Last Updated : 20 Sep, 2018 11:21 AM

 

Published : 20 Sep 2018 11:21 AM
Last Updated : 20 Sep 2018 11:21 AM

காற்றில் கீதங்கள் 01: குழந்தைகள் தொடுக்கும் இசை மாலை!

இசை உலகில் குல்தீப் முரளிதர் பை ஓர் அஷ்டாவதானி. கர்னாடக இசையை என்.பி.ராமசுவாமி, ஓ.எஸ். தியாகராஜன் ஆகியோரிடம் கற்றுக் கொண்ட குல்தீப், ஹரிஹரனிடம் வயலின் வாசிப்பதற்கும் ராமமூர்த்தியிடம் மேற்கத்திய வாத்தியமான பியானோ வாசிப்பதற்கும் கற்றுக் கொண்டவர்.

டென்னிஸ், வைக்கம் எஸ்.கோபக்குமார், `கலாமண்டலம்’ கிருஷ்ணன் குட்டி, மன்னார்குடி ஈஸ்வரன் ஆகிய நான்கு பேரிடம் மிருதங்கம் வாசிப்பதற்கு கற்றுக் கொண்டார். ஹார்மோனியத்தையும் புல்லாங்குழலையும் தன்னிச்சையாக வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். இசை உலகில் இவரின் `அத்வைதியா’ ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இந்த இசை ஆல்பத்தில் இவர் பாடும் பாடல்களுக்கு பக்கவாத்தியமாக இவரே வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தபேலா, ஹார்மோனியம் வாசித்திருப்பார்.

காற்றில் தொடுத்த இசை மாலை

அடுத்த தலைமுறைக்கு பக்தி இசையை, குறிப்பாக குழந்தைகளைப் பாடவைத்தே அளிப்பதற்காக குல்தீப் பை தேர்ந்தெடுத்த ஊடகம் யூடியூப். `வந்தே குரு பரம்பரம்’ என்னும்   யூடியூப் சேனலில் இவர் இசையமைத்து குழந்தைகளுடன் சேர்ந்து பாடியிருக்கும் ஸ்லோகங்களும் பாடல்களும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களிடையே அன்பையும் பக்தியையும் பரப்பிவருகின்றன.

குழந்தையும் தெய்வமும்

கணேச பஞ்சாட்சரம், சிவாஷ்டகம், நமோ நமோ பரதாம்பே, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், பவானி அஷ்டகம், ராம அஷ்டகம் போன்றவற்றுக்கு இசையுடன் கூடிய வடிவத்தை அளித்திருக்கிறார்.

சாதி ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தவர் அன்னமாச்சார்யா. ‘இறைவன் ஒருவனே. அவன் பாரபட்சம் இல்லாதவன். சாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு’ என்பதை விளக்க அவர் எழுதிய பாடல்தான் ‘பிரம்மம் ஒக்கடே’.

இது போன்ற பாடல்களையும் குழந்தைகளைக் கொண்டே பாடவைத்து பதிவுசெய்து வெளியிட்டிருக்கிறார் குல்தீப் பை. இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சூர்யகாயத்ரி என்னும் சிறுமிக்கு இன்றைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். உச்சரிப்பு சுத்தம், ஸ்ருதி ஞானத்துக்கு உதாரணம் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி. சிறுமி சூர்யகாயத்ரியிடமும் வெளிப்படும் இத்தகைய அம்சங்கள்தான் அவருடைய இசையை தெய்வீகமாக்குகின்றன.

கணேச பஞ்சாட்சரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x