

மக்கள் தன்னிடத்தில் கொண்டுள்ள பயத்தை அகற்ற என்ன செய்யலாம் என்று ஒருமுறை யோசித்தாராம் எமன். சிவபெருமானிடம் முறையிட்டார். ‘எல்லோருக்கும் நல்ல பதவிகள் இருக்கும்போது, எனக்கு மட்டும் ஏன் இந்த உயிரை எடுக்கும் பதவி அளித்தீர்கள். இதற்கு ஏதாவது விமோசனம் கிடைக்காதா’ என்று தன் ஆதங்கத்தை சிவபெருமானிடம் கொட்டினார்.
இவரது குரலுக்குச் செவி சாய்த்த சிவன், ‘எமதர்மராஜா, ஸ்ரீவாஞ்சியம் செல். அங்கு தவம் செய்’ என்றார். அவரது சொல்படி எமதர்மராஜா ஸ்ரீவாஞ்சியம் வந்தார். இங்கு சிவனை வேண்டித் தவத்தில் ஆழ்ந்தார். இவரது தவத்தை மெச்சிக் காட்சியளித்த சிவபெருமான், ‘இத்திருத்தலத்தில் எம பயத்துடன் வருபவர்களுக்கு பயம் நீங்கும் என வரமளித்தார் என்கிறது தல புராணம். அதனால் இத்திருத்தலத்தில் எமதர்ம மூர்த்தியை வழிபட்ட பின்பே பிற மூர்த்திகளை தரிசனம் செய்யும் வழக்கம் உண்டானது.
பெரும்பாலான சிவன் கோயில்களின் நுழைவாயிலில் விநாயகர் அருள்பாலிப்பார். ஆனால் இங்கு எமதர்மராஜா அருள்பாலிக்கிறார். இவர் நான்கு திருக்கரங்களுடன் சூலம், கதை ஏந்தி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் சித்ரகுப்தர் காட்சியளிக்கிறார்.
தீர்த்தத்தின் சிறப்பு
இத்திருக்கோயிலில், குப்த கங்கை என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை. கங்கையின் ஆயிரம் அம்சத்தில் ஒரு அம்சத்தைக் காசியில் விட்டுவிட்டு மீதி 999 அம்சங்களும் இங்குள்ள தீர்த்தத்தில் கலந்திருப்பதாக ஐதீகம். இத்தலத்துக்கு ஒரு முறை வந்து நீராடினால் காசிக்குப் பல முறை சென்று வந்த பலன் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நீராடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நீராடினால் மனம் தூய்மையாகிறது. இரண்டாவது ஞாயிறு பாவங்கள் விலகுகிறது. மூன்றாவது ஞாயிறு பொன் அபகரித்தல், கொள்ளை போன்ற பாவங்களில் இருந்து விடுபடலாம். நான்காவது ஞாயிறு குருவுக்கு செய்த துரோகம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
தல வரலாறு
மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருக்கும்போது கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிய நேரிடுகிறது. மகாவிஷ்ணு இந்தத் தலத்துக்கு வந்து வாஞ்சிநாதரை நோக்கித் தவம் புரிகிறார். தவத்தினை ஏற்ற சிவபெருமான் மகாலட்சுமியையும், மகாவிஷ்ணுவையும் சேர்த்து வைக்கிறார் என்று இத்தலத்தின் பெயரை விளக்குகிறது புராணம். இங்கு மகாவிஷ்ணு லட்சுமியை – ஸ்ரீயை வாஞ்சித்து – விரும்பி, இறைவனை பூஜித்ததால் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் உண்டானதாம்.
கோயில் சிறப்பு
பஞ்சநாதேஸ்வரர், வேதாரண்யேஸ்வரர், மாயூர நாதேஸ்வரர், மகாலிங்கேஸ்வரர். அகோரேஸ்வரர் ஆகிய சிவலிங்கங்களைத் திருச்சுற்றில் காணலாம். யோகபைரவர் சன்னிதி இங்கே அமையப் பெற்றிருப்பது தனிச் சிறப்பாகும். யோக பைரவரை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.
கிரகண காலம்
இத்திருத்தலத்தில் உள்ள ராகு, கேதுவை வணங்கினால் கால சர்ப்ப தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. கிரகண காலத்தில் பெரும்பாலான கோயில்கள் நடைசாற்றப்படும். ஆனால் இக்கோயில் திறக்கப்பட்டு வாஞ்சி நாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
வெண்ணெய் விநாயகர்
`ஆஞ்சநேயர் கோயிலில்தான் வெண்ணெய் சாற்றுவது வழக்கம். இங்கு விநாயகருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகின்றனர். விநாயகருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகளும் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளையார், வெண்ணெய் விநாயகர் என்ற திருநாமத்தில் இங்கு அழைக்கப்படுகிறார்.
என வாகனம்
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வாஞ்சிநாதர். இத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே ஆகையால் இவரை வழிபாட்டல் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எமன் வாகனத்தில் பக்தர்களுக்கு உற்சவர் வாஞ்சிநாதர் அருள்பாலிக்கிறார்.
மங்கள நாயகி
ஸ்ரீமங்களாம்பிகை என்ற திருநாமத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார். சகல பாக்கியங்களையும் தருவதால் பாக்யாப்த நாயகி எனவும் மங்களங்களை செய்வதால் மங்கள நாயகி எனவும் அழைக்கப்படுகிறார். பிரளய காலத்தில் எல்லா உலகங்களும் நீரில் மூழ்கி இருக்க, முழுகாத இடம் ஏதும் உண்டா என பார்வதி கேட்க, பரமசிவன் ஸ்ரீவாஞ்சியத்தைக் காட்டினார். இதனால் மகிழ்ந்த பார்வதி பரமசிவனுடன் இங்கு ஞானசக்தியாகி, வாழவந்த நாயகியாய்த் தோன்றி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீ வாஞ்சியம் திருக்கோயில் அமைந்துள்ளது. காசியை விட நூறு மடங்கு பெருமை வாய்ந்தது ஸ்ரீவாஞ்சியம். இத்தலம் குறித்து மூவர் தேவாரம் பாடியுள்ளனர். மூலவர் வாஞ்சி நாதேஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை வாழவந்த நாயகி. ஸ்தல விருட்சம் சந்தனமரம். தீர்த்தம் குப்த கங்கை, எமதீர்த்தம் பெருமாள், பிரம்மா, இந்திரன், பராசுரர், கமலமுனி, அக்னி தேவர், சூரியபகவான் ஆகியோர் வழிபட்ட பெருமை கொண்ட தலம் என்கிறது தல புராணம்.