

உணர்ச்சியை வென்ற ஞானிகளையே பரமஹம்சர் என்று குறிப்பிடுவார்கள். பரம என்றால் மிக உயர்ந்த என அர்த்தம். ஹம்சம் என்றால் அன்னப்பறவை.
தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தாலும், பாலை மட்டும் பருகும் இயல்பு கொண்ட பறவை எனச் சொல்வார்கள். அதுபோல, உலகில் நன்மையும் தீமையும் கலந்து இருந்தாலும், நல்லதை மட்டும் சிந்திக்கும் ஞானிகளையே பரமஹம்சர் என்கின்றனர்.
ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க 1884-ம் ஆண்டு விவேகானந்தர், தட்சிணேசுவரம் வந்திருந்தார். அங்கே மடத்தில் பரமஹம்சர் தன் சீடர்கள் சூழ ஓர் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது பரமஹம்சர் சில ஆன்மிகத் தத்துவங்களை தனது சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
மூன்று விதிகள்
கெளரங்கரின் தாத்பரியத்தை விரிவாகக் கூறத் தொடங்கினார். “இந்த வைணவ மதம் தனது மதப் பற்றாளர்களை மூன்று விஷயங்கள் கடைபிடிக்க நிர்பந்திக்கிறது. ஒன்று பகவான் நாமாவளியை உச்சரித்து அனுபவிக்கச் சொல்கிறது. இரண்டாவதாக, அனைத்து உயிரினங்களின் மீதும் கருணையுடன் இருக்கச் சொல்கிறது.
மூன்றாவது, வைணவத் தொண்டனுக்கு செய்யும் சேவை அந்த நாராயணனுக்கு செய்யும் சேவை” எனும் வகையிலான கருத்துக்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது “அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்” என்ற வாக்கியத்தை உச்சரித்ததும், மோன நிலையில் தியானத்தில் ஆழமாக போய் சமாதி நிலைக்கு போய்விட்டார்.
மீண்டும் சுயநினைவு வந்தவுடன், “உயிரினங்கள் மீது கருணை! முட்டாள்! மண்ணில் தவழும் அற்பப் புழுவான உன்னால் எப்படி அடுத்தவர் மீது கருணை காட்ட முடியும்? நிச்சயம் முடியாது. கருணை என்ன கருணை? தொண்டு செய்! இறைவனின் சொரூபமாய் விளங்கும் சக மனிதனுக்குச் செய்யும் தொண்டு அந்த ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு” என்று அவர் உபதேசித்தார்.
விவேகானந்தரின் தெளிவு
பரமஹம்சரின் கருத்துகளைச் சுற்றிலும் இருந்த சீடர்கள் காதில் வாங்கிக் கொண்டாலும், அந்த உண்மையான அர்த்தத்தை விவேகானந்தர் ஒருவரே உள்வாங்கிக் கொண்டார். அறையை விட்டு வெளியே வந்த விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்:
“குருவின் வார்த்தைகளில் எத்தனை சிறந்ததொரு ஒளி? வேதாந்த சாரத்திற்கு ஈடாக பக்தியை எவ்வளவு அழகாகச் சமன்படுத்தினார். வறட்டு வேதாந்தம் இல்லை. அதீத ஆன்மிகம் இல்லை. என்ன ஒரு அற்புதமும் இயல்பும் நிறைந்த இனிய சித்தாந்தம்! வேதாந்தம் என்பது ஏதோ வெளியில் சுற்றித் திரியும் சந்நியாசிகளுக்கு மட்டுமன்று. இல்லறத்திலும் கடைப்பிடிக்கலாம்.
வேதாந்தத்தின் சாரம் நமது அன்றாட அலுவல்களுடன் ஒன்று கலந்தது. எந்த நிலையில் இருந்தாலும் ஆண்டவன்தான் தன்னையும் படைத்து மனித உயிர்களையும் படைத்தவன் என்ற தெளிவு ஒரு மனிதனுக்கு இருந்தால் போதும் இறைவன் எங்கும் நிறைந்தவன். அதே நேரம் காட்சிக்கு அப்பாற்பட்டவன். அவனே அனைத்துமாக விளங்குபவன்.
நமது பிரேமையின், பக்தியின், கருணையின் வடிவம். இருப்பினும் அவன் அவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவன். இறைவன் சர்வ வியாபி என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால் மற்ற உயிரினங்கள் மீது அசூயையோ, பச்சாதாபமோ ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி ஓர் ஆன்மீக மலர்ச்சி ஏற்பட்டுவிட்டால், இருப்பு, அறிவு, பேரின்பம் இவை அனைத்துமே இறைத் தோற்றமாய் விளங்கும் சக மானிட சேவைக்காக என்பது விளங்கிவிடும்.
பின் அவனுக்கு ஓர் லட்சிய இலக்கை அடைவது எளிதாகிவிடும். இறைவனின் சித்தம் இதுவெனில், என்றாவது ஒரு நாள் இப்பெரிய மானுட சமூகத்திற்கு இதை நான் தெளிவாகப் புரியவைப்பேன்” என்றார்.
ராமகிருஷ்ணரின் வார்த்தைகளே விவேகானந்தரின் செயல்களாக வெளிப்பட்டன.