Last Updated : 23 Jun, 2016 12:04 PM

 

Published : 23 Jun 2016 12:04 PM
Last Updated : 23 Jun 2016 12:04 PM

திருவெள்ளியங்குடி: மயன் உருவாக்கிய கோயில்

கோலவில்லி ராமர் அழகம் பெருமாள் சம்ப்ரோக்ஷணம் ஜூன் 23

திவ்ய தேசங்களான 108 திருப்பதிகளில் ஒன்று திருவெள்ளியங்குடி. இந்த ஒரு தலத்தைத் தரிசித்தால் 108 தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது எனத் தல வரலாறு தெரிவிக்கிறது.

உற்சவருக்கு சிருங்காரசுந்தர் என்ற திருநாமம். அலங்காரம் செய்துகொண்டு சிருங்காரமாகக் காட்சியளிப்பதால் பெருமாளுக்கு இந்தத் திருநாமம் காரணப் பெயராகிறது. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

சயன கோல ராமர்

கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருநாமம் கோலவில்லி ராமர். தாயார் மரகதவல்லி.

சங்கு சக்கர கருடன்

கருடன் இந்த ஒரு தலத்திலேதான் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களை கருடனிடம் தந்து விட்டு, கோலவில்லி ராமனாகக் காட்சி தருகிறார்.

கல்வாழை

தலவிருட்சம் செவ்வாழை. இது கடினமான கல்தரையில் பிராகாரத்திலேயே இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு தார் மட்டும் தருகிறது என்பது அதிசயம்.

யுகங்கள் தோறும்

இத்தலம் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரோடு விளங்கியதாக புராணச் செய்திகள் உண்டு. கிருதயுகம் பிரம்மபுத்திரம், துவாபரயுகம் சைந்திரநகரம், திரேதாயுகம் பராசரம், கலியுகம் பார்க்கவபுரம்.

மயன் கட்டிய தலம்

புஷ்கலா வர்த்தக விமானம் என்ற அழகிய விமானம் உடைய இத்தலத்தில் அருள் பெற்றவர்கள் நான்முகன், இந்திரன், பரசுராமர். பெருமாளுக்கு அதிகமான திருக்கோயில்களை விஸ்வகர்மா (தேவதச்சன்) கட்டி வழங்கியது போல அசுரத் தச்சனான மயன், பெருமாளுக்கு இந்தத் தலத்தை நிர்மாணித்துக் கொடுத்து அருள்பெற்றான்.

சுக்கிரத் தலம்

சுக்கிரனுக்கு அருள் தந்த தலம் இது. எனவே சுக்ரபுரி எனப்படுகிறது. வாமன அவதாரத்தில் மகாபலி தானம் தந்தபோது, வண்டு உருவம் எடுத்து கமண்டலத்தில் நீர் வராது தடுத்தார் அசுர குருவான சுக்கிரன். பகவானால் தர்ப்பையால் குத்தப்பட்டு கண் இழந்தார்.

கண் இழந்த சுக்கிரன், இத்தலத்தில் பிராயச்சித்தம் தேடி அருள் பெற்றார். அதற்கு நன்றியறிதலாக இவ்வாலயத்தில் அணையா தீபமாகப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார் என்பது நம்பிக்கை. வெள்ளி (சுக்கிரன்) தவம் (குடியிருந்து) செய்த தலம் என்பதால் வெள்ளியங்குடி.

பிராயச்சித்தம்

இத்தலத்தின் அருகிலுள்ள சேங்கனூர் சண்டீசுவரர் அவதாரத்தலம், பெரியவாச்சான் பிள்ளையும் இங்குதான் அவதரித்தார். காஞ்சிப் பெரியவரும், கிருஷ்ணப்ரேமியும் இத்தலத்தில் ஈடுபாடு கொண்டு திருப்பணி செய்திருக்கின்றனர்.

கண் குறைபாடு, திருமணத் தடை, புத்திர பாக்கியக் குறைபாடுகளுக்குப் பிராயச்சித்தமாக இத்தலம் விளங்குவதாக நம்பிக்கை. பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சார்த்துவது வழக்கம்.

விழாக்கள்

ராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் இது.

செல்லும் வழி

மார்க்கண்டேய மகரிஷிக்குக் காட்சி தந்து அருள்பாலித்த இத்தலம் குடந்தை அணைக்கரை சாலையில் உள்ளது. (குடந்தை -18 கி.மீ, சோழபுரம் - 6 கி.மீ, திருப்பணந்தாள் 6 கி.மீ.).கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: (91-435, 2450118, 94433 96212)

இந்த ஆண்டு சம்ப்ரோக்ஷணம்: 23.06.2016 , வியாழக்கிழமை

நேரம்: காலை 9.30 - 10.30.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x