Last Updated : 06 Sep, 2018 10:19 AM

 

Published : 06 Sep 2018 10:19 AM
Last Updated : 06 Sep 2018 10:19 AM

விவிலிய மாந்தர்கள் 07: பொறுமைக்குக் கிடைத்த பரிசு

ஒரு செடி மரமானபின் அதைப் பெயர்த்தெடுத்து வேறொரு மண்ணில் நட முடியாது. நட்டாலும் புதிய மண்ணில் அது வேர்பிடிக்காது. பிடித்தாலும் அது செழிக்காது. மரத்துக்கு மட்டுமல்ல; புலம்பெயர்ந்து செல்லும் மனிதர்களும் எதிர்கொள்ளும் பெருந்துயரம் இது.

பெற்றோர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட செல்லப்பிள்ளையாக இருந்த யாக்கோபுவுக்கும் அதுதான் நிகழ்ந்தது. பெற்றோரின் பேச்சை என்றுமே தட்டாத அவரை அழைத்து, “நீ இந்த நாட்டைவிட்டு நீங்கிச் செல்” என்று அவருடைய அப்பாவும் அம்மாவும் கூறும் சூழ்நிலை வந்தால் எப்படியிருக்கும்?

கடவுளின் நண்பர் என்று அழைக்கப்பட்டவர் ஆபிரகாம். அவரது பிரியத்துக்குரிய மகன் ஈசாக்கு. அவர் ரேபேக்காளைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஏசா, யாக்கோபு என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். முதலில் பிறந்த ஏசாவைத் தந்தை ஈசாக்குக்குப் பிடிக்கும், ஏனென்றால், வேட்டையாடிக் கொண்டுவருவதில் அவன் வீரன். தாய் ரெபெக்காளுக்கோ யாக்கோபுவை அதிகமும் பிடிக்கும்.

ஏனென்றால், அவன் அமைதியே உருவானவன். தந்தையின் ஆட்டு மந்தைகளைக் கண்ணும் கருத்துமாக மேய்த்துக்கொண்டுவந்து பட்டியில் அடைத்துப் பாதுகாப்பவன். சிறந்த மேய்ப்பன். அவனைக் கண்டால் ஆடுகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும். ஓநாய்கள் அவனைக் கண்டால் பட்டியை நெருங்கப் பயந்து ஓட்டம்பிடிக்கும். அப்படிப்பட்ட யாக்கோபுவுக்கு அவருடைய அண்ணனே எதிரியாக மாறும் நிலை ஏற்பட்டது.

பெற்றோரின் கட்டளையை மதித்தார்

கடவுளாகிய பரலோகத் தந்தையை வணங்காதவர்களாக கானானில் வாழ்ந்த ஏத்தியர் இன மக்கள் இருந்தனர். அந்த இனத்தின் பெண்கள் இருவரைப் பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறாமலேயே ஏசா திருமணம் செய்துகொண்டுவந்தான். வீட்டுக்கு வந்த மருமகள்களால் ரெபேக்காளும் யாக்கோபுவும் பெரும் தொல்லைகளை அனுபவித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமைக்குப் பெயர்பெற்ற ரெபேக்காள் நொந்துபோய், “இந்தப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது” என்று குமுறினாள்.

இந்த நேரத்தில் முதுமை காரணமாக ஈசாக் கண் பார்வையை இழந்திருந்தார். இதனால் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்த ஈசாக்கு, “ நான் எவ்வளவு காலம் உயிரோடு இருப்பேன் என்று தெரியாது. நீ உடனடியாக வேட்டைக்குச் சென்று உனது வேட்டையில் கிடைத்ததில் சிறந்தவற்றைச் சமைத்து எனக்குக் கொடுத்து என் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்” என்றார்.

தந்தையின் ஆசீர்வாதம் என்பது பெருங்கொடையாவும் சொத்துரிமையாகவும் கருதப்பட்ட காலம் அது. தனக்குப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்காக மூத்த மகனுக்கே தந்தை ஆசி தருவதுதான் மரபு.

ஆனால், கடவுளை வணங்காத பெண்களை மணம்முடித்துக் கொண்டுவந்த ஏசாவுக்குத் தன் கணவனின் ஆசீர்வாதம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைத்த ரெபேக்காள், மகன் யாக்கோபுவை அழைத்து, “ உன் அண்ணன் வேட்டைக்குச் சென்று திரும்பி வருவதற்குள் உன் மந்தையில் சிறந்ததைப் பிடித்து சமைத்துக் கொண்டுபோய் உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து ஆசீர்வாதத்தை நீ பெற்றுக்கொள்” என்று கட்டளை இட்டாள்.

ஆனால் அது “தவறு, அப்பாவுக்குத் தெரிந்துவிடும். நான் ஏமாற்றியது தெரிந்தால் அவரது சாபத்துக்கு ஆளாவேன்” என யாக்கோபு மறுத்தார். “உன் அண்ணனின் ஆடைகளை அணிந்துகொண்டுபோனால் உன் தந்தையால் உன்னை அடையாளம் காண முடியாது” என்று யோசனை கூறி அம்மா வற்புறுத்தினாள். பெற்றோர் விஷத்தைக் கொடுத்தாலும் தட்டாமல் உண்ண வேண்டும் என்று நினைத்தவர் யாக்கோபு, தாயின் பேச்சைத் தட்ட முடியாமல் அவ்வாறே செய்து, அண்ணன் வருவதற்கு முன்பே தந்தையின் ஆசீர்வாதத்தை நிறைவாய்ப் பெற்றுக்கொண்டார்.

