Last Updated : 11 May, 2017 10:54 AM

 

Published : 11 May 2017 10:54 AM
Last Updated : 11 May 2017 10:54 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 28: பசு பாசம் என்னும் உலகப்பற்று

“பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளி” என்று இறைவனின் கருணையைப் போற்றுகிறார் மணிவாசகர். பசு என்றால் உயிர்; “பசுபாசம்” என்பது உயிரைப் பிடித்துள்ள உலகப்பற்று. விலங்குகளின் பசுபாசம், இனப்பெருக்கம் செய்யவும், குட்டிகள் வளர்ந்து, அவைகளின் தேவையை அவைகளே பார்த்துக்கொள்ளும் வரை மட்டுமே உள்ளன. அதனால், அனைத்து விலங்குகளும் தங்களின் தேவைக்குத் தாங்களே உழைக்கின்றன. சொத்துப்பாசம், பணப்பாசம், உறவுப்பாசம், சாதிப்பாசம், இனப்பாசம், மொழிப்பாசம், மதப்பாசம் போன்ற தளை(பாசங்)கள் விலங்குகளுக்கில்லை. மனிதனே இப்பாசங்களால் துயரமடைகின்றான்; ஆயினும், மனிதனே இறைவனின் கருணையையும் உணரவல்லவன்.

பசுபாசத்தால் உருவாகும் வேடிக்கை மனிதர்கள்

பசுபாசமாம் உலகப் பற்றில் சிக்கிய மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை விளக்குகிறார் பாரதியார். தினம் தேடிச் சோறு உண்ணுவது, வெட்டிக்கதைகள் பல பேசுவது, தேவை தகுதி கடந்த ஆசைகளில் மனம் வாடித் துன்பபப்படுவது, பிறரை வாட்டிக் காயப்படுத்தும் செயல்கள் பல செய்வது, இறுதியில், நரைத்து, வயதாகி, மரணமடைவது. பசுபாசத்தில் சிக்கிய மனிதர்கள் தேடிய பொருட்செல்வங்கள், அவர்களின் வாரிசுகளுக்கு உழைப்பில்லாமல் கிடைப்பதால், பல வேடிக்கை மனிதர்கள் உருவாகின்றனர்.

தேடிச்சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக வுழன்று - பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவமெய்தி - கொடும்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

(மகாகவி பாரதியார்)

வேடிக்கை மனிதன் ஒருவன் இறந்தால், சுற்றத்தார் என்ன செய்வார்கள்?

இறந்தவுடன் மறக்கப்படும் மனிதன்!

ஊரையே கூட்டி, உரக்க அழுவார்கள்; இறந்தவன் பெயரை நீக்கிப் பிணம் என்று பெயரிடுவார்கள்; அப்பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று சுட்டு எரித்துவிட்டு, நீரினில் மூழ்கிக் குளித்துவிட்டு, அவனை ஒரேயடியாக மறந்துவிடுவார்கள் என்கிறார் திருமூலர்.

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பெயர் இட்டுச்

சூரையங் காட்டு இடைக் கொண்டு போய் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!

(திருமந்திரம் :189)

முதலாளியின் பெயரைச் சொல்லமாட்டோம் என்று போலி மரியாதை காட்டி, கூழைக் கும்பிடு போடும் அடிவருடிகள், முதலாளி இறந்ததும், “பொணத்தை எப்போ எடுப்பீங்க?” என்று கூசாமல் கேட்பார்கள். வாரிசுகளோ, பிணத்தை வைத்துக்கொண்டே, சொத்துப் பிரிக்கச் சண்டையிடுவார்கள். காதற்ற ஊசியைக்கூட எடுத்துச் செல்ல முடியாத உயிர், வாரிசுகளின் செயல் கண்டு, “இவர்களுக்காகவா இத்தனைக் காலம் உழைத்து, வாழ்வை வீணடித்தோம்?; கிடைத்த பிறவியில் தொண்டு செய்து, இறைவனை அடையும் அரிய வாய்ப்பைத் தொலைத்தோம்?” என்று வருந்தும். தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப, தனது அடுத்த உடல் பிறவிக்காகக் காத்துக் கிடக்கும் அவ்வுயிர். இந்நிலையிலிருந்து தம்மை இறைவன் மீட்டான் என்பதையே “பத்திமையும், (முத்திப்)பரிசும் இலாப் ‘பசுபாசம்’ அறுத்து அருளி” என்றார் மணிவாசகர்.

