

எல்லாம் வல்ல இறைவன் இப்பிரபஞ்சத்தில் மிகப்பெரிதினும் மிகப்பெரியவனாகியும், மிகமிகச் சிறியதைக் காட்டிலும் நுண்ணியனாகவும் உள்ளதையும் ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட மணிவாசகர், தம்முடைய அனுபவக் காட்சியை அற்புதமான அறிவியல் சொல் வளமையால் நமக்கு விளக்குகின்றார். இறையருளால் இறைக்காட்சி வசப்பட்டதன் விளைவாக, இறைவனும், தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்திலுள்ள (Ever-Expanding Universe with innumerable Galaxies), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவ மிகப்பெரிய பெருங்கோள்களும், உள்ளும் புறமுமாக ஒரே நேரத்தில் அவர் கண்களுக்குப் புலப்பட்டதால், இரண்டையும் ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தும் மணிவாசகரின் அறிவியல் சொல்லாடல்கள் நம்மை மீளமுடியாத வியப்பில் ஆழ்த்துகின்றன.
இயற்பியலைக் கடந்த விண்பகுதியும் மாயையும்
நாம் காணும் மாபெரும் கோள்கள், அண்டப்பேரொலியின் விளைவாகக் காணும் பருப்பொருளாக உருவாகும் முன்பு, எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமும் உடைய காணஇயலாத நுண்ணிய(சூக்கும) நிலையில், இயற்பியல் விதிகளுக்கு உட்படாத பகுதியாக இருந்தது. இத்தகைய காணஇயலாத அனைத்திற்கும் தோற்றுவாயான நுண்ணிய(சூக்கும)ப் பகுதியை ‘மாயை’ என்று சைவசித்தாந்தம் கூறும். மாயை என்னும் மூலப்பொருளில், அணு நிலைக்கு முற்பட்ட, இயற்பியல் விதிகளுக்கு உட்படாத, காணவியலாத, இத்தகைய பகுதிகளும் கருந்துளைகளும் எப்போதும் உள்ளன.
கோள்கள் ஒன்றினையொன்று மோதிக்கொள்ளாமல், அவையவற்றின் நியமப்பாதையில் இயற்பியல் விதிகளின்படி இயங்கும் பிரபஞ்சப்பகுதியை ‘அண்டம்’ என்று சொல்லாமல் ‘அண்டப்பகுதி’ என்று மிகச் சரியாகப் பெயரிட்டு அழைக்கும் மணிவாசகரின் நுண்ணறிவு அபாரம். அவர் இறைவனிடம் பெற்ற ‘வாலறிவு’ என்னும் முற்றறிவைக் கண்டு வியந்தல்லவா போகிறோம் நாம்! காணும் நிலையில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பெரிய மாபெரும் கோள்கள், இறைவனை ஒப்பிடும்போது, சிறிய அணுக்கள் போன்று காட்சியளிப்பதால், இறைவன் மிகப்பெரியவன் என்று நிறுவுகிறார் மணிவாசகர்.
நுண்மையிலும் நுண்ணியனான இறைவனின் தரிசனம்
இனி, பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.
வேதியன் தொகையுடன் மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து
எறியது வளியில்
கொட்கப் பெயர்க்கும் குழகன்; – திருவாசகம்:அண்டப்பகுதி-7-12
1968 முதல் 1995 வரை ஹுபலே, ஸ்டீவன் ஹாக்கின்ஸ், ரோகர் பென்ரோஸ், எல்லிஸ், டேவிட் சிரம் போன்ற அறிவியலாளர் கண்டுபிடிப்புகளால் அனைத்துக் கோள்களும், விண்மீன்களும் அவைகளின் காலமுடிவில் காணஇயலாத பழைய நுண்ணிய நிலையை மீண்டும் அடையும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டது. பரமாணு என்னும் கடவுள்துகள்(God Particle) குறித்த கோட்பாடும் பெறப்பட்டுவிட்டது.
