

கடக ராசி வாசகர்களே
ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற போக்கு மாறும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தைப் புரிந்து கொள்வார்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
18.12.2017 வரை சனி பகவான் 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டி வரும். தாய்மாமன் வகையில் செலவுகள் இருக்கும். சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 19.12.2017 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம்பெற்று அமர்வதனால் பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக்கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
குரு பகவானின் போக்கு சரியில்லாததால் சுபச் செலவுகளும், திடீர்ப் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதப்படுத்த வேண்டாம். வாகனத்தைக் கொஞ்சம் கவனமாக இயக்குங்கள்.
ஆனால் 14.02.2018 முதல் 13.04.2018 வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-வது வீட்டிலே அமர்வதனால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்குக் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.
26.7.2017 வரை ராகு 2-லும், கேது 8-லும் தொடர்வதால் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு கூச்சல் குழப்பங்கள் வந்து போகும். என்றாலும் ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். விபத்துக்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீடு, வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 27.7.2017 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதனால் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
பண வரவு அதிகரிக்கும். என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவினங்கள் துரத்தும். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். சொத்துப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புது வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல் வரும். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை வாய்ப்பும் தேடி வரும். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும்.
பெண்களுக்கு: 18.12.2017 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 19.12.2017 முதல் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள். விலகி நின்ற சொந்த பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். இந்த ஆண்டு முழுக்க குரு சாதகமாக இல்லாததால் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டிவரும். வீடு, வாகனங்களின் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். மாமியார், சில நேரங்களில் குறை கூறினாலும் மனசுக்குள் உங்களைப் புகழ்வார்.
கீழ் வரும் இப்பாடலைக் காமாட்சியம்மன் முன் அமர்ந்து தினந்தோறும் ஒன்பது முறை படித்து தியானம் செய்யுங்கள். கவலைகள் தீரும்.
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
- பாதச் சிலம்பி னொலியும்,
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் ;
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் ,
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்,
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்,
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
சிம்ம ராசி வாசகர்களே
ஊராரின் தூற்றல்களுக்குச் செவி சாய்க்காமல் வாழ்வின் உயரத்தை மட்டும் நோக்கிச் செல்லும் குணமுடையவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் புதுப் பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். ஏமாந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்க வேண்டி வரும்.
18.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலேயே தொடர்வதால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். தாய்வழிச் சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 19.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால் தாயாரின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும்.
26.7.2017 வரை ராகு உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் இடம், பொருள், ஏவல் அறிந்து பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள். 26.7.2017 வரை கேது, 7-ல் அமர்ந்திருப்பதால் பிரச்சினைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். அரசு காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.
நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ல் வந்து அமர்வதால் சுபசெலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கேது 6ல் அமர்வதனால் குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உடல்நலம் சீராகும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும்.
1.9.2017 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். உங்கள் முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை நவீனப்படுத்துவீர்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆனால் 02.9.2017 முதல் 13.2.2018 வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவான் 3-ல் அமர்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. அசைவ மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 14.02.2018 முதல் 13.4.2018 வரை குருபகவான் 4-ல் அமர்வதால் காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தாய் வழி உறவுகளால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.
பெண்களுக்கு: ஆகஸ்ட் மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் கணவருடன் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மாமனார், மாமியார், நாத்தனாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். ஜுலை 27-ம் தேதி முதல் கேது சாதகமாவதால் அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மச்சினருக்குத் திருமணம் முடியும். இந்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் சமையலறைச் சாதனங்கள் பழுதாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகள் மீது உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.
நடராசப் பத்து எனும் இப்பாடலை சிவபெருமானின் முன் அமர்ந்து தினந்தோறும் ஒன்பது முறை படித்து தியானம் செய்யுங்கள்.நினைப்பது நிறைவேறும்.
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
கன்னி ராசி வாசகர்களே
மனத்திற்குச் சரியெனத் தோன்றுவதை திட்டவட்டமாகச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்களே! இந்த ஆண்டு பிறக்கும்போது சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பழைய வாகனத்தை மாற்றிப் புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து, ஜென்ம குருவாகத் தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்க்கப் பாருங்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளைச் சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் 13.02.2018 வரை குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.
சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பம் விலகும். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்துவந்த ஆரோக்கியக் குறைவு சீராகும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு அதிசாரத்திலும், வக்கிர கதியிலும் சென்று 3-ல் அமர்வதால் பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. யாரையும் அநாவசியமாக வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வெளியிடங்களிலும் நிதானமாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது.
சனி பகவான் 18.12.2017 வரை உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் தொடர்வதால் அனுபவ அறிவைப் பயன்படுத்திச் சில பிரச்சினைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்குப் பழைய சொத்தை விற்பீர்கள். 19.12.2017 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எந்தச் சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்ப்பது நல்லது.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகு அமர்ந்திருப்பதனால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். கூடாப் பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 26.7.2017 வரை கேது உங்கள் ராசிக்கு 6-ல் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் நண்பராவார்கள்.
வழக்குகள் சாதகமாகும். ஆனால் 27.7.2017 வரை ராகு, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் தன்னம்பிக்கையும் பண வரவும் அதிகரிக்கும். வீண் செலவுகளும் குறையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆனால் 27.7.2017 வரை கேது 5-ல் அமர்வதால் பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் உண்டு. அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அதற்கேற்பப் புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப்போகும் மனப்பக்குவம் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு தன வீடான இரண்டாம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பல நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு இனி வேலை கிடைக்கும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.
புதியவர்கள் அறிமுகமாவார்கள். சிரித்துப் பேசி சிற்றுண்டி சாப்பிட மட்டும் இருந்த வி.ஐ.பி நட்பை இனி சரியாக பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்தலெல்லாம் போதும், இனி களத்தில் நேரடியாக குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
பெண்களுக்கு: ஆகஸ்ட் வரை குரு ராசிக்குள் இருப்பதால் கணவருடன் கொஞ்சம் மோதலும் வரும். நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஜுலை 27-ம் தேதி முதல் ராகு சாதகமாவதால் கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாமியார், மாமனார் வகையில் உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.
நம்மாழ்வார் அருளிய இப்பாடலைப் பெருமாள் படத்திற்கு முன் அமர்ந்து தினந்தோறும் ஆறு முறை படித்து தியானம் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.