Published : 23 Nov 2016 04:59 PM
Last Updated : 23 Nov 2016 04:59 PM

தெய்வத்தின் குரல்: ஆலய வழிபாட்டின் நோக்கம்தான் என்ன?

ஆலயங்களில் ரிஷிகளின் தபஸை டெபாஸிட் மாதிரிப் போட்டு வைத்திருந்து அதிலிருந்து நாம் எடுத்துக் கொள்வது நிஜம். மூர்த்திகளிலிருந்து தெய்வாநுக்ரஹம் கிடைப்பது நிஜம். மந்த்ரபூர்வமான ஆராதனைகளால் நமக்கு ஆலயத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்மை நிறைய உண்டாவதும் நிஜம். இத்தனையும் இருந்தாலும் ஆலய வழிபாடும் நாம் தனிப்பட நம்மை உருப்பட வைத்துக்கொள்வதற்கு அங்கம்தானேயன்றி, community salvation -காக (ஒரு சமூகம் முழுதும் மோக்ஷம் பெறுவதற்காக) அல்ல.

கோயிலில் பலபேர் சேர்ந்து பூஜைகள், உற்சவங்கள், கும்பாபிஷேகங்கள் செய்து, பொன்னையும் பொருளையும், கந்தம் (சந்தனம்), புஷ்பம், நைவேத்யம், மேளதாளம் எல்லாவற்றையும் அர்ப்பணம் பண்ணுகிறோமென்றால் இதற்குப் பர்பஸே (நோக்கமே) வேறு. இப்படிப்பட்ட கூட்டுப்பணிதான் மதத்தின் முடிவு என்ற அபிப்பிராயத்தில் இதைச் செய்யவில்லை.

ஆனால், community thanks giving - ஆகவே இதைச் செய்கிறோம். ஈஸ்வரனிடமிருந்து சமூகம் முழுதும் பலவிதமான அநுக்கிரகங்கள் பெறுகிறதல்லவா? அதற்காக சமூகம் முழுவதும் சேர்ந்து அவனுக்கு நன்றி தெரிவிப்பதற்கு அடையாளமாக, நன்றிக்கும் அன்புக்கும் ஸ்தூலமான அடையாளமாக, அவன் நமக்குக் கொடுத்ததிலிருந்தே திரும்ப அவனுக்கு வஸ்திரம், நைவேத்யம், வாகனம் என்றெல்லாம் அர்ப்பணிப்பதுதான் நம்முடைய கூட்டு ஆலயப் பணியின் பர்பஸ்.

‘ஸால்வேஷ'னுக்கு (விடுதலைக்கு) இதோடு நின்றுவிட்டால் போதாது. ஈஸ்வரனின் பரம க்ருபையில் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தும், அந்த மூர்த்திகளில் அப்படியே உள்ளம் சொக்கி பக்தி பண்ணியுமே மோக்ஷ சாம்ராஜ்யத்துக்குப் போனவர்கள் உண்டுதான். ஆனாலும் இங்கேயுங்கூட அது அவர்கள் இன்டிஜுவலாக (தம்மளவில் மட்டும்) செய்து கொண்டதுதானே? பொதுவில் ஆலயத்திலிருந்து பெறுகிற சக்தியைத் தனி வாழ்க்கையின் அநுஷ்டான சுத்தத்தால் விருத்தி செய்து கொள்வதாகவே நம் மதம் இருக்கிறது. அவனவன் இப்படி சுத்தமாக அநுஷ்டானம் பண்ணித் தன்னைத்தானே கடைத்தேற்றிக் கொள்வதற்கான சக்தியையும் கோயிலுக்குப் போய்ப்போய், வேண்டி வேண்டியே பெறலாம்.

ரொம்பவும் controversial -ஆன (சர்ச்சைக்கிடமான) புஸ்தகம் எழுதின ஒரு வெள்ளைக்காரர்* என்னிடம், “உங்கள் கோயில்களில் என்ன இப்படி ஒரே சத்தமும் கூச்சலுமாயிருக்கே?'' என்று கேட்டபோது நான் இதைத்தான் சொன்னேன். “சர்ச்சில், மசூதியில் புத்த விஹாரத்தில் silent prayer செய்கிறது போலக் கோயிலில் செய்யணும் என்பது முக்கிய உத்தேசமில்லை; எங்களுக்கு ஏகாந்தத்தில் தியானம்தான் முக்கியம். தியானம், congregational worship (கூடிப் பிரார்த்தனை சொல்லி வழிபடுவது) ஆகியவற்றிற்காகக் கோயில் இல்லை.