இதை அறிந்து கோபம் கொண்ட அண்ணன் ஏசா, “இன்னும் சிறிது காலத்தில் அப்பா இறந்துவிடுவார். அதன்பின் என் தம்பி யாக்கோபுவை நான் கொலைசெய்துவிடுவேன்” என்று சொல்லி, தம்பியின் மீது பகைமையை வளர்த்துக்கொண்டான். இதை அறிந்த தாய் ரேபேக்காள், பயந்துபோய் யாக்கோபுவை அழைத்தாள். “அன்பு மகனே உடனே நீ இங்கிருந்து ஓடிப்போய் ஆரான் தேசத்தில் உள்ள என் அண்ணன் லாபானிடம் அடைக்கலமாய் இரு” என்று கட்டளை இட்டாள்.

அதேபோல் ஈசாக்கும் யாக்கோபை அழைத்து, “ ஏசாவைப் போல் நீ கானான் தேசத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. உன் தாயார் கூறியதைப் போல் ஆரானுக்குச் சென்று உன் மாமன் லாபானின் மகள்களில் ஒருத்தியை மணந்துகொள்” என்றார். தந்தை, தாய் இருவரின் கட்டளையைத் தட்ட முடியாமல், அண்ணனின் கோபத்திலிருந்து தப்பிக்க, பாசமான பெற்றோர்களைப் பிரிந்து, பிறந்து, வளர்ந்த மண்ணைவிட்டு, தனது அன்பான ஆடுகளை விட்டு நீண்ட தொலைவில் இருந்த ஆரான் தேசத்துக்குப் புலம்பெயர்ந்து போனார் யாக்கோபு.

தாய்மாமனின் திட்டம்

ஆரானை அடைந்ததும் அங்கே மந்தைவெளியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த மாமனின் மகள் ராக்கேலைச் சந்தித்தார். அவளைப் பார்த்த கணமே காதலிக்கத் தொடங்கினார். ராக்கேல், யாக்கோபுவைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். தாய்மாமன் லாபான் வரவேற்றார். மருமகனாக இருந்தாலும் தனக்கு ஒரு நல்ல வேலைக்காரன் கிடைத்துவிட்டதாகவே லாபான் நினைத்தார்.

“ நீ என் உறவினனாக இருப்பினும் உனது ஊதியம் என்னவென்று சொல்” என்றார். “ஏழு ஆண்டுகள் உங்களுக்காக உழைக்கிறேன். அதன்பின் உங்கள் மகள் ராக்கேலை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்” என்று கேட்டார். லாபான் ஒப்புக்கொண்டார். ஏழு ஆண்டுகள் மின்னலாய் ஓடிமறைந்தன. திருமணமும் நடந்தது. ஆனால், முதலிரவில் ராக்கேலுக்குப் பதிலாக இருந்தவள் லாபானின் மூத்த மகளாகிய லேயாள். அடுத்தநாள் காலையில் லேயாளைத் தனது அறையில் கண்டு அதிர்ச்சியடைந்த யாக்கோபு கோபத்தால் கொதித்தார். லாபான் அவரைச் சமாதானப்படுத்தினார்.

“மூத்தவள் இருக்கையில் இளையவளுக்கு எப்படி மணம் முடிப்பேன். இன்றிலிருந்து ஏழு தினங்கள் கழித்து நீ ராக்கேலையும் மணந்துகொள்” என்று சொல்லிவிட்டு மேலும் ஏழு ஆண்டுகள் அவருக்காக உழைக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். யாக்கோபுவுக்கு வேறு வழி இருக்கவில்லை.

அவர் ராக்கேலை மனதாரக் காதலித்திருந்தார். மாமனாகிய லாபான் தன்னை ஏமாற்றியபோது, தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் அண்ணனைத் தாம் ஏமாற்றியது யாக்கோபுவுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது மிகவும் மனம் வருந்தினார். லாபான் வழியே கடவுள் பாடம் கற்றுத் தந்திருக்கிறார் என்பதை யாக்கோபு உணர்ந்தார்.

பயணம் வழியில் இழப்பு

யாக்கோபுவுக்கும் ராக்கேலுக்கும் முதலில் 11 பிள்ளைகள் பிறந்தனர். பின்னர் தன் மாமன் லாபானை விட்டுப் பிரிந்து, தனது தேசமாகிய கானானுக்குத் திரும்பிச் சென்றார். யாக்கோபுவின் 14 ஆண்டுகாலப் பொறுமைக்கும் கடும் உழைப்புக்கும் பெரிய ஆட்டு மந்தையும் கழுதைகளும் ஒட்டகங்களும் அவரிடம் இருந்தன. கானானுக்குப் பயணம் செய்யும் வழியில் நிறைமாதக் கர்ப்பிணியாய் இருந்த ராக்கேல் 12-வது மகனைப் பெற்றுவிட்டு இறந்துபோனாள்.

யாக்கோபு துடித்துப்போனார். நீண்ட பயணத்துக்குப் பின் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பெரும் அனுபவங்களுக்குப் பின் ஒரு முழுமையான மனிதனாக மாறியிருந்தார் யாக்கோபு. எத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் தன்னைக் கைவிட மாட்டார் என்று நம்பினார். அவர் நம்பியபடியே சொந்த தேசம் திரும்பிய யாக்கோபுவைக் கடவுள் ‘இஸ்ரவேல்’ என்று பெயரிட்டு அழைத்தார். அவரது வம்சத்திலிருந்தே இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் கிளைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x