

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே பிறருக்குதவும் பெருந்தன்மையோடு நாணயமும் நற்பண்பும் பெற்று நவிலும் நல்லுரையும் உண்மையாகவே இருந்ததால் உண்மையாளர் என்ற பெயர் பெற்றார்.
நபிகளாரின் நற்றோழர் அபூபக்கர் சித்திக் அவர்களிடம், “நீங்கள் முஹம்மதை இறைத்தூதர் என்று எவ்வாறு உடனே ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேட்டனர். அபூபக்கர், அவ்வாய் பொய் வாயல்ல என்று முஹம்மது நபி அவர்களின் வாய் பொய்யுரைக்காது என்று புலப்படுத்தினார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய எதிரியான அபூ சுப்யானிடம், ரோமச் சக்கரவர்த்தி கேட்டார். முஹம்மது எப்பொழுதேனும் பொய்யுரைத்திருக்கிறாரா? என்ற கேள்விக்கு அபூசுப்யான், முஹம்மது பொய்யுரைத்ததே இல்லை என்றார்.
“ எப்பொழுதும் எவரிடத்தும் எப்பொய்யும் உரைக்காத முஹம்மது அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைப்பாரா?” என்ற ரோமச் சக்ரவர்த்தியின் கேள்விக்குப் பதிலளிக்க அபூசுப்யானால் முடியவில்லை.
முஹம்மது நபி அவர்களும் அவர்களின் தோழர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யுமளவிற்குக் கொடுமை புரிந்தவன். மதீனாவிற்குச் சென்ற பின்னும் தொடர்ந்து நபிகளாரோடு போர் புரிந்தவனான அபூஜஹ்ல், “ முஹம்மதே உங்களை நான் பொய்யன் என்று கூறவில்லை. உங்களின் போதனை என்னை ஈர்க்கவில்லை” என்று ஒப்புக்கொண்டான்.
நபி வழியில் நாளும் பொழுதும் உண்மையைப் பேசி உன்னதமாய் வாழவேண்டும்.