பசு பாசம் அன்பாக மலரவேண்டும்

பசுபாசம் என்னும் உலகப்பற்றே, ‘நான்’என்னும் வட்டத்தை விட்டு, “தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, குழந்தைகள்”, என்று பிறருக்காக வாழும் பண்பை மனிதனுக்குக் கற்றுத்தந்தது. அப்பாசம் முதிர்ந்து, அனைத்து உயிர்களுக்கும் தொண்டு செய்யும் பக்தி கலந்த இறையன்பாக மலர வேண்டும். அப்படிப்பட்டவனின் வாழ்வே, அவன் மனைவி, மக்கள், சுற்றத்தார்க்கு நல்வழி காட்டும் வாழ்வியல் நூலாகி, நல்ல சமுதாயத்தைப் படைக்கும்.

மனிதனின் தகுதியை உயர்த்த...

மனிதப் பிறவியின் நோக்கம், இல்லறக் கடமைகளை அறவழியில் நடத்தி, இறைவனுக்குத் தன் தொண்டால் பக்தி செலுத்தி, இறைவனுடன் இரண்டறக் கலக்கும் முக்திப் பரிசைப் பெறுவதே! உலகப் பொருட்களிடம் மட்டுமே பாசம் வைக்கும் (பசு)உயிர்கள், பாசத்தை இறைபக்தியாக்கி அன்பைச் செலுத்த மறக்கின்றன. இறைவன் வாழும் சகஉயிர்கள் மீது அன்பு வைத்தால் தன் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம் என்பதை மனிதன் ஏனோ உணர்ந்துகொள்வதில்லை.

பசுபாசம் அறுத்தருளி . . .

“பத்திமையும், (முத்திப்) பரிசும் இல்லாத “உலகப்பற்று என்னும் பசுபாசம்” என்னைச் சேராமல் நீக்கி அருளிய திருப்பெருந்துறைச் சிவபெருமானே! என்னை உலகவர் பித்தன் என எண்ணும்படியாக, உன்பால் எனக்கு நீங்காத அன்பைத் தோற்றுவித்து அருளிய எம்பெருமானே! என்னுடைய மனத்தை இங்கும் அங்கும் அலையவிடாமல், எனது சித்தம் என்னும் உறுதியான கயிற்றால், உன்னுடைய அழகிய பாதமலர்களை என்னைக் கொண்டு கட்டுவித்து அருளிய வித்தகப் பெருமானே! உன் கருணையை என்னென்பது! உனது திருவிளையாடலை விளங்கித் தோன்றும் இத்தில்லையம்பலத்தே கண்டுகொண்டேன்!” என்று பக்திப் பிழம்பானார் மணிவாசகர்.

பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி!

பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து! பேராமே,

சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த!

வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!

(திருவாசகம்:31:7)

பசுபாசம் நீங்கி, தன்னிடம் கொண்ட அன்பால் பித்தனாக மாறிய மணிவாசகரின் உள் புகுந்தான் இறைவன்; அண்ட பேரண்டங்கள் யாவையும் கடந்து, யாராலும் காண இயலாத தன் திருவடிக் காட்சியை மணிவாசகர் காணுமாறு தந்தான்.

திருப்பாதம் கட்டுவித்த பேரருள்

அன்பில் உருகிய இறைவன் தாமாகவே முன்வந்து, மணிவாசகரின் சித்தம் என்னும் திண்கயிற்றால், தனது திருவடிகளைக் கட்டிப்போட அருள்செய்து, ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினான் என்பதை, “கட்டுவித்த” என்ற சொல்லால் உணர்த்துகிறார் மணிவாசகர்.

