ஆலயம் ஆயிரம்: பன்றிக்குட்டிகளுக்கு இரங்கிய முருகன்

ஆலயம் ஆயிரம்: பன்றிக்குட்டிகளுக்கு இரங்கிய முருகன்
Updated on
1 min read

பெரியகுளம் நகரின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தேனி மாவட்டத்தில் உள்ளதிலேயே பரப்பளவில் பெரிய கோவில் ஆகும். எனவே இத்திருத்தலம் “பெரியகோவில்” என்றே இப்பகுதியினரால் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமையையும் பெற்றுள்ளது. இங்கு மூலவரான ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி அம்பாள் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. இதுதவிர வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் காட்சி தருவது தனிச்சிறப்புக்குரியது.

பெரியகுளம் பகுதியை ஆண்ட மன்னரான ராஜேந்திர சோழன் வேட்டைக்குச் செல்லும்போது குட்டிகளுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்த தாய்ப் பன்றியை அம்பெய்தி வீழ்த்தினான். கதறிய குட்டிகளின் பரிதாப நிலை கண்டு இரங்கிய முருகப் பெருமான் உடனே அவற்றிற்கு பால் புகட்டி, பசி நீக்கி அருள்பாலித்தார். முருகப்பெருமானின் பெருமையை உணர்த்தவும், தான் செய்த பாவத்திற்கு விமோசனமாகவும் இக்கோவிலை மன்னர் ராஜேந்திர சோழன் கட்டினார்.

சோழர் காலக் கட்டிடக்கலை

இக்கோவிலின் பிரகாரத்தில் நடராஜர், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஜூரதேவர், மகாவிஷ்ணு, பைரவர், சப்தகன்னிகள், ராகு, கேது ஆகியோருடன் சூரியனும், சந்திரனும் தம்பதி சமேதராக தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கிறார்கள். தூண்களில் துர்க்கை, அகோரவீரபுத்திரர், ருத்ரதாண்டவர் மற்றும் மன்மதன் ஆகியோர்களின் சிலைகள் சோழர் கால கட்டடக்கலையின் அழகியலுடன் தோற்றமளிக்கின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களும் இங்கு வீற்றிருக்கின்றனர். எனவே இந்த ஆலயத்தில் வழிபாடு செய்யும் பக்தர்கள் முழுமையான மனநிறைவைப் பெறுகின்றனர்.

கோவிலை ஒட்டியவாறு ஓடும் வராகநதி, பிரம்மதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஒருகரையில் ஆண் மருத மரமும் மறுகரையில் அதன் நேரெதிரே பெண் மருதமரமும் அமைந்திருக்கின்றன. காசிக்கு அடுத்தபடியாக இங்குதான் இவ்வாறு அமைந்திருக்கிறது. வராகநதியில் நீராடிவிட்டு இங்குள்ள முருகனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

கோவிலிலுள்ள மயில் மண்டபத்தின் மேற்புறத்தில் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களும் பதிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னிதியும் இருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அறுபதாம் கல்யாணம் என்று குறிப்பிடப்படும் சஷ்டியப்தபூர்த்தி செய்ய உகந்த தலமாகவும் உள்ளது.

சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை மற்றும் பங்குனி பிரம்மோற்சவம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவின்போது தேரோட்டமும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தற்போது இக்கோவிலில் ஐந்து நிலைகளுடன் 72 அடி உயரத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சோத்துப்பாறை அணை செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in