ராஜா நம்மை ரக்ஷிக்கிறான் என்பதற்காக அவனுக்கு அரண்மனை, அலங்காரம், பரிவாரம், படாடோபம் எல்லாம் கொடுக்கிறோம்; வரியும் கொடுக்கிறோம் அல்லவா? அதே மாதிரி ஸர்வலோக ராஜாவாக, ஸர்வ கால ரக்ஷகனாக இருக்கப்பட்ட பகவானுக்குப் பொன்னையும் பூஷணத்தையும் கொடுத்துப் பெரிசாகக் கோயில் கட்டி வைத்து, மேளதாள விமரிசைகளோடு உத்சவம் செய்யவே, community thanks- giving -ஆக (சமூக நன்றியறிவிப்பாக) collective offering -ஆக (கூடிக் காணிக்கை செலுத்துவதாக) எங்கள் ஆலய வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது.

இங்கே அமைதியை எதிர்பார்க்க முடியாது. அமர்க்களம், ஆரவாரம், மேளதாளம், கண்டாமணி அதிர்வேட்டு இருக்கத்தானிருக்கும். அமைதியாக தியானம் பண்ண அவரவர் வீட்டிலும் பூஜாக்ருஹமுண்டு. ஆற்றங்கரை, குளத்தங்கரை உண்டு'' என்று சொன்னேன்.

இப்படிச் சொன்னதால் கோயிலில் அவரவர்களும் இரைச்சல் போட்டுக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருப்பதற்கு லைஸென்ஸ் தந்ததாக அர்த்தமில்லை. சாஸ்த்ரோக்தமாக அநுமதிக்கப்பட்டிருக்கும் ஓசைகளை - மணி அடிப்பது, வேத கோஷம், தேவாரம், பஜனை, மேளம், புறப்பாட்டில் வெடி இவற்றைத்தான் நான் சொன்னது.

இந்த மாதிரி சாஸ்த்ரோக்தமான சப்தங்களுக்கே மௌன தியானத்தில் ஒருத்தனை ஈடுபடுத்துகிற அபூர்வமான சக்தி உண்டு. இம்மாதிரி சப்தங்களுக்கு நடுவிலேயே சந்நிதானத்தில் சிறிது கண்ணை மூடிக்கொண்டால், அல்லது தக்ஷிணா மூர்த்திக்கு எதிரே ஐபம் பண்ண உட்கார்ந்துவிட்டால், சட்டென்று ஒரு லயிப்பு உண்டாகிவிடும்.

தனி மநுஷ்யன் தன்னைத் தனக்குரிய அநுஷ்டானத்தால் சுத்தப்படுத்திக்கொண்டு தன் வாழ்க்கை உதாரணத்தாலேயே மற்றவர்களுக்கும் வழிகாட்டுவதுதான் இந்து மதத்தின் உயிர்நிலை. சிறு வயசில் இதை குருகுலத்திலும் விருத்தாப்பியத்தில் சந்நியாசியாக ஏதாவது மடம் அல்லது ஆசிரமத்திலும் அப்யாசம் பண்ணுவது போக, மீத வாழ்க்கையின் மிகப்பெரிய பாகம் இவன் க்ருஹஸ்தனாக வீட்டில்தான் இருக்க வேண்டும்.

இதனாலேயே நம் தர்ம சாஸ்த்திரத்தில் இவனால் கிருஹத்தில் இதரர்களுக்குச் செய்யப்பட வேண்டிய கடமைகள் பற்றியும், இவனுக்குப் பத்தினி, புத்திரர் முதலான அந்த இதரர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் வேறு இல்லாத அளவுக்கு நிறையச் சொல்லியிருக்கிறது. ஆத்மாபிவிருத்தி பெரும்பாலும் வீட்டிலேயே ஏற்பட வேண்டியிருப்பதால் க்ருஹஸ்த தர்மம் என்று ஏகப்பட்டதாகச் சொல்லியிருக்கிறது.

* ஆர்தர் கீஸ்லரும் அவர் எழுதிய “Darkness at Noon'' என்ற நூலும் குறிப்பிடப் பெறுகின்றன.
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x