Last Updated : 20 Mar, 2014 09:00 PM

 

Published : 20 Mar 2014 09:00 PM
Last Updated : 20 Mar 2014 09:00 PM

பைபிள் கதைகள்: கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்

விவசாயி ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான். சில விதைகள் பாதையில் சிந்தின. பறவைகள் வந்து அவற்றைப் புசித்தன.

சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன. அந்த விதைகளில் ஒன்றிரண்டு பாறையின் மேல் முளைத்தாலும் அங்கே ஈரம் இல்லாததினால் அவை உலர்ந்து வீணாயின. சில விதைகள் முள் அதிகம் உள்ள இடங்களில் விழுந்தன. முள் கூட்டத்திடையே விழுந்த அந்த விதைகள் முட்களால் நெருக்கி அடிக்கப்பட்டு வீணாயின.

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்துப் பலன் கொடுத்தன. விதைகளில் மாற்றமில்லை. அவை விழும் இடத்தைப் பொறுத்துத்தான் அவற்றின் பலன் இருக்கிறது. விதை தேவனுடைய வசனம். சிலர் போகிற போக்கில் வசனத்தைக் கேட்கிறார்கள். வழியருகே விதைக்கப்பட்ட விதைகளைப் போன்றது இது. கேட்டவற்றைப் பாதுகாத்து வளப்படுத்தும் வழியும் வசதியும் அவர்களுக்கு இல்லை. வழியில் விதைத்த விதைகளைப் போல தேவனின் வசனங்கள் வீணாகின்றன.

ஈரமற்ற நெஞ்சம் கொண்டவர்கள் காதில் விழும் வசனங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதை முழுமையாக உள்வாங்கும் திறன் அவர்களுக்கு இல்லை. எனவே அந்த வசங்கள் அவர்கள் மனங்களில் வேர்கொள்வதில்லை. சோதனைக் காலங்களில் உதவும் அளவுக்கு வளருவதில்லை. பல்வேறு ஆசாபாசங்களில் சிக்கியிருக்கும் மனிதர்கள் கேட்கும் நல்ல வசனங்கள் முள் உள்ள இடங்களில் விதைக்கப்பட்ட விதைகள் சிக்கித் திணறுவதைப் போலச் சிக்கிச் சீரழிகின்றன. அவர்களுக்கும் அது பயன்படுவதில்லை.

பக்குவமான மனம் கொண்டவர்களுக்குச் சொல்லப்பட்ட வசனம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் போன்றவை. நல்ல நிலம் விதையை நன்கு வளர்த்தெடுத்துப் பலன் தருவதுபோல இவர்கள் வசனங்களின் பலனை முழுமையாக அடைவதுடன் பிறருக்கும் பலன் தருகிறார்கள்.



லூக்கா 8:5-15

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x