Last Updated : 13 Sep, 2018 10:35 AM

 

Published : 13 Sep 2018 10:35 AM
Last Updated : 13 Sep 2018 10:35 AM

விவிலிய மாந்தர்கள் 08: சேராத இடம்தனில் சேர்ந்தவள்

ஆபிரகாமின் பேரன் யாக்கோபுவுக்கு மொத்தம் பன்னிரண்டு மகன்கள். யாக்கோபுக்குச் மகள்களும் இருந்தனர். ஆனால் ஒரேயொரு மகளின் பெயர் மட்டுமே விவிலியத்தில் பதிவாகி இருக்கிறது. பெற்றோரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத அவளது வாழ்க்கை மனிதகுலத்துக்குப் பெரும் பாடம். அவள், யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த பெண். அவளுடைய பெயர் தீனாள்.

கடவுள் தம்முடைய மக்களுக்காகத் தேர்வு செய்துகொடுத்த தேசமே கானான். அந்த தேசத்தில் ஏபேல் மலைக்கும் கெரிசீம் மலைக்குமிடையே இருந்த செழுமையான பள்ளத்தாக்கில்தான் சீகேம் என்ற சிறிய நகரம் அமைந்திருந்தது. சீகேம் பட்டணத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த பசுமையான புல்வெளிகள் அடர்ந்திருந்த இடத்தில்தான் யாக்கோபு தனது குடும்பத்தோடும் மந்தைகளோடும் கூடாரம் போட்டு வசித்து வந்தார்.

அங்கே கடவுளாகிய பரலோகத் தந்தைக்கு ஒரு பலிபீடத்தைக் அவர் கட்டினார். அதற்கு ‘இஸ்ரவேலின் தேவனே தேவன்’ என்று பெயர் சூட்டி, தனது குடும்பத்தாருடன் கடவுளுக்கு உண்மை வணக்கத்தைச் செலுத்தி வந்தார். மேலும் தனது கூடாரத்தின் அருகிலேயே குடிநீர்த் தேவைக்காக ஒரு கிணற்றைத் தோண்டியிருந்தார். அந்தக் கிணற்றின் தண்ணீர்ச் சுவையால் அது ‘யாக்கோபுடைய கிணறு’ என்று சீகேம் நகரம்வரை புகழ்பெற்றது.

தீக்குள் விரலை வைத்தாள்

யாக்கோபுவுக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள். பன்னிரண்டு மகன்களும் மந்தைகளைப் பொறுப்புடன் மேய்த்துப் பராமரிக்கிறவர்கள். பெற்றோருக்கும் கடவுளுக்கும் பணிந்து வாழும் தனது பிள்ளைகளின் உழைப்பையும் குணத்தையும் கண்டு யாக்கோபு கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

தனது கால்நடைத் தொழிலால் விளைந்த பெருஞ்செல்வம் அவரிடம் இருந்தபோதும் அருகிலிருந்த பளபளப்பான சீகேம் பட்டனத்தில் போய் அவர் வசிக்க விரும்பவில்லை. காரணம் அந்த நகரத்தில் வசித்து வந்த ஏவியர்கள் கற்பனை உருவங்களை வழிபட்டு வந்தனர்.

அவர்கள் கடவுளின் கட்டளைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள். படாடோபமான வாழ்க்கை, ஆடம்பரமான ஆடை, அணிகள், அலங்காரத்தின் மீது மோகம், கட்டற்ற மதுப்பழக்கம், முறையற்ற வாழ்க்கை, குற்றங்களில் ஈடுபாடு என வாழ்த்தார்கள். அதனால் யாக்கோபுவைப் பொறுத்தவரை சீகேம் ஒரு விலக்கப்பட்ட நகரம்.

அதன் வாடை தன் கூடாரத்தை எக்காலத்திலும் நெருங்கிவிடக் கூடாது என்றுதான் அதிலிருந்து விலகி சற்று தூரத்தில் வசித்துவந்தார். ஆனால் அந்த நகரம் ஏற்படுத்திய கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட யாக்கோபுவின் மகள் தீனாள், தனது குடும்பத்தின் கூடாரத்துக்கு வாதையைக் கொண்டுவந்து சேர்த்தாள்.

சீகேம் பட்டிணத்தின் பெண்கள் விதவிதமாக அணிந்த ஆடைகளைக் கண்டாள். நீண்ட அங்கியும் முக்காடும் அணியும் தனது குல வழக்கத்துக்கு நேர்மாறாக முக்காடின்றி சீகேம் பட்டிணத்தின் பெண்கள் தலைமுடியை விதவிதமாய் அலங்கரித்திருந்தது தீனாளைத் தொந்தரவு செய்தது. அவர்களது கேலிப் பேச்சும் சிரிப்பொலியும் அவளைப் பொறாமைப்பட வைத்தன. அந்த நகரத்தின் பெண்கள் கட்டற்ற சுதந்திரத்துடன் இருப்பதாக அவள் நினைத்தாள்.

