Last Updated : 28 Jun, 2019 04:06 PM

 

Published : 28 Jun 2019 04:06 PM
Last Updated : 28 Jun 2019 04:06 PM

சனிக்கிழமை... சனீஸ்வரர்... எள் தீப வழிபாடு!

சனி பகவானின் அருளையும் கருணையையும் பெற, சனிக்கிழமைகளில், தவறாமல் சனீஸ்வரரைத் தரிசித்து, எள் தீபமேற்றுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். நான்கு பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம் காரியங்கள் அனைத்தையும் வீரியமாக்கித் தந்தருள்வார் சனீஸ்வரர்!

சனியின் பார்வை நேரிடையாக நம் மீது பட்டுவிடக் கூடாது என்பார்கள். ஆயிரம்தான் கோயில்கோயிலாகச் சென்று சனி பகவானைத் தரிசித்து வழிபட்டாலும் உண்மையாகவும் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமலும் வாழ்ந்தால், எந்த தோஷத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

ஆனாலும் சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றி வழிபடுவதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் கூடுதல் பலன்களை வழங்கும். அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்!

சூரிய பகவானின் மைந்தன் சனி பகவான். அம்மா சாயாதேவி. சாயாதேவியை, நிஷூபா, ப்ருத்வி என்ற பெயர்களிலும் அழைக்கிறது புராணம்.

திருப்பாற்கடலில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நாராயணன் காட்சி கொடுக்க, அவரின் நாபிக்கமலத்தில் இருந்து அவதரித்தார் பிரம்மா. பிறகு பிரம்மா, படைப்புத் தொழிலை ஏற்றார். சத்தியலோகத்தில் இருந்தபடி தன் படைப்புத் தொழிலைச் செய்து வந்தார். தன் பேராற்றலால், மரீசி, ஆங்கிரஸ, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் எனும் ஞானவான்களை, தபஸ்விகளைத் தோன்றச் செய்தார் பிரம்மா! இவர்கள் சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

மேலும் பிரம்மா தக்ஷப் பிரஜாபதி எனும் மகரிஷியை உலக நலனுக்காகச் சிருஷ்டித்து அருளினார்.

மரீசி மகரிஷி, சம்பூதி என்பவளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காசியப முனிவர் பிறந்தார். இந்த முனிவர், தக்ஷபிரஜாபதியின் மகள் அதிதியை மணந்தார்.

பிறகு, காசியப முனிவர் தம்பதிக்கு நிறைய குழந்தைகள் பிறந்தனர் என்கிறது புராணம். இவர்கள் காசியப புத்திரர்கள் என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார்கள். அத்யந்த தேஜஸ் பொருந்திய இவர்கள், துவாதச ஆதித்யர்கள் எனும் திருநாமத்துடன் போற்றப்பட்டனர். இவர்களில் மூத்தவர்... சூரிய பகவான்!

சூரிய பகவான், தேஜஸ் கொண்டவர். ஒளி மிகுந்தவர். அந்த ஒளியைக் கொண்டு, உலகுக்கே வெளிச்சம் பாய்ச்சுபவர். சொர்ண ரூபம் என்று வர்ணிக்கிறது புராணம். ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும் ஐஸ்வரியங்களையும் அள்ளி வழங்கக் கூடிய வள்ளல். அதனால்தான் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்!

உத்தராயன காலத்தில் புறப்படுகிறார். தட்சிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் எனும் சிகரத்தை அடைந்து அங்கே எழுந்தருள்கிறார்.

சூரிய பகவானுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் திருமணம் நடக்க, அவர்களுக்கு சிராத்த தேவனும் யமதர்மராஜனும் மகன்களாகவும் யமுனை மகளாகவும் பிறந்தனர். இவர்களில் யமுனையும் யமனும் இரட்டைப் பிறவிகள் என்றும் சொல்லுவார்கள்.

ஒருகட்டத்தில், சூரிய பகவானின் உக்கிர கிரணங்களைத் தாங்கும் சக்தியானது மனைவி சுவர்ச்சலாதேவிக்கு குறைந்துகொண்டே வந்தது.

இதையடுத்து சுவர்ச்சலாதேவி, வனத்துக்குச் சென்று, கடும் தவம் புரிந்தாள். ஆனால் இதையெல்லாம் சூரியனாரிடம் சொல்லக் கூட சக்தியற்று இருந்தாள்.

