

(லாரன்ஸ் லேஷான் 1920-ம் ஆண்டு பிறந்த அமெரிக்க உளவியலாளர் மற்றும் கல்வியாளர். நடைமுறை தியான நூலாக இவர் எழுதிய ‘ஹவ் டூ மெடிடேட்’ புத்தகம் உலகப்புகழ் பெற்றது. உளவியல் ஆலோசனை, போர், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மாயாவாதம் குறித்து இவர் நிறைய கட்டுரைகளை எழுதியவர்.)
உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், நீங்கள் எத்தனை முறை மூச்சை இழுத்து விடுகிறீர்கள் என்பதை இரண்டு நிமிடங்கள் எண்ணிப்பாருங்கள். இது நாம் தன்னிச்சையாகச் செய்யும் செயல் மீது கவனத்தைக் குவிப்பதற்கு உதவுகிறது. அத்துடன் செயல்களின் பழக்கத்தன்மையிலிருந்து நாம் புதுப்பிக்கப்படுகிறோம். முதலில் இதைக் கேட்கும்போது மிகவும் எளிமையானது என்று தோன்றவைக்கும்; ஆனால் அந்த எளிமை மேல்தோற்றம்தான்.
ஒருவர் இதைப் பயிற்சியில் அன்றாடம் கொண்டுவர முடிவுசெய்துவிட்டால், தொடர்ந்த முயற்சியும் அதிகபட்சமான பொறுமையும் தேவையென்பதைத் தெரிந்துகொள்வார்கள். எப்போதும் எங்கும் இந்தப் பயிற்சியைச் செய்வதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம். உறக்கத்திற்கு முன்போ, ரயிலிலோ பேருந்திலோ பயணம் செய்துகொண்டிருக்கும்போதோ இதைச் செய்ய முடியும். நம்மின் அறியாத பகுதியுடன் நமக்கு தொடர்பும் அதனால் நிறைவும் ஏற்படும்.
எண்ணங்கள் வரும் போகும்
ஒரு அமைதியான இடத்தில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் உட்கார்ந்து விழிப்புடனான மூச்சுப் பயிற்சியை செய்து வாருங்கள். நமது விருப்பதுக்கு எதிராக எண்ணங்கள் தோன்றும்தான்; அப்போதுதான் அன்னை தெரசா, நமது மனம் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஞாபகத்திற்குக் கொண்டுவர வேண்டும். “ அது ஒரு காட்டுக்குதிரை, நாம் போக விரும்பும் இடத்தைத் தவிர எல்லா இடங்களுக்குக்கும் போய்க்கொண்டிருக்கும்”
ஒடுக்க வேண்டாம்; அமைதிப்படுத்துங்கள்
நீங்கள் மனதின் மீதான பிடியை இயல்பாகப் பார்த்து விட்டுவிட்டால், அதுவும் தனது அலையலையான எண்ணங்களின் தாக்குதலை தானாக விட்டுவிடும்.
இரண்டு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்த பிறகு, மனம் இயற்கையாகவே காலியாகும். நமது அன்றாட வாழ்க்கையில் பேரமைதியைக் கொண்டுவரும். நமது பிரச்சினைகள் எத்தனை பெரிதாகத் தோன்றினாலும், நமது வாழ்க்கை எத்தனையோ அழுத்தங்களைக் கொண்டதாகத் தெரிந்தாலும், ஒரு நாளைக்கு நாம் செலவழிக்கும் பதினைந்து நிமிடங்கள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியது. ஆழ்மன அளவில் நாம் சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்கு இந்தப் பயிற்சி உதவும்.
லாரன்ஸ் லேஷான்