Published : 19 Sep 2014 08:45 AM
Last Updated : 19 Sep 2014 08:45 AM

மத்திய அரசின் சார்பில் பெரியாருக்கு டெல்லியில் சிலை: திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை

டெல்லியில் மத்திய அரசின் சார்பில் பெரியாருக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மொழிப் பிரச்சினையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுக சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசு சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு என்றெல்லாம் வேகமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் செம்மொழித் தமிழ் வாரம் கொண்டாட வேண்டுமென வலியுறுத்தியும், பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ல், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத் தக்கது.

தலைநகர் டில்லியில், கடந்த 14ம் தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசும் போது, “அரசியல் சாசனப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 21 இந்திய மொழிகளில் தனிச் சிறப்பான இடத்தில் இந்தி உள்ளது. இந்தியைப் பிரபலப்படுத்துவதில், ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது, “இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் சமஸ்கிருதம். இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் சமஸ்கிருதத்தின் சகோதர மொழிகள் ஆகும்” என்று பேசியிருக்கிறார். குடியரசுத் தலைவரின் கருத்து ஏற்புடையதல்ல. உள்துறை அமைச்சரின் கருத்து கண்டனத்திற்குரியது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சமூக வலைத் தளங்களில் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்கள். ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று மாற்றினார்கள். சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்றார்கள். அனை வருக்கும் பொதுவான குடியரசுத் தலைவரே இந்தியைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று ஒருசார் பாகப் பேசியிருக் கிறார் என்றால், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று, நேரு தந்த உறுதி மொழியை உருக்குலைக்கும் முயற்சி நடப்ப தாகத்தானே பொருள். மொழிப் பிரச்சினை யில் எந்தச் சந்தர்ப்பத்திலும் சமரசம் செய்து கொள்ள திமுக தயாராக இல்லை.

அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது கேட்டு, கடந்த மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு பிரதமர் எழுதிய பதிலில், என் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அண்ணாவுக்கு விருது கொடுப்பது பற்றி எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை.

தலைநகர் டெல்லியில், தந்தை பெரி யாருக்கு மத்திய அரசின் சார்பில் மிகப் பெரிய சிலை அமைக்க வேண்டும். இது தமிழக மக்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும். பிரதமர் மோடி, திமுகவின் இந்த இரண்டு வேண்டுகோள்களையும் ஏற்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்த, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துக் கூட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறது. சகாயத்தினால் சங்கடங்கள் ஏற்பட்டு, பல உண்மைகள் வெளிவருமோ என்று இந்த அரசு அஞ்சுகிறது என்றுதான், அப்பீலைப் பார்க்கும்போது தெரிகிறது.

பூவிருந்தவல்லியில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப் பாக இருந்தது என்றும், தற்போது தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்றும் பேசியிருக்கிறார். உண்மை வெளி வந்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x