Published : 23 Jun 2016 11:54 am

Updated : 14 Jun 2017 13:35 pm

 

Published : 23 Jun 2016 11:54 AM
Last Updated : 14 Jun 2017 01:35 PM

பைபிள் கதைகள் 12: கேடில் முடிந்த கூடா நட்பு

12

சீகேம் நகரின் பெண்கள் சிலரது நட்பு கிடைத்ததும் அந்த நகரத்தின் பளபளப்பு அவளுக்குப் பிடித்துப்போனது. தனது கானானியத் தோழிகளுடன் நகரை வலம் வந்துகொண்டிருந்தபோது சீகேம் அவளைக் கண்டான். அவளது அழகில் மயங்கினான். அவளது அருகில் வந்து பேச்சுக்கொடுத்தான். அவளது கானானியத் தொழிகள், “ நீ அதிர்ஷ்டம் செய்தவள்; சீகேம் இந்த நகரத்தின் பிரபு. அவனே உன்னை விரும்புகிறான்” என ஊக்குவித்தார்கள்.

அந்தக் கணத்தில் தன் அழகு, செல்வாக்கு மிக்க ஒரு இளைஞனை கவர்ந்திருக்கிறது என்றெண்ணி கர்வம் கொண்டு புன்முறுவல் பூத்தாள். அந்தக் கணமே சீகேம் அவளைத் தனியே வரும்படி அழைத்தான். அவனது அழைப்பை ஏற்றுச் சென்ற தீனாள் வஞ்சிக்கப்பட்டாள். தீனாளை சீகேம் தந்திரமாக அடைந்தான். அவளைவிட மனமில்லாமல் தனது மாளிகையில் அடைத்துவைத்தான்.

பிறகு அவளை மணந்துகொள்ள விரும்பித் தன் தந்தையிடம் தெரிவித்தான். திருமணத்துக்கு முன்பே பாலுறவு கொள்வது இஸ்ரேலியர் வாழ்முறையில் பாவமாகக் கருதப்பட்டது.

சமாதனமும் நிபந்தனையும்

யாக்கோபு தன் மகளுக்கு ஏற்பட்ட தீய நிலைமையை அறிந்துகொண்டார். அப்போது யாக்கோபின் மகன்கள் ஆடு மேய்ப்பதற்காகச் சற்று தூரத்தில் இருந்த சமவெளிக்குப் போயிருந்தார்கள். தங்கள் தங்கைக்கு நடந்த சம்பவம் பற்றி அவர்களுக்குத் தகவல் சென்றது. தீனாள் வழியே தங்கள் குடும்பத்துக்கு இழிவும் அவமானமும் வந்து சேர்ந்துவிட்டதாக நினைத்துக் கொதித்தனர். அந்த இழிவுக்கு முக்கியக் காரணமாக இருந்த சீகேம் மீது அவர்களது கோபம் மொத்தமாய்த் திரும்பியது. யாக்கோபுவின் மகன்கள் திரும்பி வருவதற்குள் சீகேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு சமாதானம் பேசினார்.

“என் மகன் சீகேம் உங்கள் மகள் தீனாளைப் பெரிதும் விரும்புகிறான். அவளை அவன் மணந்துகொள்ளுமாறு அனுமதியுங்கள். இந்தத் திருமணம் நமக்குள் ஒரு சிறப்பான ஒப்பந்தம் உண்டு என்பதற்கு அடையாளம் ஆகட்டும். பிறகு உங்கள் ஆண்கள் எங்கள் பெண்களையும், எங்கள் ஆண்கள் உங்கள் பெண்களையும் மணந்துகொள்ளட்டும். நீங்கள் இங்கேயே எங்களோடு வாழலாம்.”என்றார். அதற்குள் தீனாள் சகோதரர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அங்கே வந்த சீகேமும், “தீனாளை மணக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கெஞ்சினான். யாக்கோபின் மூத்த மகன்களோ சீகேமையும் அவனது தந்தையையும் வஞ்சிக்க விரும்பினார்கள். தங்கள் சகோதரிக்கு அவன் இழைத்த இழிவினை அவர்களால் மறக்க முடியவில்லை.

