

வேதங்கள் இரு பெரும் பகுதிகளாக உள்ளன. ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம். கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது. வேதத்தின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இந்தத் தத்துவத் தேடல்கள் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றைப் பொதுவாக வேத – அந்தம் அதாவது வேதாந்தம் என்று குறிப்பிடுவதுண்டு.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் நான்கிலும் வேதாந்தப் பகுதிகள் உள்ளன. இவை உபநிஷதம் என்று சொல்லப்படுகின்றன. 108 உபநிஷதங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் 14 உபநிஷதங்கள் முக்கியமானவை எனக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு வேதத்திலும் அமைந்துள்ள முக்கிய மான உபநிஷதங்கள் வருமாறு:
ரிக் வேதம்: ஐதரேயா, கெளசீதகி
யஜுர் வேதம்: ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ரேய, மகாநாராயண
சாம வேதம்: கேன, சாந்தோக்ய
அதர்வண வேதம்: ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய
தத்துவத் தேடல்
உலகாயதமான (பொருள் சார்ந்த) நடைமுறை வாழ்வுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத் தத்துவ நோக்கில் அலசுபவை உபநிஷதங்கள். பரம்பொருள், ஆத்மா, சிருஷ்டி முதலான விஷயங்களை இவை கையாள்கின்றன.உலகாயதமான அம்சங்களைத் தாண்டிய சிந்தனைகள், உரையாடல்களைப் பொதுவாக வேதாந்தம் என்று குறிப்பிடும் வழக்கம் இந்த வேதாந்தப் பகுதியின் உள்ளடக்கத்திலிருந்துதான் வந்தது.
இந்த உபநிஷதங்கள் கூறும் தத்துவங்களை வேதாந்தத் தத்துவம் என்பது பொதுவாகச் சொல்வதுண்டு. இது குறிப்பிட்ட ஒரு தத்துவம் அல்ல. பல விதமான தத்துவங்களின் தொகுப்பு. வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசுவது வேதாந்தம் என்று சொல்லப்படுகிறது. வேதாந்தத் தத்துவங்கள் இந்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதால் இப்படிக் கருதப்படுகிறது.
வேதாந்தப் பகுதிகள் அல்லது உபநிஷதங்கள் முன்வைக்கும் பார்வைகளைப் பல ஞானிகளும் சிந்தனையாளர்களும் பல விதமாகப் பொருள் கொள்கிறார்கள். பல விதமாக விளக்கம் அளிக்கிறார்கள். உபநிஷதங்கள் பெரும்பாலும் உரையாடல் வடிவில் இருக்கும். பூடகமான பொருள் கொண்டவையாக இருக்கும். கவித்துமான பாடல்களாக இருக்கும். பல விதமான பொருள் களைக் கொள்ளவும் விவாதிக்கவும் இவை வழி வகுக்கின்றன.
ஒரு உதாரணம்:
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம். அது முழுமை (பூர்ணம்). இதுவும் முழுமை. முழுமையிருந்து முழுமை தோன்றியுள்ளது. முழுமை யிலிருந்து முழுமையை எடுத்தும் முழுமையே எஞ்சி நிற்கிறது.