Last Updated : 25 Apr, 2014 02:49 PM

 

Published : 25 Apr 2014 02:49 PM
Last Updated : 25 Apr 2014 02:49 PM

அறிவை வளர்த்த மதம்

கல்வி நிலையங்களுக்கு ஏன் தமிழில் பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பள்ளி என்ற சொல்லுக்குப் படுக்கை என்றே அர்த்தம். அதிலிருந்துதான் பள்ளியறை என்ற சொல் வந்தது. எதையும் செயற்கையாக உருவாக்கிக் கொள்ளாத சமணத் துறவிகள் ஓய்வெடுப்பதற்காக, பாறைக் குன்றுகளில் இருந்த குகைகளில் படுக்கை செதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனால் சமண முனிவர் வாழ்ந்த இடங்கள் பள்ளி எனப்பட்டன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு: திருச்சிராப்பள்ளி. சிரா என்ற முனிவர் திருச்சி மலைக்கோட்டையில் வாழ்ந்துவந்ததால், அந்த ஊர் சிராப்பள்ளி எனப்பட்டது. மரியாதை நிமித்தம் திரு சேர்ந்து, திருச்சிராப்பள்ளி ஆனது.

சமணத் துறவிகள் தங்கிய இந்தப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை உட்காரச் செய்து அறிவுதானத்தை வழங்கிவந்ததால், அந்த இடம் பள்ளிக்கூடம் எனப்பட்டது. இந்தப் பள்ளிகளில் எழுத்துகளைக் கற்பிக்கத் தொடங்கும்போது, ‘சித்தர் வணக்கம்' கூறி ஆரம்பிப்பதே வழக்கம். இதுவே பின்னர் திண்ணைப் பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்தது.

ஹரி நமோத்து சிந்தம்

பழங்காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரிச்சுவடி கற்பிக்கத் தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது வழக்கமாக இருந்துவந்தது. ‘ஹரி நமோத்து சிந்தம்' என்று முதலில் கூறிய பின்னர்தான், ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தொடங்குவார். இக்காலப் பள்ளிகளில் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை.

பழங்காலத்தில் இருந்துவந்த இந்தப் பழக்கத்தில் ‘சிந்தம்' என்று கூறப்பட்டது, ‘சித்தம்' என்பதன் திரிபு வடிவம்தான். சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சப் பரமேஷ்டிகளில் ஒருவர். அனைவருக்கும் மூத்தவர், நிலம் என்று இரண்டு அர்த்தங்கள் இதற்கு உண்டு. இதனால்தான் சமணர், சித்தர் வணக்கம் செய்து வந்தனர்.

தமிழகத்தில் சித்தர் வணக்கம் செய்த பிறகு கற்பிக்க ஆரம்பித்தது போலவே, கர்நாடகத்தில் ‘சித்தம் நம' என்று கூறியே எழுத்துகளைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் என்று புராணம் கூறுகிறது.

முதன்முதலில் சமணர்களே தமிழகத்தில் சாதி வேற்றுமை கடந்து, பால் வேற்றுமை கடந்து கல்வியை வழங்கியதால், சித்தர் வணக்கம் சொல்லும் வழக்கத்தை மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பித்தனர் என்று கொள்ளலாம்.

இதன் மூலம் பள்ளிக்கூடம் என்ற பெயரும், சித்தர் வணக்கம் செய்யும் முறையும் சமணர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டவை என்பதை உணரலாம் என்று தமிழ் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரியும் மாணவர்களும்

அதேபோல, கல்லூரி என்ற உயர்கல்வி நிலையத்தைக் குறிக்கும் சொல் சீவக சிந்தாமணியின் 995வது வரியிலுள்ள 'கல்லூரி நற்கொட்டிலா' என்ற தொடரிலிருந்து பெறப்பட்ட சொல்தான் என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன்.

'மாணாக்கன்', 'மாணாக்கி' என்ற சொற்களும் சமணக் கல்வெட்டுகளில் இருந்து பெறப்பட்டவையே. சமண ஆண் துறவிகள் மட்டுமில்லாமல், சமணப் பெண் துறவிகளும் கல்வி போதித்து வந்துள்ளனர். பெண் கல்வி வளர்ச்சிக்குச் சமணம் ஊக்கம் அளித்துள்ளது.

அந்தக் காலத்தில் சமண மதத்தின் அளவுக்கு மற்ற மதங்கள் கல்விக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காததை மேற்கண்ட விஷயங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x