Published : 20 Sep 2018 11:20 AM
Last Updated : 20 Sep 2018 11:20 AM

ஸ்வாமி தேசிகனும் திருவாய்மொழியும்

நம் ஆத்மாவை விட்டுத் தனித்து நம் உடல் இருக்காது. அதனால்தான் நம் உடலையும் நம்மையும் ஒன்றாகவே பேசுவது வழக்கில் உள்ளது.

அந்த அழகான ஆண் மகன் நன்கு பேசுகிறான் என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வெறும் உடல் பேசுமா? பேசாதே. உடலின் உள்ளே இருக்கும் ஆத்மாதானே பேசவல்லது.

ஆனால், ஆத்மா ஆணும் அல்லன். பெண்ணும் அல்லன் அல்லவா? ஆண் பெண் என்பது எல்லாம் உடலின் அமைப்பிலேதானே உள்ளது. எனவே, அந்த அழகான ஆண் நன்கு பேசுகிறான் எனும்போது அந்த அழகான ஆண் உடலில் உள்ள ஆத்மா நன்கு பேசுகிறான் என்றுதானே பொருள்.

இப்படிப் புறப்பொருளான உடலும் அகப்பொருளான ஆத்மாவும் வெவ்வேறு  பொருட்களாக இருப்பினும் இரண்டையும் ஒரு பொருளாகவே குறிக்கும் வழக்கு உலகில் பரவி உள்ளது.

அதுபோலத்தான் திருமாலின் உடலாகிய நம் ஆத்மாவையும் அதாவது நம்மையும் நமக்கு அகப் பொருளான திருமாலையும் ஒன்றாகவே வேதங்கள் குறிப்பிடுகின்றன. இந்த  அடிப்படையில்தான்  “அஹம் ப்ரஹ்ம அஸ்மி”, “தத் த்வம் அஸி ச்வேதகேதோ!”, “அதாதோ அஹங்காராதேச:” போன்ற வேத வாக்கியங்கள் எழுந்துள்ளன.

இப்படித் “திருமாலும் நாமும் ஒன்றே” என்று கூறுவது உலக வழக்கில் உடலையும் அதன் உயிரையும் ஒன்றாகவே கூறுவது போலவே. எனவே, இவ்வழக்கு ஆகுபெயர் முதலியவை  அல்லாது முக்யார்த்தத்திலேயே எழும் வழக்கு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

இந்த அடிப்படையில்தான் நம்மாழ்வார் தமது திருவாய்மொழி ஐந்தாம் பத்திலே ஆறாம் பதிகத்திலே கடல் ஞாலத்து உலகைப் படைத்தேனும் யானே என்று தொடங்கித் திருமாலையும்  தன்னையும் ஒன்றாகவே காட்டும் பத்துப் பாடல்களைப் பாடுகிறார்.

இப்படித் திருமாலையே அகப்பொருளாகக் காட்டும் இந்தப் பதிகம் வேதாந்தக் கொள்கையான அத்வைதத்தை – அதாவது விசிஷ்டாத்வைதத்தை விளக்கும் ஒப்பற்ற பதிகம். இப்பதிகம் காட்டும் இந்த வேதாந்த விழுப் பொருளை நெஞ்சில் கொண்டு முதல் ஸ்லோகத்தில் திருவாய்மொழி நம் அகப்பொருளான திருமாலை நம் கண்ணிலே காட்ட வேண்டும் என்ற வாழ்த்துடன் இந்நூலைத் தொடங்குகிறார்.     

பாற்கடல் பரந்தாமன் பள்ளி கொள்ளுமிடம். திருவாய்மொழியும் அப்படியே. எனவே, திருவாய்மொழியும் ஒரு பாற்கடலே!

தலைமை தாங்கும் திருவாய்மொழி

முனிவர்கள் எழுதியுள்ள புராணம் மற்றும் இதிகாசங்கள் இணைந்து, வேதத்தை நாம் புரிந்துகொள்ளும்படி செய்து வேதத்துக்கு உபப்ருஹ்மணமாகப்  பணிவிடை செய்கின்றன. அதே பணிவிடையைத்தான் திருவாய்மொழியும் செய்கிறது. ஆனால், அப்பணிவிடையைச் செய்வதில் அவற்றுக்கு எல்லாம் முன்னணியில் தலைமை தாங்கி நிற்கிறது.

