ஆன்மிக நூலகம்: ஏதாவதொன்றை வணங்குங்கள்

ஆன்மிக நூலகம்: ஏதாவதொன்றை வணங்குங்கள்
Updated on
1 min read

உங்களைவிட ஏதோவொன்றை மிகமிகப் பெரிதென நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தலை வணங்குவது இயல்பாகவே உங்களுக்கு வரும். ஒரு பக்தராக வேண்டுமெனில், நீங்கள் இதைச் செய்யலாம்.

கண்விழித்திருக்கும் நேரத்தில், ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறையேனும் உங்கள் கைகளைக் கூப்பி ஏதோவொன்றை வணங்குங்கள். அது யார் என்பதோ, எது என்பதோ பொருட்டல்ல.

ஆனால் “இதை வேண்டாம், அதை வணங்குவோம்” என்று தேர்வு செய்யாதீர்கள். அந்த நேரத்தில் எதைப் பார்க்கிறீர்களோ, அதை வணங்குங்கள். அது ஒரு மரமோ, மலையோ, நாயோ, பூனையோ, இல்லை வேறெதுவோ.

கைகள் கூப்பி வெளிப்படையாக வணங்கவேண்டும் என்று கூட இல்லை. உள்மனத்தில் அதை முழுமையாக வணங்குங்கள். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை இதைச் செய்யுங்கள். மெதுவாக ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் இதேநிலையில் இருக்க முடிகிறதா என்று பாருங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த உணர்வில் நீங்கள் இருக்க ஆரம்பிக்கும்போது, உங்கள் கைகளையோ, உடலையோ பயன்படுத்தத் தேவையில்லை; உங்களுக்குள் அந்த உணர்வில் இருப்பதே போதுமானது. இந்நிலை உங்கள் இயல்பாகும்போது, நீங்களும் ஒரு பக்தர்.

வாழ்க்கை முழுவதும் முயன்றாலும்கூட, ஒரு இலையையோ, யானையையோ, எறும்பையோ, அணுவையோ உங்களால் புரிந்துகொள்ள முடியாது. மரபணுவின் ஒரேயொரு அணுத்திரளைப் புரிந்துகொள்ளும் திறன்கூட உங்களிடம் கிடையாது.

உங்களால் புரிந்துகொள்ள முடியாதவை அனைத்தும், அதன் படைப்பளவில், உங்களைவிட உயர்ந்த புத்திசாலித்தனத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் பார்க்கும்போது, நிஜமாகவே உணரும்போது, நீங்கள் ஒரு பக்தராக இருப்பீர்கள்.

ஒரு பக்தர் என்பவர், தன் பக்தியின் நோக்கத்தில் முழுமையாகக் கரைந்துவிட விருப்பத்தோடு இருப்பார். நீங்கள் வாழ்வின் பக்தர் என்றால், அதோடு ஒன்றாகிவிடுவீர்கள். வாழ்வின் செயல்முறையில், மூன்றாம் மனிதர் போல் விலகி இருக்காதீர்கள். பக்தராக இருங்கள், கரைந்து விடுங்கள்.

ஈஷா யோகா உன்னை அறியும் விஞ்ஞானம்

சத்குரு ஈஷா அறக்கட்டளை,

15, கோவிந்தசாமி நாயுடு லேஅவுட்,

சிங்காநல்லூர்,

கோயம்புத்தூர் – 641 005

விலை : 180/-

தொடர்புக்கு : 0422 2515345

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in