“சித்தமென்னும் திண்கயிற்றால்” என்னும் திருவாசகத் தமிழ், பரந்தாமன் திருவடிகளைப் பரமஞானி சகாதேவன் கட்டிய நிகழ்வை, வில்லிபுத்தூராரின் சொல்லாட்சியில் தமிழ்க் காவியமாக்கிற்று. வில்லிபாரதத்தில், பாரதப் போரைத் தவிர்க்க கண்ணபிரானைத் தூது செல்லத் தருமன் வேண்ட, பாண்டவர் ஐவரின் கருத்தையும் கேட்டான் பரந்தாமன். தருமன் சமாதானம் வேண்ட பீமன், அர்ஜுனன், நகுலன் ஆகியோர் போர் வேண்டினர். பரந்தாமனை உணர்ந்த பரமஞானியான சகாதேவனோ, “இடையர் குடியில் வளர்ந்த திருமாலே! உன் திருவுளக் கருத்து எதுவோ, அதுவே என் கருத்தும்” என்றான். “வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே! (திருவாசகம்-33:6)” என்னும் திருவாசகத் தமிழை வில்லிபாரதத்தில் சுவைக்கிறோம்.

அன்பால் பரந்தாமனைக் கட்டிய சகாதேவன்

மற்றவர்கள் முன் பேசினால் காரியம் கெடும் என்று சகாதேவனைத் தனியே அழைத்துச் சென்ற கண்ணன், “சகாதேவா! போர் நிகழாதிருக்க முடிந்தால் வழி சொல்!” என்றான்; “கண்ணா! போரை நிறுத்த வேண்டுமானால், கர்ணனை நாட்டை ஆளச்செய்து, பார்த்தனைக் கொன்று, பாஞ்சாலியின் கூந்தலைக் களைந்து, பீமன் காலில் விலங்கிட்டு, கைபிடித்து உன்னையும் நான் கட்டினால், பாரதப் போரைத் தடுக்கலாம்” எனப் பக்தியோடு விடை சொன்னான் சகாதேவன். “நீ கூறிய மற்றவற்றை முடித்தாலும், என்னை எவ்வாறு கட்டுவாய்?” என்று வியந்தான் பரந்தாமன். “உன் வடிவை நீ காட்டினால், உன்னை நான் கட்டுகிறேன்” எனப் பணிவோடு சொன்னான் சகாதேவன்.

சகாதேவன் அன்பின் ஆற்றலை உலகுக்குணர்த்த, பார்க்குமிடமெங்கும் பரந்தாமனேயாக விஸ்வரூபம் எடுத்து எண்ணற்ற வடிவு கொள்கிறான் உலகளந்த பெருமான்! விஸ்வரூப-மூலத்தை உணர்ந்த சகாதேவனின் சித்தமாம் திண்கயிற்றால், தன் திருவடிகளைச் சிக்கெனக் கட்டுவதற்கு அருளினான்; சகாதேவன் கண் களிக்க முன் நின்று, “பற்றிய பாதம் விடுக” என்று இறைஞ்சினான் பரந்தாமன் என்கிறார் வில்லிபுத்தூரார். “பாரதப் போரில் ஐவரையும் காத்தருள்க!” என்று வேண்டி, “ஓம்” எனும் வரம்தந்த கண்ணனை விடுவித்தான் சகாதேவன்.

அன்பர்கள் சிலர், 'நாயேன், 'நாயினும் கடையேன்', 'ஊர் நாயின் கடையானேன்' என்னும் சொற்கள் வரும் பல திருவாசகப் பாடல்களைப் பாடச் சங்கடப்படுவதாகத் தெரிவித்தனர். ஐயம் தெளிவிக்கும் மணிவாசக விளக்கம் அடுத்த வாரம் துளிர்க்கும்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x