

தாவீதின் வெற்றியை இஸ்ரவேல் தேசமே பேசியது. குறைவான உயரம் கொண்ட இடையச் சிறுவன், அதுவும் வாளோ, கவச உடைகளோ அணியாமல், கையில் கவணையும் மேய்ப்பனுக்குரிய சிறு தோல் பையில் ஐந்து கூழாங்கற்களையும் மட்டும் எடுத்துச் சென்று, அதில் ஒரேயொரு கல்லை மட்டும் செலவழித்து கோலியாத் எனும் மாவீரனை வீழ்த்தியதை இஸ்ரவேலிய வீரர்களாலும் படைத்தலைவனாலும் நம்பமுடியவில்லை.
கோலியாத்தின் தலை, தாவீதின் கையில் இருந்ததைக் கண்டு திகிலடைந்தார்கள். நாம் அனைவரும் காண்பது நிஜம்தானா என்று பார்த்துக்கொண்டார்கள். பின் சித்தம் தெளிந்த இஸ்ரவேலின் படைத்தலைவன், தாவீதை அழைத்து வந்து அரசன் சவுலின் முன்பாக நிறுத்தினான். அப்போது சவுல், “நீ யாருடைய மகன்?” என்று தாவீதைப் பார்த்துக் கேட்டார். அதற்கு தாவீது, “பெத்லகேம் ஊரைச் சேர்ந்த உங்கள் அடிமை ஈசாயின் பையன்” என்று பணிவுடன் பதில் கூறினான்.
அரசனின் மகனே நண்பன் ஆனான்
‘அடடா.. இத்தனை பெரிய வீரனை வீழ்த்தியும் கர்வம் சிறிதும் தலைக்கு ஏறாமல் தன் குடும்பமே அரசனுக்கு அடிமை என்று எத்தனைப் பணிவைக் காட்டுகிறான் இந்த இளைஞன். இவனைப் போன்றவன் அல்லவா எனக்கு நண்பனாக வாய்க்க வேண்டும்’ என்று மனதுள் சொல்லிக்கொண்டான் சவுல் அரசனின் மகனும் இளவரசனுமாகிய யோனத்தான். அந்தக் கணம் முதல் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்து, அவனுடன் நெருங்கிப் பழகி உயிர் நண்பன் ஆனான். தனது நட்பின் அடையாளமாக, தான் போட்டிருந்த கையில்லாத அங்கியையும், தன்னுடைய விலையுயர்ந்த அரச உடை, வாள், வில், இடுப்புவார் ஆகியவற்றையும் யோனத்தான் தாவீதுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். சவுல் அரசனுக்குக் கிடைத்த கேடயம்போல் ஆனார் தாவீது.
பாடலால் வந்த வினை
தோற்று ஓடிய பெலிஸ்தியர்கள் மீண்டும் மீண்டும் சண்டைக்கு வந்தார்கள். அவர்களை ஒடுக்க தாவீதின் தலைமையில் போர்வீரர்களை வழிநடத்தினார் சவுல். எல்லாச் சண்டைகளிலும் தாவீதுக்கே வெற்றி கிடைக்கும்படிச் செய்தார் கடவுள். தாவீதின் தொடர் வெற்றிகளைக் கண்டு இஸ்ரவேல் வீரர்களும் குடிமக்களும் சந்தோஷப்பட்டார்கள். பெலிஸ்தியர்களை வீழ்த்திவிட்டு அரண்மனைக்குத் திரும்பி வரும்போதெல்லாம், இஸ்ரவேலின் எல்லா நகரங்களிலிருந்தும் பெண்கள் கூடிவந்து, இசைக் கருவிகளோடு சந்தோஷமாக ஆடிப்பாடி சவுல் ராஜாவையும் தாவீதையும் போற்றிப் பாடி வரவேற்றார்கள்.
அப்போது “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றதோ பதினாறாயிரம்” என்று பாடினார்கள். அவர்கள் அப்படிப் பாடியது அரசன் சவுலுக்குப் பிடிக்கவில்லை. சவுல், பயங்கர எரிச்சலோடு, “தாவீதுக்குப் பதினாறாயிரமாம், எனக்கு ஆயிரமாம். இனி அரச பதவி மட்டும்தான் அவனுக்கு பாக்கி!” என்றார். அந்த நாளிலிருந்து சவுல் எப்போதும் தாவீதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார். தனது நாற்காலிக்கு அவனே கேடாக வந்துவிடுவானோ என்று எண்ணினார். அடுத்த நாள், சவுலின் மனம் அவரை ஆட்டிப்படைத்தது. அரண்மனைக்குள் அவர் வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்கினார்.