கோள்களும், விண்மீன்களும் தோற்றத்திற்கு வருவதும், இயற்பியல் விதிகளின்படி அவை இயங்குவதும், அவைகளில் உயிர்கள் உடல்வாழ்வுக்குத் தோன்றுவதும், வாழ்வதும், பின் மடிவதும், ஊழிக்காலமுடிவில் அக்கோள்களும், விண்மீன்களும் மீண்டும் அழிவதுமான பிரபஞ்சச் சுழற்சியை (தோற்றநிலையிலிருந்து காணஇயலாத நுண்ணியநிலை அடைதல்), இறைக்காட்சி கிட்டிய மாணிக்கவாசகர் அருமையாக விவரித்துள்ளார். நான்முகன், படைத்தலையும், திருமால் காத்தலையும் செய்கின்றனர். கணக்கிலடங்காத உலகங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளமையால், நான்முகர்கள் பலரும், திருமால்கள் பலரும் உள்ளனர் என்கின்றார் மணிவாசகர்.
நூறு கோடி பிரமர்கள் நுங்கினர்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே! – திருமுறை:5:100-3
என்று தேவாரத்தில் இச்செய்தியை அப்பர் பெருமான் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஊழிக்காலத்தில் அனைத்தும் இறைவனிடத்தில் ஒடுங்குதல்
பெரும் எண்ணிக்கையிலான பிரமர்களும், அவர்கள் கூட்டத்திற்குத் தலைவரான திருமாலும், அவர்கள் செய்யும் படைத்தலும், காத்தலும் ஒருசேர முடிவுக்கு வரும் மகாப் பேரூழிக் காலமும், பேரூழிக்கால நீக்கமும், மீண்டும் பிரமர்களையும், திருமால்களையும் தானே படைத்து, அவர்கள் மூலம் படைத்தலும், காத்தலும் செய்தல் என மாறி,மாறிச் சுழலச் சுழற்றும் குழகன்(இளையோன்) என்று இறைவனின் நிலைத்த, நுண்ணிய, எல்லையற்ற ஆற்றலை விவரிக்கிறார் மணிவாசகர். இரவு, பகல் போன்ற கால தத்துவத்துக்கு உட்படாத இறைவன் என்றும் மாறாத இளமை நிலை உடையவன் என்பதால், ஊழிக்காலத்தில் பிரமர்களையும், கூட்டத் தலைவரான திருமால்களையும் அழிக்கும்(நீக்கும்) சிவபெருமானே, மீண்டும் அவர்களைப் படைப்பவராகவும் உள்ளார்; இதையே, ‘மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்’ என்று கூறுகின்றார் பெருமான்.
ஊழிக்காலச் சூறைக்காற்றை சிவபெருமானுக்கும், அண்டப்பகுதியில் உள்ள ‘பிரமர்கள், திருமால்கள், உயிர்கள், உலகங்கள் அனைத்தையும் வளி என்னும் சிறுகாற்றுக்கும் உதாரணமாகச் சொல்லி, நீக்கமும், படைப்பும் இவ்வாறே மாறிமாறிச் சுழன்று வருகிறது என அற்புதமாக விளக்குகிறார் பெருமான். இங்கு, சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து எறியது வளி என்பதில் சூறைக்காற்று நுண்பொருள்,(சூக்கம்), வளி என்னும் சிறுகாற்று பருப்பொருள்(தூலம்).
நுண்பொருளாகிய காற்றே பருப்பொருளாகிய காற்றாலையை இயக்கி மின்சக்தியை உற்பத்தி செய்கின்றது; எனவே, காற்று, மின்சக்தி போன்ற நுண்பொருட்களே பெரிய இயந்திரங்களை இயக்குகின்றன என்பது விளங்கும்.
கோள்களும், அண்டங்களும் தூலம் என்னும் பருமை பொருட்களாதலால், அவைகளைப் படைத்தும், காத்தும் வரும் தலைவர்களான பிரமர்களும், திருமால்களும் நுண்ணிய உயிர்களாக உள்ளனர் என்பது தெளிவு. நுண்ணிய உயிர்களான பிரமர்களையும், திருமால்களையும் தன்னுள் ஒடுக்கும் சங்கார இறைவன், அவர்களிலும் நுண்ணியன்; எனவே, இறைவனே நுண்மைக்கெல்லாம் நுண்ணியன் (nano of all nanos) என்கிறார் பெருமான். (புரைய – போல, கொட்கல்-சுழலல், குழகன்-இளையோன், சூறை மாருதம்-சூறைக்காற்று, வளி-சிறுகாற்று)
சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் நமக்குத் தந்த மணிவாசகர் இறைவனைக் காண மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் விவரித்து, அவற்றால் இறைவனைக் காண முடிந்ததா என்பதற்கான விடையையும் கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் காண்போம்.
தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)