ஆன்மிகச் சுற்றுலா: கிருஷ்ணா நதியில் கயிலைநாதன் - ஸ்ரீசைலம்

ஆன்மிகச் சுற்றுலா: கிருஷ்ணா நதியில் கயிலைநாதன் - ஸ்ரீசைலம்

Published on

மலை முகட்டில் ஒரு சிவ ஸ்தலம். அதிகாலை வேளைகளில் கோபுரத்தைத் தழுவும் குளிர் தென்றல். சுற்றிலும் அடர்ந்த காடுகள். பின்னணியில் அருமையான மலைத்தொடர். பள்ளத்தாக்கில் பாதாள கங்கை என்றழைக்கப்படும் கிருஷ்ணா நதி சலசலக்கிறது. இதைவிட கயிலைநாதனுக்கு ஏதுவான உறைவிடம் வேறு இருக்க முடியுமா? அதுவே ஸ்ரீசைலம்.

கர்னூல் மாவட்டத்தில் அதம்கூர் தாலுக்காவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்திலுள்ள அந்தத் தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. 18 சக்தி பீடங்களில் ஒன்றும் இங்கேதான் அமைந்துள்ளது. மூர்த்தியான மல்லிகார்ஜுன ஸ்வாமியும் மகா சக்தியான பிரம்மராம்பிகையும் ஒரே கோவிலில் குடியிருப்பதுதான் இந்தத் தலத்தின் சிறப்பு. இரண்டும் சுயம்பு லிங்கங்கள் ஆகும்.

புராணங்களில் இந்த க்ஷேத்திரம் பூமியின் கைலாசம் புகழப்பட்ட இலை கைலாசம்’ என்றும் அழைக்கப்பட்டது. பல விதமான தானங்கள் செய்வதாலும் , 2000 தடவை கங்கையில் நீராடுவதாலும் , பல வருடங்கள் தவம் இருப்பதாலும், காசியில் லட்ச வருடங்கள் வாழ்வதாலும் ஏற்படும் புண்ணியம் ஸ்ரீ சைலநாதரைத் தரிசிப்பதால் கிட்டுகிறது என்கிறது கந்த புராணம். இத்தலம் திரேதா யுகத்தில் இரண்யகசிபு பூஜை செய்த ஆலயமாக இருந்துள்ளது. திரேதா யுகத்தில் ராமபிரானும், பின் துவாபர யுகத்தில் பாண்டவர்கள் பூஜை செய்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார்களாம். அந்த லிங்கங்கள் இன்றும் பக்தர்களால் வழிபடப்பட்டுவருகின்றன.

இந்தத் தலம் பூமிக்கு மத்திய ஸ்தானம் (நாபி) என்றும் புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள் உற்சவ காலங்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கங்களுக்குத் தாங்களே அபிஷேகமும் செய்யலாம். பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, ருத்ர கிரி ஆகிய பர்வதங்களுக்கு பாதாபிஷேகம் செய்யும் கிருஷ்ணா நதி , வட திசைப் பக்கமாக ஓடி இந்தத் தலத்தைப் புனிதமடையச் செய்கிறது.

18 புராணங்களில் மட்டுமல்லாது மகாபாரதம், ராமாயணம் முதலான இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்ட இந்த தலத்தை பற்றி கந்த புராணத்தில் ஸ்ரீ சைல காண்டம் முழுமையாக விவரிக்கிறது. ஆதி சங்கரர் இங்கே தவம் செய்து சிவானந்த லஹரி என்ற நூலை இயற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய ' யோகா தாராவளி' என்ற நூலில் இந்தத் தளத்தில் குகைகளில் தான் முக்தி அடைய வேண்டும் என்று கூறுகிறார். ஸ்ரீ ராகவேந்திரர், சித்த நாகர்ஜுனா உட்படப் பல மகான்கள் இந்த தலத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

பத்து தோள்கள் கொண்ட லட்சுமி கணபதி

சுமார் 2,80,000 சதுர அடிகள் பிரம்மாண்டமான ஆலய வளாகத்தைச் சுற்றிலும் 20 அடிகள் உயரமும் 2121 அடிகள் நீளமும் உள்ள கோட்டைச் சுவர் போன்ற பிராகாரம் உள்ளது. இப்பிராகாரச் சுவரில் பொருத்தப்பட்டுள்ள மொத்தம் 3153 கற்களில் கிட்டத்தட்ட அனைத்திலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எல்லா விதமான உருவங்களும், புராணங்களும், கடவுளர்களின் பிரதிமைகளும் நான்கு பக்கச் சுவர்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

சித்திரங்கள் வெளிப்புறமாக அமைந்துள்ளதால் எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஹம்பியில் உள்ள ஹஜ்ராராமா கோவிலின் பாணியில் கட்டப்பட்ட ஆலயச் சுவர் இது. அதன் நான்கு நுழைவாயில்களுக்கு மேல் கோபுரங்கள் உள்ளன. கீழை வாயில்தான் மகா துவாரம். இந்தச் சிற்பங்களில் பத்துத் தோள்களை உடைய லட்சுமி கணபதியை காண்போரைக் கவர்கிறது.

வளாகத்தின் நடுவில் உள் பிரகாரம் அமைந்துள்ளது. இதில் மண்டபங்களும்,மூலவர் மற்றும் அம்பிகையின் கோவில்கள் கிழக்கு மேற்காக ஒரே வரிசையில் அமைந்துள்ளன. சில சிறிய கோவில்களும், பாண்டவர்களின் கோவில்களும் இடம் பெற்றுள்ளன.

பாண்டவரால் நிறுவப்பட்ட லிங்கங்கள்

மூலவரின் கோவில் கீழ்த் திசை நோக்கியுள்ளது. தகதகக்கும் பொன்னால் வேயப்பட்ட கோபுரமுடைய இந்தக் கோவில் வாசலுக்குள் சென்றால் செப்புக் கொடிக்கம்பம் நம்மை வரவேற்கிறது. வெளிச் சுற்றில் ஒரு அரச மரம். அங்கு நாகர்களின் சிலைகள். தினமும் மாலை ஐந்து மணிக்கு உற்சவ மூர்த்திகளின் பவனி. கருவறையின் முன் தூண்களுடன் கூடிய அரங்கம். அங்கு சுவாமியை எதிர்கொண்டு பெரிய நந்தி. மயில்களின் செதுக்கல்கள். லிங்கம் மிகச் சிறியது. மூலவர் தலையில் பொன்னால் கவரப்பட்ட நாகம். கருவறையின் வடக்கில் , பிரகாரத்தில் பாண்டவர்களால் நிறுவப்பட்ட லிங்கங்கள், சில உபகோவில்கள். அங்கும் பக்திப் பெருக்குடன் கூடிய ’ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர ஒலி வளிமண்டலத்தை நிரப்புகிறது.

வெளிவந்த பிறகும் வேத விற்பன்னர்களின் ருத்ர , சமக உச்சாடனங்கள் காதில் கேட்கின்றன. அவ்வப்போது லிங்காஷ்டகம் காற்றில் ஒலிக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in