அதனால், “எங்கள் சகோதரியை நீ மணந்துகொள்ள அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீ இன்னும் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அதனால் இந்த மணம் தவறாகும். ஆனால் நீயும் உன் நகரத்திலுள்ள அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.

அப்போது எங்கள் சகோதரியை மணந்துகொள்ள அனுமதிக்கிறோம். பிறகு நாம் ஒரே ஜனங்கள் ஆகலாம். இல்லாவிட்டால் நாங்கள் தீனாளை அழைத்துக்கொண்டு போய்விடுவோம்” என்றனர். இந்த ஒப்பந்தத்தால் ஏமோரும் அவன் மகன் சீகேமும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏமோரின் ஆலோசனையை ஏற்று சீகேம் நகரின் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

குடியைக் கெடுத்த கோபம்

இருப்பினும் கோபம் தணியாமல் இருந்த யாக்கோபின் மகன்களில் இருவராகிய சிமியோனும் லேவியும் கானான் நகரத்தவர் விருத்தசேதனம் செய்துகொண்ட மூன்றாம்நாள் சீகேம் நகருக்குள் தங்கள் வாள்களுடன் நுழைந்தனர். அங்கே எதிர்கொண்ட எல்லா ஆண்களையும் கொன்றார்கள். இறுதியில் ஏமோரையும் சீகேமையும் கொன்றுபோட்டனர். பிறகு தீனாளை அழைத்துக்கொண்டு சீகேமின் மாளிகையை விட்டு வெளியேறினர். வரும் வழியில் நகரத்தையும் அவர்கள் கொள்ளையிட்டனர்.

ஆனால் யாக்கோபு தனது இரு மகன்களின் கொடூரச் செய்கைகளுக்காக மனம் வருந்தினார். “நீங்கள் எனக்கு மிகுதியாகத் தொல்லை கொடுக்கிறீர்கள். இந்தப் பகுதியிலுள்ள அனைவரும் என்னை வெறுப்பார்கள். அனைத்து கானானியர்களும் பெரிசியர்களும் எனக்கு எதிராகத் திரும்புவார்கள். நாம் கொஞ்சம் பேர்தான் இருக்கிறோம்.

இங்குள்ள ஜனங்கள் எல்லாம் கூடி நம்மோடு சண்டைக்கு வந்தால் நாம் அழிக்கப்பட்டுவிடுவோம். நமது ஜனங்கள் அனைவரும் அழிந்து போவார்கள்”என்று கொலைவெறி பிடித்த தன் மகன்களிடம் கூறினார். அவர்களோ “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு பாலியல் தொழிலாளி போன்று நடத்தினார்களே. அதை நாங்கள் அனுமதிக்க முடியுமா?” என்றார்கள். ஆனால் யாக்கோபு அங்கிருந்து உடனடியாகக் குடிபெயர்ந்து செல்லும் நிலை உருவானது.

சொந்த நாடாகிய கானானுக்குத் திரும்பிய யாக்கோபு அங்கிருந்த சீகேம் நகரத்துக்கு அருகில் தனக்கான இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார். கானானின் ஒரு பகுதியை ஆண்டுவந்த ஏமோர் தனது மகன் சீகேமின் பெயரால் நிறுவிய நகரம் அது.

தனது இருப்பிடத்தின் அருகிலேயே தன்னை வழிநடத்திச் செல்லும் கடவுளாகிய யகோவா தேவனுக்கு பலிபீடம் ஒன்றை எழுப்பி அவரைத் தொழுதுவந்தார். அந்தப் பகுதிக்கு ‘ஏல் எல்லோகே இஸ்ரவேல்’ என்று யாக்கோபு பெயரிட்டதால் யாக்கோபுவின் வாரிசுகள் அவர்தம் பணியாட்கள் கூட்டம் என அனைவரையும் ‘இஸ்ரவேலர்கள்’ என்று அந்த இடத்தின் பெயரால் கானானியர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

ஈர்க்கப்பட்ட தீனாள்

சீகேம் நகரின் செல்வச் செழிப்பும் அதன் மிதமிஞ்சிய நாகரிகமும் அங்கே நிலவிவந்த கொண்டாட்டம் நிரம்பிய வாழ்வும் யாக்கோபுவின் மகளாகிய தீனாளை ஈர்த்தன. அந்த நகரின் ஆண்கள் பெண்கள் அணியும் ஆடைகள் அணிகள் மீதும் அவளுக்கு ஈர்ப்பு உருவானது. எனவே சீகேமில் வசிப்பவர்களோடு தீனாள் நட்பு பாராட்ட விரும்பினாள். இந்த விருப்பம் தனது குடும்பத்துக்குப் பிடிக்காது என்பதைத் தீனாள் அறிந்திருந்தாள்.

