

இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளை மட்டும் வீடுவீடாகத் தேடிச் சென்று படுகொலை செய்யும்படி புதிய பார்வோன் மன்னன் உத்தரவிட்டான். இந்தக் கொடிய செயலால் எகிப்து தேசம், ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களின் மரண ஓலத்தால் எதிரொலித்தது.
மறைக்கப்பட்ட குழந்தை
பார்வோனின் இந்தக் கொடிய செயலால் கோபமுற்ற கடவுள், இஸ்ரவேல் மக்களைக் காக்க முடிவு செய்தார். யாக்கோபுவின் மூத்த மகன்களின் மூன்றாவது மகன் லேவியின். வம்சாவளியில் மோசேயைப் பிறக்கச் செய்தார். மோசேயின் தாய் பார்வோனின் படை வீரர்கள் கண்களில் பட்டுவிடாதவாறு குழந்தை மோசேயை மூன்று மாதங்கள் மறைத்துவைத்தாள்.
தனது குழந்தை கண்டுபிடிக்கப் பட்டால் எந்நேரமும் கொல்லப்படலாம் என்பதால் மோசேயைக் காப்பாற்ற முடிவுசெய்தாள். மிதக்கும் நாணல் தட்டைகளால் ஆன வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அழகிய கூடையைச் செய்தாள். அதற்குள் தண்ணீர் கசிந்து மூழ்கிவிடாதவாறு கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்தாள். பிறகு நைல் நதியின் கரையோரம் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள்.
குழந்தை மோசேயின் அக்கா மிரியம் சிறுமியாக இருந்தாள். அவளிடம் “நீ இங்கேயே நின்று குழந்தையை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொள்” என்று கூறிவிட்டு தூரமாகச் சென்று மறைந்துகொண்டாள். அம்மா சொன்னபடியே அங்கே காத்திருந்தாள் மிரியம்.
மன்னனின் மகள் வந்தாள்
அப்போது பார்வோன் மன்னனின் மகளும் நாட்டின் இளவரசியுமானவள் நதியில் நீராடுவதற்காகத் தனது பணிப்பெண்களோடு அங்கே வந்தாள். உயர்ந்த நாணல் புற்களிடையே மிதந்துகொண்டிருந்த கூடை அவளது கண்களில் பட்டது. திறந்த நிலையில் இருந்த அந்தக் கூடையில் கை, கால்களை அசைத்தவாறு ஜொலித்துக்கொண்டிருந்த குழந்தை மோசேயைக் கண்டாள். உடனடியாகக் கூடையை எடுத்து வருமாறு தனது ஊழியக்காரியைப் பணித்தாள். வியப்புடன் குழந்தையை அருகில் கண்ட அவள், அதனருகில் மண்டியிட்டு அதை ஆச்சரியத்துடன் கவனித்தாள்.
அழுது கொண்டிருந்த குழந்தை மோசே, இளவரசியைக் கண்டு சிரித்தது. மழலைக் குரலில் அவளை நோக்கிக் குரல் எழுப்பியது. இளவரசி அதற்காக மனமிரங்கினாள். குனிந்து தன் விரலை நீட்டியதும், அக்குழந்தை அவளது விரலைப் பற்றிக்கொண்டது. அக்கணமே அது தனக்கான குழந்தை என்ற முடிவுக்கு வந்தாள். “இத்தனை அழகான ஆண் குழந்தையா? இதை கடவுள் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்” என்றாள். அது இஸ்ரவேலர் இனத்தைச் சேர்ந்த குழந்தை என்பதை அவள் கண்டதுமே தெரிந்துகொண்டாலும் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விரும்பி அதனைத் தன்னுடன் அரண்மனைக்கு எடுத்துச் செல்ல விரும்பினாள்.
பெற்றவளே பேணிக் காப்பவள் ஆனாள்
தனது தம்பியைச் சாவிலிருந்து கடவுள் மீட்டுவிட்டதை அறிந்து மனம் நிறைந்த சிறுமி மிரியம், இளவரசியின் அருகில் ஓடி வந்து, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா? “ என்றாள்.
இளவரசியும், “ சரியான யோசனை தந்தாய். தயவுசெய்து அப்படிப்பட்ட ஒரு பெண்ணை உடனே அழைத்து வா” என்றாள். துள்ளிக் குதித்து ஓடிய மிரியம் தூரத்தில் மறைந்திருந்த தன் தாயிடம் நடந்தவற்றை எடுத்துகூறி தாயையே இளவரசிக்கான பணிப்பெண்ணாக அழைத்துவந்தாள். மோசேயின் தாயைக் கண்ட இளவரசி, “குழந்தையை எடுத்துசென்று எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உன்னைப் பணியில் அமர்த்துகிறேன்” என்றாள்.
குழந்தை வளர்ந்தது. அதைத் தன் சொந்த மகனாகவே ஏற்றுக் கொண்ட இளவரசி, தண்ணீரிலிருந்து அவனைக் கண்டெடுத்ததால் மோசே என்று பெயரிட்டாள்.
சொந்த ரத்தங்களுக்காகத் துடித்த இதயம்
மோசே இளைஞர் ஆனார். அரண்மனையில் வளர்ந்தாலும் தாமொரு இஸ்ரவேலன் என்பதையும் தனது தாய்மொழி எபிரேயம் (ஹீப்ரூ) என்பதையும் உணர்ந்துகொண்டார். தனது சொந்த உறவுகளாகிய இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதையும் எகிப்தியருக்காகக் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டார். இதனால் அவர் மனம் கொதித்தது. விடுதலை உணர்ச்சி அவருக்குள் பொங்கியது. அப்போது ஒரு சம்பவம் அவர் கண் முன்னால் நடந்தது.
இஸ்ரவேல் அடிமை ஒருவனை, எகிப்திய மனிதன் ஒருவன் கண்மூடித் தனமாக அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். இந்தக் காட்சியைக் கண்டு வெகுண்ட மோசே, சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டார். பின் மோசே, அந்த எகிப்தியனைக் கொன்று, அந்த இடத்திலேயே மண்ணில் புதைத்தார். இதற்குச் சாட்சியாக இருந்த இஸ்ரவேலர்கள் பலரும் மோசேயை நம்பிக்கையுடன் நோக்கினார்கள்.
ஆனால் எகிப்தியனை மோசே கொன்ற நிகழ்ச்சியை பார்வோன் மன்னன் தெரிந்துகொண்டார். அதற்காக மோசே அஞ்சினார். அவர் அஞ்சியதுபோலவே ஆனது. மோசேயைக் கொல்ல மன்னன் முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து தப்பி ஓடிய மோசே, எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி மீதியான் நாட்டிற்குச் சென்றார்.
(மோசேயின் கதை தொடரும்)