அப்போது ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைப் போலவே பேரெழில் கொண்ட ஒரு பெண்ணை உருவாக்கினாள். கிட்டத்தட்ட நிழல் போல் தோன்றிய அந்தப் பெண், சுவர்ச்சலாதேவியைக் கண்டு வியந்தாள். மலைத்தாள். என் சாயலில் நீ இருக்கிறாய் அல்லவா. ஆகவே உனக்கு சாயா என்று பெயர் சூட்டுகிறேன் என்றாள் நான் வனத்தில் தவமிருந்து வரும் வரைக்கும், நீ நானாக இருப்பாயாக என்றாள்.

ஏதேனும் ஒரு நெருக்கடிச் சூழல் வந்தால், உண்மையைச் சொல்லுவேன் என்றாள் சாயாதேவி. அதன்பிறகு சுவர்ச்சலாதேவி தந்தை வீட்டுக்குச் சென்றாள். அவரிடம் விஷயத்தைச் சொல்ல, தந்தை கோபம் கொண்டார்.

’எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறாய். கணவனை விட்டு இப்படிப் பிரியலாமா. உன்னுடைய இடத்தை இன்னொருத்திக்குத் தரலாமா’ என்று பொரிந்து தள்ளினார்.

மனம் வெறுத்துப் போனாள் சுவர்ச்சலாதேவி. தன்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்று குதிரை உருவெடுத்தாள்.

அங்கே... சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள் சாயாதேவி. சுவர்ச்சலாவின் குழந்தைகளிடம் பிரியமும் அன்பும் கொண்டு வளர்த்தாள். சூரியனாருக்கும் சாயாவுக்கும் தபதீ என்று மகளும் ஸ்ருதச்ரவஸூ, ஸ்ருதகர்மா என இரண்டு மகன்களும் பிறந்தார்கள்.

இந்த ஸ்ருதகர்மாதான், பின்னாளில் சனீஸ்வரன், சனைச்சரன் என்றெல்லாம் போற்றப்பட்டார்!

தனக்கென குழந்தைகள் வந்ததும் மாறிப்போனாள் சாயா. இதனால் சுவர்ச்சலாவுக்குப் பிறந்த எமதர்மன் உள்ளிட்டோரிடம் கொஞ்சம் மெத்தனமாகவே நடந்துகொண்டாள். இதனால் எமதர்மன் ரொம்பவே வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது.

அப்பாவிடம் இதையெல்லாம் சொல்லி முறையிட்டார். சொல்லும்போது கண்கலங்கிப் போனார் எமதர்மன். ‘தர்மத்தின் படி நடந்து வரும் உன்னிடமே இப்படி பாரபட்சம் காட்டுகிறாளா’ என்று அதிர்ந்து போனார் தந்தை.

மனைவி மீது கடும் கோபம் கொண்டார். அவளை அழைத்து விசாரித்தார். ஆனால் சாயாதேவி பதிலேதும் சொல்லாமல் மெளனமாகவே இருந்தாள். இதில் இன்னும் ஆத்திரமடைந்த சூரிய பகவான், அவளை சிகையைப் பிடித்து இழுத்தார். அதுவரை மெளனமாக இருந்தவள், சுவர்ச்சலாதேவிக்குச் சொன்னது போல், இப்போது சொல்லும் தருணம் வந்துவிட்டதாக உணர்ந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தாள்.

தவறு சாயாதேவியிடம் இல்லை என உணர்ந்த சூரியனார், அவளை மன்னித்தார். அதேவேளையில், சுவர்ச்சலாதேவி இருக்குமிடத்தை தன் ஞானதிருஷ்டியால் கண்டறிந்தார். அங்கே சென்று, அவளையும் ஏற்றுக் கொண்டார்.

அதையடுத்த தருணத்தில்... சூரியனாருக்கும் சுவர்ச்சலாதேவிக்கும் இன்னொரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை... அஸ்வினிதேவர். தேவலோக வைத்தியர்கள் எனும் பெயர் பெற்றுத் திகழ்ந்தார். இதையடுத்து ரைவதன் எனும் மகனும் பிறந்தான்.

அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரண்டுபேருடனும் பத்மாசனத்தில் எழுந்தருளினார்.

பெருமை மிகுந்த சனீஸ்வரரின் சரிதத்தை உணர்ந்து, அவரை வணங்கி, சனிக்கிரக பாதிப்பில் இருந்து விலகுவோம். சனீஸ்வரரின் பேரருளைப் பெற்று, இனிதே வாழ்வோம்!

சனிக்கிழமை நாளில், சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். எல்லா நலமும் வளமும் தந்து, வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x