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்கு கானானியப் பெண்ணை மணந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அதேபோல் ஈசாக்கு, தனது மகன் ஏசாவைப்போலத் தங்கள் மகன் யாக்கோபுவும் கானானியப் பெண்னை மணந்துகொண்டுவிடாமல் இருக்க அவரை அவனது தாய்மாமனிடம் அனுப்பினார்கள்.

ஏன் கானானியப் பெண்களையும் கானானியர்களையும் ஆபிரகாமும் அவரது வழித்தோன்றல்களும் வெறுத்தார்கள்? ஏனெனில் அவர்கள் பிரபஞ்சத்தைப் படைத்து அதை இயக்கும் ஏகக் கடவுளாகிய யகோவா தேவனை அவர்கள் ஏற்கவில்லை. ஏற்றுக்கொண்டால் கட்டுப்பாடான வாழ்வு வாழ நேரிடும் என்று நினைத்தார்கள். ஆபிரகாமின் வழித்தோன்றல்களாகிய இஸ்ரவேலர்களைப்போல ‘விருத்தசேதனம்’ செய்துகொள்வதில் விருப்பமில்லாமல் இருந்தார்கள்.

இதனால் தாங்களே சிருஷ்டித்துக்கொண்ட பொய்க் கடவுளர்களை வணங்கத் தொடங்கினர். இதையெல்லாம் தனது தாத்தாவாகிய ஈசாக்கு மூலமும் தந்தையாகிய யாக்கோபு மூலமும் தீனாள் அறிந்துகொண்டாலும் சீகேம் நகரம் அவளைத் தன் வண்ணங்களால் வசீகரித்துக்கொண்டேயிருந்தது. சீகேம் நகரின் செல்வந்தர் வீட்டுப் பெண்களின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. எனவே அவர்களைக் காண சீகேம் நகருக்குச் சென்றாள்.

சீகேமின் வலையில்

சீகேம் நகரின் பெண்கள் சிலரது நட்பு கிடைத்ததும் அந்த நகரத்தின் பளபளப்பு அவளுக்குப் பிடித்துப்போனது. தனது கானானியத் தோழிகளுடன் நகரை வலம் வந்துகொண்டிருந்தபோது சீகேம் அவளைக் கண்டான். அவளது அழகில் மயங்கினான். அவளது அருகில் வந்து பேச்சுக்கொடுத்தான்.

அவளது கானானியத் தொழிகள், “ நீ அதிர்ஷ்டம் செய்தவள்; சீகேம் இந்த நகரத்தின் பிரபு. அவனே உன்னை விரும்புகிறான்” என ஊக்குவித்தார்கள். அந்தக் கணத்தில் தன் அழகு, செல்வாக்கு மிக்க ஒரு இளைஞனை கவர்ந்திருக்கிறது என்றெண்ணி கர்வம் கொண்டு புன்முறுவல் பூத்தாள்.

அந்தக் கணமே சீகேம் அவளைத் தனியே வரும்படி அழைத்தான். அவனது அழைப்பை ஏற்றுச் சென்ற தீனாள் வஞ்சிக்கப்பட்டாள். தீனாளை சீகேம் தந்திரமாக அடைந்தான். அவளைவிட மனமில்லாமல் தனது மாளிகையில் அடைத்துவைத்தான். பிறகு அவளை மணந்துகொள்ள விரும்பித் தன் தந்தையிடம் தெரிவித்தான். திருமணத்துக்கு முன்பே பாலுறவு கொள்வது இஸ்ரேலியர் வாழ்முறையில் பாவமாகக் கருதப்பட்டது.

(தொடரும்)
கேடில் முடிந்த கூடா நட்புபைபிள் கதைகள்கிறிஸ்துவ கதைகள்யாக்கோபு நிலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x