

அருள்மிகு கூடலழகப் பெருமாள் சன்னிதியின் வடக்கிலும், தெற்கிலும் நீண்ட திருச்சுற்று மதிலும், மேற்கே சற்றே குறைவான அளவில் திருச்சுற்று மதிலும், கிழக்கே ராசகோபுரத்துடன்கூடிய திருச்சுற்று மதிலும் அமைந்துள்ளன. மேலும் தெற்கு, மேற்கு, வடக்குப் பாகங்களில் திருச்சுற்று மேடை மண்டபத்துடன் விளங்குகிறது.
பொதுவாக கோயில் கட்டிடக் கலையில் பிரதான சன்னிதியின் கருவறை பாகங்களான அதிஸ்டானம், பித்தி எனப்படும் சுவர் பாகம், பிரஸ்தரம் எனப்படும் கூரைப் பகுதி, கிரீவம் என்னும் கழுத்துப் பகுதி, சிகரம், ஸ்தூபி ஆகிய அங்கங்களைச் சேர்த்து விமானம் என்று வழங்கப்படும். பொதுமக்கள் கருவறையின் மேல் உள்ள சிகரம் மற்றும் ஸ்தூபியையே விமானம் என்று வழிபடுவர். கோயில் கட்டிடக் கலையின் சிறப்பை விவரிக்கும்போது கூட சிகரத்தையும் ஸ்தூபியையும் விமானம் என்று விளக்கிக் கூறுவர்.
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் பெருமாள் சன்னிதியின் கருவறைக்கு மேல் இரண்டு தளங்கள் உள்ளன. கருவறையில் தேவி, பூதேவி சமேத கூடலழகரும், அதன் மேலுள்ள முதல் தளத்தில் தேவிகளுடன் சூரிய நாராயணரும், இரண்டாம் தளத்தில் தேவிகளுடன் பள்ளிகொண்ட பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். கருவறையின் ஆறு அங்கங்களுடன் அதன் மேலுள்ள இரு தளங்களையும் சேர்த்து அஷ்டாங்க விமானம் என்று வழங்குவர்.
கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அருள்மிகு கூடலழகப் பெருமாள் சன்னிதி விளங்குகிறது. இவை அனைத்தும் தரையிலிருந்து உயர்ந்த நிலையில் அமைந்துள்ளன.
அருள்மிகு கூடலழகர் திருக்கோவில் மதுரை;
முனைவர் பி.ஆர்.நரசிம்ஹன்; விஷ்ணு பதிப்பகம்,
நிர்மால்யம், 10-சி, கிழக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை 625009.