

பிரஹலாதனைப் பார்த்து ஹிரண்ய கசிபுவுக்குச் சிறிது பயம் வந்தது. பாம்புதான் பயந்து ஒடுங்கிப் படுத்துவிட்டது. விஷமாகக் கொடுப்போம் என முடிவெடுத்துக் கொடிய விஷம் கொண்ட பாம்பின் விஷத்தைக் கோப்பையில் எடுத்துக் கொடுத்தனுப்பினான். சேவகர்கள் ஒடுங்கியபடி கொடுத்த விஷத்தை, மகிழ்ச்சியோடு ஒரே மூச்சில் குடித்துவிட்டுக் கோப்பையைக் கொடுத்தான். வாங்கிக்கொண்ட சேவகர்கள், பிரஹலாதன் முகம் நீலம் பாரிப்பதைக் கண்டு கலங்கினாலும் தமக்குப் பதவி உயர்வும் பொன்னும் பொருளும் நிச்சம் என்ற களிப்போடு சேதி சொல்ல ஓடினார்கள். ஆலகால விஷத்தைப் பரமசிவன் அள்ளிக் குடித்தபோது சிந்திய சில துளி விஷம் தான் இப்போது நாம் விஷ ஜந்துக்கள் என்று கூறுபவற்றில் குடிகொண்டதாம்.
பிரஹலாதன் குடித்த விஷத்தை எடுத்துக்கொண்டார் பரமசிவன். என்ன ஹரிதானே எடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். ஹரியும் சிவனும் ஒண்ணுதான்!
ஜொலித்தான் பிரஹலாதன்
சிறைக் கதவு திறக்கப்பட, புடம் போட்ட தங்கம் போல், மேலும் அதிக பிரகாசத்துடன் பிரஹலாதன் ஜொலிப்பதைக் கண்டான் கசிபு. அக்கினிக் குழம்பாய், கண்கள் எரியத் திரும்பினான். அவனது அடிக்குப் பயந்து சேவகர்கள், தங்களுக்குள்ளேயே மாற்றிமாற்றி அடித்துக்கொண்டார்கள். அவையும் வீணானது.
பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டவர்கள், உயர்ந்து பறந்து, விழுந்து கிடந்தார்கள். எல்லாவற்றிலும் ஜெயித்து வந்த பிரஹலாதனின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துப் போய் தர்பார் மண்டபத்தில் விட்டான். “அடேய், மரியாதையாய் என்னைப் பணிந்துவிடு! எனக்குப் பின் இந்த சிம்மாசனம் உன்னுடையது. நான் விட்ட இடத்தில் இருந்து நீதானடா, ஆள வேண்டும். இது உனக்குக் கடைசி வாய்ப்பு” என்றான் கசிபு.
புன்முறுவலோடு பதிலளித்தான் பிரஹலாதன். “அப்பா! உனக்கான இந்த வாய்ப்பே அந்த ஹரி அளித்ததுதான்; நீ இன்னமும் பல காலம் ஆள வேண்டுமாயின் அந்த ஹரியைப் பணிந்துவிடு. உன் தவறனைத்தையும் மன்னித்து மகத்தான வாழ்வு தருவான் அந்த கோவிந்தன்” என்றான்.
இரணிய கசிபு, துள்ளி ஓடிப்போய் சிம்மாசனத்துக்கருகே இருந்த கதாயுதத்தை எடுத்துப் பாய்ந்து வந்தான். “கோவிந்தனாம் கோவிந்தன்! எங்கேயடா இருக்கிறான்? முடிந்தால் என் எதிரில் வரச் சொல் பார்ப்போம். தைரியமிருந்தால் வரட்டும். அவன் வந்தால் போக முடியாது. அவனை முடித்துப் பின் உன்னை முடிப்பேனடா!” என்று காச்சு மூச்சென்று கத்தினான்.
“என்னடா! மெளனமாகிவிட்டாய் கூப்பிடு! கூப்பிடு! எங்கு இருக்கிறான் உன் ஹரி.”
“அப்பா எங்கும் நிறைந்தவனை எங்கிருக்கிறான், எங்கிருக்கிறான் என்றால் என்ன செய்வது? நீயே கூப்பிடு!” என்றான் பிரஹலாதன்.
“அடேய் நாரணா! வாடா என் எதிரில்” என்று கர்ஜித்தான் இரணிய கசிபு. “ஹரி வரவில்லை பார்த்தாயா! பயந்து ஒளிந்துவிட்டான் உன் மாதவன்” என்று இடியெனச் சிரித்தான். “தூணிலும் துரும்பிலும் இருப்பவன் எப்படியப்பா ஒளிந்துகொள்வான்?” என்று கேட்டான் பிரஹலாதன்.
