது என்பார்.
அறிவின் மகத்துவத்தைப் பறைசாற்றும் ஆசான்களுக்கு மத்தியில் அறிவின் சுமையைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் ஆன்மிகம் ராமகிருஷ்ணருடையது. அறியாமை என்னும் முள்ளை எடுக்க அறிவு என்னும் முள் தேவை. ஆனால் வேலை முடிந்ததும் இந்த முள்ளையும் தூக்கிப் போட்டுவிட வேண்டும் என்று அவர் சொல்வது ஆழமான பொருள் கொண்டது. ஒவ்வொரு முறையும் புதுப்புதுப் பொருள்கள் தந்து நமது ஆன்மிகப் பார்வையை விசாலமடையச் செய்யும் அவரது அமுத மொழிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
• சேற்று மீன் சேற்றினுள் புதையுண்டு கிடக்கிறது. ஆயினும் அம்மீன் மீது சேறு படிவது கிடையாது. அதே பாங்கில் மனிதன் உலகில் வாழ வேண்டும். ஆனால் உலகப் பற்றினுள் அவன் தோய்ந்துபோய்விடக் கூடாது.
• வெண்ணையை உருக்கும்போது, அது சடபுட என்று சத்தமிடுகிறது.
முற்றிலும் உருகி நெய் ஆனபின் அதன் ஓசை நின்றுவிடுகிறது.
பிறகு, அதில் பொரிப்பதற்கு ஏதாவது மாவு உண்டையைப் போட்டால், அது மீண்டும் சத்தமிடுகிறது.
மாவுண்டை முழுவதும் பொரிந்த பின் சத்தம் அடங்கிவிடுகிறது.
உருகுகிற வெண்ணை, ஓலமிடுவதற்கு ஒப்பான ஞான விசாரம்.
விசாரித்துத் தெளிந்த பின், பேச்சு நின்றுவிடுகிறது.
அப்படித் தெளிந்த ஞானி, மற்றொரு மனிதனுக்கு ஞானோபதேசம் செய்யும்போது, மீண்டும் பேச வேண்டியதாகிறது.
• மனம் எனும் பாலானது, உலகம் எனும் நீரில் கலந்துவிடும்.
மனதை, ஏகாந்தத்தில் நிலை நிறுத்தி, பக்தி எனும் வெண்ணையைக் கடைய வேண்டும்.
பிறகு, அதை உலக வாழ்வு எனும் நீரில் வைத்தால்,அதில் கலக்காமல், மிதக்கும்.
எனவே முதலில், பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.