

யமுனோத்ரிக்குப் பயணம் செய்பவர்கள் ஜானகிசட்டி என்ற இடத்திலிருந்துதான் மலைமேல் ஏற வேண்டும். அங்குள்ள நீர் ஊற்று ஒரு பெரிய தொட்டி போன்ற இடத்தில் விழுகிறது. அந்தக் குளிர்காலத்திலும் அங்குள்ள நீர் ஊற்றில் வெந்நீர் வருகிறது. தொட்டி முழுவதும் நிரம்பி வழியும். அந்த வெந்நீர் ஊற்றில் மிதமான சூட்டில் எல்லாரும் குளித்து உடைமாற்றி இமயமலை மேல் யமுனா உற்பத்தியாகும் தலமான யமுனோத்ரியைக் காணச் செல்கின்றனர். யமுனாதேவி கோவிலில் அம்மன் தரிசனம் காணலாம். யமுனோத்ரி மலைப்பாதை குறுகலானது. அந்தப் பகுதிக்கு கால்நடையாக ஏறிச்சென்றால் அங்கேயும் கௌரிகுண்ட் என்னும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது.
பத்ரிநாத் கோவில் அருகில் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. அது மிகச் சூடான ஆவி பறக்கும் நீர் ஊற்று. அதில் நேரடியாக இறங்கிக் குளிக்க முடியாது. யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத் ஆலய தரிசனம் செய்பவர்கள் இந்த வெந்நீர் ஊற்றுகளில் நீராடிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.