இஸ்லாம் வாழ்வியல்: உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

இஸ்லாம் வாழ்வியல்: உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
Updated on
1 min read

உலகியல் சாதனைகளும், அதன் வெற்றிகளும் இம்மை, மறுமை ஈருலகிலும் வெற்றித் தருபவையாக இருத்தல் வேண்டும். இதை வலியுறுத்தும்விதமாகவே நபிகளார் இப்படி பிரார்த்திக்கிறார்:

“இறைவா! பசியிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.  நேர்மை வழுவாமலிருக்கவும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”

வறுமையும் அதன் கொடுமையும் உலகியல் துன்பங்கள். ஆனால், வாய்மையில் வழுவுவது என்பது மறு உலகில் தீராத துன்பங்களுக்கு ஆளாக்கிவிடும். அதனால்தான் நபிகளார் இந்த இரண்டிலும் வெற்றியைத் தர இறைவனிடம் கையேந்தி நின்றார். இறைவனின் திருத்தூதர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பாகவே நபிபெருமகனார் தூய்மையான தமது நடத்தைகளால், அல் அமீன், அஸ்ஸாதிக் (நம்பிக்கைக்குரியவர்), உண்மையாளர் போன்ற சிறப்புப் பட்டங்களை மக்களிடையே பெற்றிருந்தார்.

இதேபோலதான் மூஸா (மோசஸ்) நபியும் மக்கள் போற்றும் நேர்மையாளராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். அந்த வனாந்திரப் பாலை நிலத்தில் வசித்து வந்த ஒரு முதியவரின் இரண்டு மகள்கள் கொண்டுவரும் கால்நடைகளுக்கு முன்னுரிமை அளித்து நீரருந்த வழிவகைச் செய்தார்.அவர்களைக் கண்ணியமான முறையில் நடத்தினார்.

மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார். பிறகு. ஒரு மர நிழலில் போய் அமர்ந்து கொண்டார். “என் இறைவா..! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி.. நான் அதன் பக்கம் தேவையுடையவனாகவே இருக்கின்றேன்!”

சிறிது நேரத்தில் திரும்பி வந்த பெண்களில் ஒருத்தி, நாணத்தோடு, அவரிடம் வந்து கூறினாள்: “நீங்கள் எங்கள் கால்நடைகள் நீரருந்த செய்த உதவிக்கு கைம்மாறு  செய்ய என்னுடைய தந்தையார், தங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைக்கிறார்.”

அந்த அழைப்பை ஏற்றுச் சென்ற மூஸா தன்னைக் குறித்து அந்த முதியவரிடம்  அறிமுகம் செய்துகொள்ள, அந்த முதியவர் அவருக்கு ஆறுதல் சொன்னார். இதனிடையே, இரு பெண்களில் ஒருத்தி மூஸாவின் நடத்தைக் குறித்து சான்றளித்து இப்படி பரிந்துரைக்கவும் செய்தாள்: “தந்தையே! வலிமை மிக்கவரும், நம்பிக்கைக்குரியவருமான இவரை நாம் பணிக்கமர்த்திக் கொள்வது மிகவும் சிறந்தது.!”

இந்த நிகழ்வின்போது மூஸா, நபி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை. அன்றைய எகிப்தை அரசாண்ட கொடுங்கோலன் பிர்அவ்னின் (பாரோ மன்னன்) அரசவைக்குச் சென்று ஒடுக்கப்பட்டவர் உரிமைக்காக போர்க்குரல் எழுப்பவும் இல்லை. அவர் தீர்க்கத்தரிசியாகத் தேர்வு  செய்யப்படுவதற்கு முன்பே நடந்த சம்பவம் இது.

இத்தகைய உயரிய பண்பாளரைத்தான் இறைவனும் தனது தூதர்களாக தேர்ந்தெடுக்கிறான். அதிலும் வறுமையிலும், துன்பத் துயரங்களிலும் வாடி, வதங்கி புடம்போடப்பட்ட நல்லாத்மாக்களே நேர்மையாளராகவும், மக்கள் போற்றும் நம்பிக்கையாளராகவும் இருப்பர். இறைவனின் வல்லமையைப் ஏற்று அடிபணிந்து வாழ்வதுபோலவே அவனது படைப்புகளான மனிதர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவும், அவற்றை நிலைநிறுத்தவும் இத்தகைய தூய ஆத்மாக்களாலேயே முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in