அதனால் தனது பெற்றோரின் அனுமதி பெறாமலேயே சீகேம் நகரப் பெண்கள் சிலருடன் தீனாள் நட்பை ஏற்படுத்திக்கொண்டாள். ஆம்! அவள் தீக்குள் விரலை வைத்தாள். தனது பெற்றோரும் அண்ணன்களும் சீகேமை விட்டு விலகியிருப்பதற்கான காரணத்தை அவள் அறிந்தும் அறியாமலும் தனது பொழுதைக் கழிப்பதற்காக அவள் அடிக்கடி சீகேம் பட்டணத்துக்கு வரத் தொடங்கினாள்.

இச்சைக்கு இறையான பேதை

சூதுவாது அறியாத வெள்ளதியான மனம் கொண்ட தீனாள், சீகேம் பட்டினத்துக்கு வந்துசெல்வது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நம்பினாள். ஆனால் முக்காடு விலகிய அவளது முகத்தின் அழகை ஓர் இளைஞன் கண்டான். அவனது பெயரும் அந்தப் பட்டிணத்தின் பெயர்தான். சீகேம் என்ற அந்த இளைஞன் அந்தப் பட்டிணத்தின் தலைவராக இருந்த ஏமோர் என்பவரின் மகன். தீனாளின் அழகில் மயங்கிய அந்த நிமிடமே, சீகேம் அவள் மீது இச்சை கொண்டான். தீனாளை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் பலாத்காரம் செய்தான்.

தீனாள் அழுதாள். அவனோ அவளைத் திருமணம் செய்துகொள்வதாக சமாதானப்படுத்தினான். ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக அவளை பாலியல் பலாத்காரம் செய்தது, சீகேமின் வாழ்க்கை முறையின்படி அவனுக்குக் குற்றமாகத் தெரியவில்லை. ஆனால் தீனாள் தலைகுனிந்து அழுதாள். அழுதுகொண்டே இருந்தாள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் தோற்றுப்போய்விட்டோமே எனக் குமுறினாள். சீகேமின் வீட்டிலிருந்தும் அவள் வெளியேறித் தப்பிக்க முடியாதபடி அவள் அடைக்கப்பட்டிருந்தாள்.

வழிந்தோடிய ரத்தம்

தன்னுடைய மகளது வாழ்வைச் சீரழித்த சீகேம் மீது கோபம் கொண்டார் தந்தை யாக்கோபு. ஆனால் மந்தைகளை மேய்த்துத் திரும்பிய சகோதரர்கள், தங்கள் தங்கைக்கு நேர்ந்த அவமானத்தைக் கேள்விப்பட்டுக் கொதித்தனர்.

சீகேம் நகரத்துக்குள் புகுந்து ஏமோரையும் அவரது மகன் சீகேமையும் அந்த நகரத்தில் இருந்த மற்ற ஆண்களையும் கொன்று குவித்தார்கள். சீகேம் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது. அந்தச் சகோதர்கள் அந்த நகரத்தைக் கொள்ளையடிக்கவும் செய்தார்கள். பின்னர் சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.

இடம்பெயர்ந்த குடும்பம்

தீனாளின் கூடாத நட்பால் தனது மகன்கள் கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறி நிற்பதைக் கண்டு, யாக்கோபு மனமுடைந்தார். அவர் தனது மகன்களைப் பார்த்து, “இந்தத் தேசத்தில் இருக்கிற கானானியர்கள், பெரிசியர்கள் மத்தியில் என்னுடைய பெயரைக் கெடுத்துவிட்டீர்கள். அவர்கள் கூட்டமாக வந்து சிறு குழுவாக இருக்கும் நம்மை அழித்துவிடுவார்களே.. நான் என்ன செய்வேன் ” என்று வருந்தியவர், கடவுளின் பலி பீடத்தின் முன்னாள் போய் அமர்ந்து அழுதார்.

அப்போது அவரிடன் பேசிய கடவுள், “நீ புறப்பட்டுப் போய் பெத்தேலில் குடியிரு” என்றார். தன் இளம்பிராயத்தில் தன் சகோதரன் ஏசாவுக்குப் பயந்து சொந்தத் தேசத்தைவிட்டு ஓடிய யாக்கோபு, தற்போது தனது மகள் செய்த காரியத்தால் குடும்பத்துடன் கடவுளுக்குக் கட்டிய பலிபீடத்தையும் தண்ணீர் கிணறும் இருந்த தனது இடத்தைக் விட்டுக் கிளம்பும் நிலைக்கு ஆளானார்.

கொரிந்தியர் புத்தகம் சொல்கிறது, ‘ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்’ என்று. நீதிமொழிகள் அதிகாரம் 13-ல் 20-வது வசனம் சொல்கிறது, ‘ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்’. தீனாள் சேராத இடம்தனில் சேர்ந்து ஏமாந்தாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x