Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

சமத்துவ சுவாமிதோப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் சுவாமிதோப்பு. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி இந்த கிராமமே களை கட்டியிருக்கும். சுவாமிதோப்பு கோவில் விசேஷத்தின் போது மக்கள் வெள் ளத்தில் மொத்த கன்னியாகுமரி மாவட் டமும் மிதக்கும்.இந்த கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்கு அவதரித்த சுவாமி அய்யா வைகுண்டர் தான்.

தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்ற சிறந்த வாழ்வு நெறியை போதித்தவர் அவர். கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20ஆம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் என்பது ஜதீகம். அந்த நாளே அய்யா அவதார தினமாக கொண்டாடப்படுகின்றது. மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து, அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே வைகுண்ட அவதாரம் என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை.

முத்துக்குட்டி வைகுண்ட சாமியானார்!

1809ல் சுவாமி தோப்பு கிராமத் தில் பொன்னு மாடன் - வெயிலால் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெற்றோர் “முடி சூடும் பெருமாள்” எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர். முடிசூடும் பெருமாள் என்ற பெயர் ஒரு சாமானியக் குழந்தைக்கு வைக்கப்படுவதை திருவிதாங்கூர் அரசு எதிர்த்தது. அதற்குப் பிறகு அவருக்கு முத்துக்குட்டி என்று பெயர் இடப்பட்டது. முத்துக்குட்டிக்கு 22 வயதில் உடல் நலிவடைந்து நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

முத்துகுட்டியை அவரது தாய் வெயிலாலும், மனைவி திருமால்வடிவும் தொட்டில் கட்டி, அதில் படுக்க வைத்துத் திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவுக்கு தூக்கிச் சென்றனர். உணவு அருந்த வழியில் இறக்கிய போது படுத்த படுக்கையாய் இருந்த முத்துக்குட்டி எழுந்து, நடந்து திருச்செந்தூர் கடலுக்குள் சென்றார். அவரது தாய் வெயிலால் கடற்கரையிலேயே ஏக்கத்துடன் காத்திருந்தார். கடலுக்குள் சென்ற முத்துக்குட்டிக்கு திருமால் மூன்று நாள்கள் கலிகாலம் போகித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி, அனுப்பி வைத்தார். கடலில் இருந்து வெளியே வந்த வைகுண்ட சாமிகள் அவரது தாய் வெயிலாலைப் பார்த்து, “அம்மா… நான் இப்போது வைகுண்டராக வந்திருக்கிறேன்.நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்” என்றார்.

அய்யா வழிபாட்டு முறை

அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கி திருநீறால் நாமம் இட்டுக் கொள்வார்கள்.இந்த திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

சாதியம் கடந்த சமத்துவக் கிணறு

சாதிப்பாகுபாடு தலை விரித்து ஆடிய காலகட்டத்தில் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சமத்துவக் கிணறு ஏற்படுத்தினார். இந்தக் கிணறுக்கு முத்திரிக் கிணறு என்று பெயர். இந்தக் கிணற்றில் வைத்துதான் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து, தன் கையாலேயே நீராட்டி எல்லோருக்கும் பொதுவான கிணறாக மாற்றினார். அய்யா வழி பக்தர்கள் சுவாமிதோப்பு தலைமைப்பதிக்குச் செல்வதற்கு முன்பு இந்த முத்திரி கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்த கிணற்றுக்கு மரியாதை செலுத்தி விட்டுத்தான் சுவாமிதோப்பு பதிக்குள் நுழைகின்றார்.

உன்னில் இறைவனைப் பார்

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் பிரமாண்டமான நிலைக் கண்ணாடி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறன. அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதுதான். அதை குறிப்பால் உணர்த்துவதுதான் இந்த வழிபாட்டு முறை. இந்த வழிபாட்டு முறையை ஆரம்பித்து வைத்ததும் அய்யா வைகுண்டர்தான். இந்தியா முழுவதிலும் உள்ள அய்யா வழி பதிகளிலும் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகின்றது.அய்யா உண்டு என்பது இவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அய்யா வழி பதிகளில் உண்டியலுக்கு இடம் இல்லை.அன்னதானம் பதிகளில் பிரதானம்.அதற்கு தானாகவே முன் வந்து பக்தர்கள் நன்கொடை அளிக்கின்றார்கள். அனைத்து அய்யா வழி பதிகளிலும் தினசரி ஐந்து வேளை அன்னதானம் நடைபெறுகிறது. “பிச்சை எடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று” என்பதே அய்யா வைகுண்டரின் வாக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x