முல்லா கதைகள்: இறுதி நாள்

முல்லா கதைகள்: இறுதி நாள்

Published on

முல்லாவின் அண்டை வீட்டுக்காரர்கள், அவர் வளர்த்துவந்த கொழுத்த ஆட்டுக்குட்டியின் மீது நீண்டகாலமாகக் கண்வைத்திருந்தனர். அந்த ஆட்டுக்குட்டியை விருந்து வைக்கும்படி முல்லாவை வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர்.

ஆனால், அவர்களின் திட்டம் ஒவ்வொன்றும் தோல்வியே கண்டது. ஒருநாள் முல்லாவிடம் சென்ற அவர்கள்,  இருபத்தி நான்கு மணி நேரத்தில் உலகம் அழிந்து விடும் என்று நம்பவைத்தனர்.

‘அப்படியென்றால், நாம் அதைச் சாப்பிட்டுவிடுவதுதான் நல்லது’ என்று ஒப்புக்கொண்டார் முல்லா. தங்கள் திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்த அவர்கள், முல்லா வைத்த விருந்தை மூக்குமுட்டச் சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்தவுடன், அனைவரும் தங்கள் மேலங்கியைக் கழட்டிவைத்துவிட்டு, உறங்கிப் போயினர். சில மணி நேரம் கழிந்தது.  அவர்கள் கண்விழித்து பார்க்கும்போது, அவர்களின் மேலங்கிகள் அனைத்தையும் முல்லா தீயில் இட்டு எரித்துக்கொண்டிருந்தார்.

என்ன முல்லா இப்படிச் செய்கிறீர்கள் என்று அவர்கள் அனைவரும் கோபத்தில் அலறினர்.

‘சகோதரர்களே, நாளைதான் உலகின் இறுதி நாள் என்பது ஞாபகம் இருக்கிறதுதானே? அப்படியிருக்கும்போது, உங்களுக்கு எதற்கு மேலங்கிகள்’ என்று அண்டை வீட்டாரிடம் சாவதானமாகக் கேட்டார் முல்லா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in