ஆனால் தாவீதின் மனமோ வெளுத்த வானம்போல் தூய்மையாக இருந்தது. அவர் வழக்கம் போல் யாழ் இசைத்துக்கொண்டிருந்தார். இந்தத் தருணம்தான் தாவீதைக் கொல்லச் சரியான தருணம் என்று நினைத்த சவுல் தன் கையில் ஈட்டியை எடுத்துக்கொண்டுபோய் சரியான தூரத்தில் நின்று தாவீதை நோக்கி ஈட்டியைக் குறிவைத்து எறிந்தார். ஆனால் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்த ஈட்டியின் ஓசையை தாவீது கேட்கும்படி கடவுள் செய்தார். இதனால் சட்டென்று நகர்ந்து சவுலின் கொலைவெறித் தாக்குதலிருந்து தப்பித்தார். இப்படி இரண்டுமுறை சவுல் கொல்ல முயன்றும், அதிலிருந்து தாவீது உயிர் தப்பினார்.
கடவுளாகிய யகோவா தன்னைவிட்டு விலகி தாவீதோடு இருப்பதால்தான் அவனால் உயிர் தப்ப முடிகிறது என்பதைப் புரிந்துகொண்ட சவுல், தாவீதை நினைத்துப் பயந்தார். பின்னர் ஆயிரம் வீரர்களுக்குத் தாவீதை தலைவராக்கினார். தாவீது சென்று வந்த எல்லாப் போர்களிலும் வெற்றி உறுதியாக இருந்ததால் இஸ்ரவேல் மக்கள் அவரை நேசிக்க ஆரம்பித்தார்கள். இதையறிந்த சவுல் ஒரு முடிவுக்கு வந்து தாவீதை அழைத்துப் பேசினார்.
எனக்குத் தகுதி இருக்கிறதா?
“ தாவீதே…என் மூத்த மகள் மேரபை உனக்குக் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறேன். நீ எனக்காகத் தொடர்ந்து உன் வீரத்தைக் காட்டி போர்களைத் தலைமைதாங்கி நடத்த வேண்டும்” என்று சொன்னார். அதற்கு தாவீது, “ராஜாவின் மருமகனாவதற்கு எனக்கென்ன அருகதை இருக்கிறது? இஸ்ரவேலில் எனது குடும்பம் மிகச் சாதாரணமானது” என்றார். ஆனால் வாக்கு கொடுத்தபடி அரசன் சவுல் தன் மகள் மேரபை தாவீதுக்குத் திருமணம் செய்து கொடுக்காமல் ஆதரியேல் என்பவனுக்கு மவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இது குறித்து தாவீது கவலை அடையவில்லை. அரசனின் முடிவை தாவீது மதித்தார்.
தாவீதின் வீரத்தையும் பணிவையும் அழகையும் கண்ட சவுலின் இளைய மகள் மீகாள் தாவீதைக் காதலித்தாள். இந்த விஷயம் சவுலிடம் சொல்லப்பட்டபோது, அவர் சந்தோஷப்பட்டார். “அவன் கதையை முடிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்; அவளை அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொல்லி பெலிஸ்தியர்களின் கையில் சிக்க வைத்துவிடுகிறேன். எதிரிகளின் கையாலேயே அவன் சாகட்டும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். பின்பு தாவீதிடம் “ தாவீதே..நீ என் இளைய மகளைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறேன்” என்றார். அரசனின் மாப்பிள்ளை ஆவதற்கு தாவீதும் ஆசைப்பட்டார். அதனால் தாவீது அடுத்தடுத்து போர்களில் புதிய வெற்றிகளைச் சவுலுக்கு பரிசளித்தார். தன்னுடைய மகள் மீகாளையும் அவருக்குக் திருமணம் செய்து வைத்தார்.
இதற்கு மேல் நம்பக் கூடாது
ஆனால் தன் மகன் யோனத்தானிடமும் தனது பாதுகாப்பு ஊழியர்களிடமும் தாவீதை எப்படியாவது கொன்று ஒழித்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டார். இது யோனத்தானைக் கவலையுறச் செய்தது. “என்னுடைய அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அதனால், நீ எச்சரிக்கையாக இரு” என்று கூறி தனது நட்புக்கு அர்த்தம் கொடுத்தான். தனது தந்தையிடமும் தாவீதைத் தன்னால் கொல்ல முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டான். இதனால் தாவீதின் கையே ஓங்கியது.
எனவே தந்திரமாக மீண்டும் தனது அரண்மனையிலேயே தாவீதை தங்க வைத்தார் சவுல். எல்லாம் சரியாகிவிட்டது என்று தாவீது நினைத்தார். ஆனால் சவுல் இம்முறை எப்படியாவது அவனைக் கொன்றுவிடவேண்டும் என்று அவன் மீது ஈட்டியை வீசினார். ஆனால், தாவீது நழுவிக்கொண்டதில் அந்த ஈட்டி சுவரில் பாய்ந்தது. இனியும் இந்த அரசனை நம்பினால் என்னைப்போல் முட்டாள் யாரும் இருக்கமுடியாது என்று உணர்ந்த தாவீது, அந்த இரவில் அரண்மனையிலிருந்து தப்பித்து ஓடினார்.
(பைபிள் கதைகள் தொடரும்)