“இவ்வளவு பெரிய தூண்கள் இங்கே இருக்கின்றனவே. இங்கே வா! இந்தத் தூணில் இருப்பானா?” மீண்டும் இடியெனச் சிரித்து ஓங்கி அடித்தான்.
நரசிம்ம வதம் தொடங்கியது
தூண் பிளந்து வெளிப்பட்டார் நரசிம்மர். தான் வரப் பயந்து, யாரோ ஒரு மாயாவியை அனுப்பியிருக்கிறான் போலும் என, நரசிம்மரைப் பார்த்த கணத்தில் எண்ணிக்கொண்டான் கசிபு. ஒரு நொடியில் சுதாரித்து கதாயுதத்தால் ஓங்கி ஹரியின் மார்பில் அடிக்க நெருங்கினான். நாராயணன் ஒளியில் அவன் மறைந்தே போய்விட, பிரஹலாதன் சற்றுத் திகைத்தான். அடிபட்டதா, இல்லையா எனத் தெரியாமல் தெறித்து வெளியில் ஓடிவந்தான் கசிபு. மடக்கிப் பிடித்தார் ஹரி. மாற்றி மாற்றி வலது, இடது கைகளால் அறைவிட்டார். ஒரு பெண்ணைப் போய் அடிப்பாயா, இஷ்டத்திற்கு அறைவாயாஎன்று கேட்பதுபோல், ஒவ்வொரு அறை வாங்கும்போதும் தோன்றியது கசிபுவிற்கு. அவன் பொறிகள் கலங்கின. மடக்கித் தூக்கிப்பிடித்து வாசலுக்குப் போனார், மடியில் போட்டுக், கிழித்து, குடலை உருவி மாலையாய் போட்டுக் கொண்டார்.
அண்டசராசரமெல்லாம் நடுங்கி அடங்கின. மஹாலஷ்மி கூடப் பயந்துபோய் நின்றாளாம். பிரஹலாதன் சென்று பணிந்தபோதுதான் சிங்க முகம் மெல்லச் சிரித்தது. அவரைக் குளிர்விக்க அநேக பாடல்களைப் பாடிப் பணிந்தான் பிரஹலாதன். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தேவர்களும், முனிவர்களும் வீழ்ந்து வணங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், உஷ்ண மூச்சும், சிறு கர்ஜனையும் மட்டும் அலையாய் பரவியபடி இருந்தன. அடங்க வெகுநேரமானது.
இங்கே நீங்கள் பார்க்கும் இந்த அற்புதமான, உணர்வுபூர்வமான சிற்பங்களில் ஒன்று திருக்குறுங்குடியில் உள்ளது. மற்றொன்று தாடிக்கொம்பு எனும் இடத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருக்கிறது. வதம் பண்ணும் சிலைகளில், திருக்குறுங்குடி சிற்பத்தில் ஒரு நளினமும், முகத்தில் ஒரு களிப்பும் தெரிகிறது. தாடிக்கொம்பு சிற்பத்தில் உக்கிரமும், கைகளில், அந்த வேகமும் புலப்படுகிறது. ரசித்துப் பார்க்கையில் இவற்றை அந்த சிற்பங்களே உணர்த்திவிடும்.
போன வாரம் பார்த்த திருக்குறுங்குடி போன்றதே அடுத்த படம். அதிலே கசிபுவை அறை கொடுத்துப் பிடித்துத் தூக்குவது போல் இருக்கும். இதுவோ கிடுக்கிப்பிடி என்று சொல்வது போல் கையை மடக்கிப் பிடித்து இடுப்பையும், கையையும், தோளையும்கூட அமுக்கிப் பிடித்தாயிற்று. மூன்று கைகளால் அறை விழுகிறது. என்ன செய்வது. தன்வினை தன்னைச் சுடும்.
பாவம் ஹிரண்ய கசிபுவின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவனுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு வராமல் இருக்க வேண்டுமாயின், ஆணவம் இன்றி வாழ வேண்டும். நான் என்ற எண்ணத்தை விடுத்து நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு கடமைகளைச் செய்து வந்தாலே போதும் நிம்மதியான வாழ்வு அமைந்துவிடும்.
அவனருளாலே, அவன்தாள் பணிவோம்.
(மீண்டும் அடுத்த வாரம்)
ஓவியர் பத்மவாசன்