Last Updated : 26 Jan, 2017 09:33 AM

 

Published : 26 Jan 2017 09:33 AM
Last Updated : 26 Jan 2017 09:33 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்

தன்முனைப்புடன் முயன்ற பிரம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கடுமையான தவம் புரிந்த முனிவர்களுக்கும், தன்னைக் காட்டாது ஒளித்துக்கொண்டான் சிவபெருமான். “தனக்கு ஒப்புமை இல்லாதவனாகிய தனித்தலைமைக் கடவுளாம் சிவபெருமான், என்னைப் போன்ற ஒன்றுக்கும் அற்றவர்கள் பலரும் கேட்குமாறு, ஓர் அந்தணன் வடிவில் தோன்றி, தனது முழுமுதல் தன்மையைத் தானே எடுத்துச் சொல்லி, என்னை வலிந்து அழைத்து, ஆட்கொண்டு அருளிய பேரருள் தன்மைதான் என்னே?” என்று இறைவனின் அடியவர்க்கு அருளும் எளிய தன்மையை வியந்து உருகுகின்றார் மணிவாசகப் பெருமான்.

தன்நேர் இல்லோன் தானேஆன தன்மை

என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி

அறைகூவி ஆட்கொண்டு அருளி

மறையோர் கோலம் காட்டி அருளலும்

(திருஅண்டப்பகுதி:146-149)

இறைவன் தானே நேரில் வந்து தம்மை ஆட்கொண்டார் என்று மணிவாசகரே கூறும் வாக்குமூலம் இதுவாகும். “கடுமையான தவங்கள் தேவையில்லை; அன்பான எளியவர்களுக்கு நானே வலிய வந்து அருள் செய்கிறேன்” என்று நம்மைப் போன்ற சாமானியர்களுக்காக இறைவன் அருளிய உறுதிமொழிப் பத்திரமாகும்.

கொம்புத்தேனால் உடல் செய்தான்

“இறைவனின் ஒப்பற்ற அன்பு விளைவித்த இன்பத்தால் என் எலும்புகளும் உருகின; என்னுடல், கடலலை போல ஆர்ப்பரித்து ஓங்கி உயர்ந்து எழுந்து, தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அலறவும், பித்தனைப் போல மயங்கி, மதக்களிப்பு அடையும் என்னைக் கண்டவர்கள், பாண்டியப் பேரரசின் முதலமைச்சருக்கு என்னவாயிற்று என்று கவலைப்படவும், ஊரார் மருளவும், என்னை நன்கு அறிந்தோர், என் நிலையைக் கேள்விப்பட்டு வியக்கவும், மதம் பிடித்த யானை தன் பாகனை மேலே ஏறவிடாமல் அங்குமிங்கும் ஓடுவதைப் போல், இறையின்ப வெள்ளத்தைத் தாங்கமுடியாமல் அரற்றி, என் ஊனுடல் நிலை தடுமாறிற்று; இந்நிலையை மாற்றி, இறையின்பம் தாங்கும் வகையில், இறைவன் என் மனதையும், என்னுடல் உறுப்புக்களையும், கொம்புத் தேனால் செய்ததைப்போன்ற இனிய சுவையுடைய நுண்ணுடம்பாய்ச் செய்தான்” என்று தன் இறையனுபவத்தை நம்மோடு பகிர்கின்றார் மணிவாசகர்.

உளையா அன்பு என்பு உருக ஓலமிட்டு

அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்

தலை தடுமாறா வீழ்ந்துபுரண்டு அலறிப்

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்

கடக்களிறு ஏற்றாத் தடம் பெருமதத்தின்

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு

கோல் தேன் கொண்டு செய்தனன் – திருவாசகம்: அண்டப்பகுதி: 150-157

பேரின்பத்தின் பரவசநிலை

“அறிவதற்கு அரிய இறைவன், உள்ளங்கை நெல்லிக்கனி போல எனக்கு எளியவன் ஆனான்; என் இறையனுபவத்தைச் சொல்லால் விளக்கமுடியாமல் தவிக்கிறேன்; இறைவா நீ வாழ்க! முதலமைச்சராக வந்த என்னை, நீ இவ்விதம் பேரின்ப வெள்ளத்தில் இருக்கச் செய்ததை இன்னது என்றும் நான் அறியேன்! நாயேனாகிய நான் இவ்வின்பத்துக்குத் தகுதி உடையவன் அல்லேன்; இறையின்பத்தால், ‘நான்’, ‘எனது’ என்னும் பேதங்கள் செத்து ஒழிந்தன! ஒன்றுக்கும் அற்ற அடியேனுக்கு இறைவன் அருளியது எதற்காக என்று அறியேன்! இறையின்பத்தை எவ்வளவுதான் பருகினாலும், விழுங்கினாலும், ஆரா வேட்கையுடன் பொறுக்க மாட்டாமல் உள்ளேன்!” என்று பேரின்பப் பரவசத்தின் நிலையை நமக்குக் காட்டுகிறார் பெருமான்.

தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்;

சொல்லுவது அறியேன்! வாழி! முறையோ!

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

தெரியேன்! ஆஆ செத்தேன்! அடியேற்கு

அருளியது அறியேன்! பருகியும் ஆரேன்!

விழுங்கியும் ஒல்ல கில்லேன்!

(அண்டப்பகுதி: 162-167)

அன்பால் உடலமைத்தான்

“சொல்லால் எடுத்துக்காட்ட முடியாத இறைப்பேரின்ப அமுதம் என் உடம்பின் மயிர்க்கால்கள் தோறும் தேக்கி நிறைத்தான்; நாய் போன்ற என்னுடல் உள்ளேயே தன் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான்; என் உள்ளிருந்து, இனிய தேன் கொண்டு பாய்ச்சி நிரப்பிய அற்புதமான அமுதங்கள் கசிந்து ஒவ்வொரு எலும்பின் சிறுசிறு துளைகள்தோறும் ஏறும்படிச் செய்தான் இறைவன்; அன்பால் இடைவிடாமல் உருகும் என் உள்ளத்தையே மூலப்பொருளாகக் கொண்டு ஓர் உருவம் செய்து, அங்கு,

அன்பால் செறிந்து ஊறும் உடலை எனக்கு அமைத்தான்; நன்கு விளைந்து முற்றிய கரும்பையும், விளாங்கனியையும் வயிறார உண்ட இன்பத்தில் திளைத்திருக்கும் ஆண்யானையைப் போல, என்னையும், பேரின்பத்தில் என்றும் இருப்பதாகச் செய்தான்; பிரம்மனும் மாலும் அறியாத எம்பெருமானின் பெருங்கருணையாம் வான் தேன் என்னிடம் கலந்ததால், அருளோடு பேரின்பமும் என்னுள்ளேயே நிறையும்படி செய்தான்” என்று தன் இறையனுபவப் பேரின்பப் பகிர்வை, அற்புதமாக நிறைவுசெய்கின்றார் மணிவாசகப் பெருமான். (குரம்பை - உடல், எற்பு – எலும்பு, அள்ளூறு – செறிந்து ஊறும், ஆக்கை – உடல், கன்னல் – கரும்பு, களிறு – ஆண்யானை)

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்

தேக்கிடச் செய்தனன்! கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே,

குரம்பைகொண்டு, இன்தேன் பாய்த்தி, நிரம்பிய

அற்புதம் ஆன அமுத தாரைகள்,

எற்புத் துளைதொறும் ஏற்றினன்! உருகுவது

உள்ளம் கொண்டு ஓர் உருச்செய்து ஆங்கு, எனக்கு

அள்ளூறு ஆக்கை அமைத்தனன்! ஒள்ளிய

கன்னல் கனிதேர் களிறு எனக் கடைமுறை

என்னையும் இருப்பது ஆக்கினன்! என்னில்

கருணை வான்தேன் கலக்க,

அருளொடு பரா அமுது ஆக்கினன்,

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே!

(அண்டப்பகுதி: 170-182)

மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்’ என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை; மனிதர் எவருக்கும், இறைவனை வசப்படுத்தப் பயன்படும் திருவாசகத்தின் மூலம், மணிவாசகரை, இப்பூவுலகிலே என்றும் இருப்பதாகச் செய்தான் இறைவன் என்பது இதன் உட்பொருள். இதைத் தனி அகவல் என்றே பரவசமடைவார் வள்ளலார்.

மற்றொரு முக்கியமான பகுதி ‘பிரமன் மால் அறியாப் பெற்றியோன்’ என்பது; இதன் உட்பொருள், மணிவாசகர் பெற்ற கல்வியாலோ, முதலமைச்சராக அவர் பெற்ற செல்வத்தாலோ அவருக்கு இறையருள் கிட்டவில்லை; இறைவனின் பெருங்கருணையாலேயே கிடைத்தது என்பதே. இறைவன் முப்புரம் எரித்த பேரருள் செயலை, புராணங்களிலிருந்து வேறுபட்ட, அறிவுபூர்வமான புதிய பொருளுடன், திருவாசகத்தில் மணிவாசகர் விளக்குவதை அறிய அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x