

108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசமாக சென்னைக்கு அருகே உள்ள திருவிடந்தை விளங்குகிறது. இத்திவ்ய தேசம் திருமங்கை ஆழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
மூலவர் தன் திருநாமத்திலேயே நித்ய கல்யாணப் பெயரைக் கொண்டுள்ளதால், திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். மன்னன் ஒருவனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கவே திருவிடந்தையில் பெருமாள் எழுந்தருளினார் என்கிறது ஒரு புராணக் கதை.
மேகநாதன் என்ற மன்னனின் மகன் பலி திரேதா யுகத்தில் சிறப்பாக அரசாட்சி புரிந்து வந்தான். அவனது படைகள் எட்டுத் திக்கும் சென்று ஜெய பேரிகை கொட்டும் வல்லமை பெற்றவை. மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், தேவர்களைப் போரிட்டு வெல்ல விரும்புவதாகவும், அதற்கு உதவி புரியுமாறும் அவனை வேண்டினர். பலி மறுத்துவிட்டான்.
அரக்கர்கள் தேவர்களுடன் போரிட்டுத் தோற்றுத் திரும்பினர். பின்னர் பலியிடமே மீண்டும் வந்து உதவி கேட்டனர். இம்முறை இதற்குச் சம்மதித்த பலி வெற்றிக் கனியைப் பறித்து அரக்கர்களுக்கு அளித்தான். தேவர்களுடன் போரிட்ட காரணத்தினால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது.
இத்தோஷம் நீங்கத் தற்போது உள்ள திருவிடந்தையில் தவமிருந்தான். தவத்தினை மெச்சிய விஷ்ணு, வராக ரூபத்தில் காட்சி கொடுத்தார். பலியின் தோஷம் நீங்க அவனது விருப்பத்தை அடுத்து பெருமாள் திருவிடந்தையிலேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் முனிவரொருவரும், அவரது பெண்ணும் சொர்க்கம் அடையத் தவம் இருந்தனர். இதில் முனிவரின் பெண் முதலில் சொர்க்கம் அடையத் தகுதி பெற்றார். அவர் திருமணமாகாத பெண் என்பதால் சொர்க்கம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
நாரதர் பூலோகத்தில் இருந்த முனி புங்கவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டினார். காலவ ரிஷி என்ற முனிவர் அவளை மணந்துகொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குத் திருமண வயது வந்த பின் முனிவர் நாராயாணனையே அப்பெண்களை மணக்குமாறு வேண்டினார்.
நாராயணன் ஒரு அழகிய இளைஞன் வடிவத்தில் பூலோகம் வந்தார். அந்த இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் 360 நாட்களும் பிரம்மசாரியாகவே வந்து அப்பெண்களை மணம் புரிந்தான். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒன்றாக்கி அப்பெண்ணிற்கு அகிலவல்லி நாச்சியார் என பெயரிட்டு தன் சுய ரூபமாக வராக ரூபத்தைக் காட்டினார். இந்த பெண்களில் முதல் பெண்ணின் பெயர் கோமளவல்லி. இவருக்கு இத்திருத்தலத்தில் தனிச் சந்நதி உள்ளது.
தினமும் கல்யாணம் பண்ணிக்கொண்டதால் திருவிடந்தையில் இப்பெருமாளுக்கு நித்ய கல்யாண பெருமாள் என்பது திருநாமம். 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
வராக பெருமாள் தனது ஒரு திருவடியை பூமியில் ஊன்றி நின்கிறார். இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலைமீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைத் தாங்கி வராக மூர்த்தியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார்.
இப்பெருமாளை வணங்கினால் திருஷ்டி தோஷம், ராகு கேது தோஷம், சுக்ர தோஷம், திருமணத் தடை ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம்.