இப்படித் தமிழ்மொழியின் ஏற்றத்தையும் திருவாய்மொழியின் பெருமையையும் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிப் புரட்சியைச் செய்திருக்கிறார் ஸ்வாமி தேசிகன். ராமானுஜருடைய சமுதாயப் புரட்சிகள் பற்றி குருபரம்பரையும் செவிவழிச் செய்திகளுமே பேசுகின்றன. அவருடைய நூல்களில் அவருடைய அத்தகைய புரட்சிகளுக்கு அகச்சான்று ஒன்றும் இல்லை. ஆனால், அவருடைய அருளுக்கு இருப்பிடமான ஸ்வாமி தேசிகனுடைய நூல்களில்தான் ராமானுஜருடைய சமுதாயப் புரட்சிகளுக்கு  அகச்சான்றுகள் பல உள்ளன. அதில் இதுவும் ஒன்று!

திருவாய்மொழியின் கருத்தை ஒரே வரியில் சொல்லலாம். ஆம். திருமாலே அவனைப் பெறுவதற்கு அதாவது - மோக்ஷம் பெறுவதற்கு வழி. இதே கருத்தை அழகிய தமிழில் ஆறும் பேறும் அவனே என்றும் சொல்லலாம். இதனையே உபாயமும் உபேயமும் திருமாலே என்றும் ப்ரபாகமும் ப்ராப்யமும் திருமாலே என்றும் சொல்லுவர்.

திருடிச் செல்ல முடியாத ரத்தினமாலை

ஸ்வாமி தேசிகன், நூறு பதிகங்களிலும் உள்ள ஆயிரம் பாடல்களும் உணர்த்தும் ஆயிரம் பண்புகளையும் பட்டியல் இட்டுத் தருகிறார் .

swami 2jpg

இந்த நூலுக்கும் சுருக்காக ‘த்ரமிடோபநிஷத் ஸாரம்’ என்ற மற்றொரு சிறிய கவிதை நூலையும் சம்ஸ்க்ருதத்தில் அருளி  தமிழ் உபநிஷத்தின் ஏற்றத்தைத் தமிழ் தெரியாதவர்களும்  உணரும்படிச் செய்தார்.

முத்தாய்ப்பாக ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ ’, ரங்கநாதனுடைய இதயத்திலே அகலாது திகழும் ரத்தினஹாரம். இது எந்தவிதக் குறையும் அற்றது. ஆம். யாருமே திருடிச் செல்ல முடியாத மற்றும் சிதைக்கவும் முடியாத ரத்தினமாலை இது என்கிறார்.  உண்மைதானே!

அயல் நாட்டவர் படையெடுத்து அரங்கனின் பொன், மணி முதலியவற்றைக் கொள்ளை அடித்தார்கள். அந்தக் கொடுமையை நேரே கண்டவர் ஸ்வாமி தேசிகன். என்ன பாடுபட்டிருப்பார்!

எனவே, அரங்கனின் இதயத்தை விட்டு அகற்ற முடியாத ரத்தினஹாரமாக இதைச் சமர்ப்பித்தார் ஸ்வாமி தேசிகன்.

நம் இதயத்திலும் இது அகலாது இருப்பின் அரங்கனும் ஆழ்வாரும் ராமானுஜரும் நம்மை  எப்படி நேசிப்பார்கள் என்பதை வர்ணிக்கவும் முடியுமா?

(ஸ்ரீ வேதாந்த தேசிகர் நூலில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்)
 

ஸ்ரீ வேதாந்த தேசிகர்

ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் 750

தமிழ் திசை வெளியீடு, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,

சென்னை- 600 002. போன்: 044-30899000

மின்னஞ்சல்: inbaraj.s@thehindutamil.co.in

நூலின் விலை: ரூ. 300/-


இந்தியாவுக்குள் புத்தகத்தை அஞ்சலில் பெற அஞ்சல் செலவு ரூ.40 சேர்த்து, KSL MEDIA LIMITED என்ற பெயரில் டிடி அல்லது செக் அனுப்ப வேண்டும். நூல் அனுப்ப வேண்டிய உங்கள் முகவரி மற்றும் செல்பேசி எண்ணை அவசியம் குறிப்பிடுங்கள். புத்தக விற்பனையாளர்கள் தொடர்பு கொள்ள: 7401296562. நூலைப் பெறுவதற்கு 7401296562 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

- ஸ்ரீ உ.வே. வில்லூர் நடாதூர் ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனம் கருணாகராசாரியார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x