Last Updated : 15 Jun, 2017 09:53 AM

 

Published : 15 Jun 2017 09:53 AM
Last Updated : 15 Jun 2017 09:53 AM

கந்தல் பொதிக்கிழவன்

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.

நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், “ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், “என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?” என்றார் அரசர்.

“ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்” என்றான் மிகவும் பவ்யமாக.

அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

பிச்சைக்காரனுக்கு ஏற்பட்ட சலனம்

அப்போது மன்னர் அவனிடம், “விருந்தில் கலந்துகொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப்படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன், மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு, வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.

அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.

அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்’ என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.

அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x