Last Updated : 07 Jun, 2019 12:49 PM

 

Published : 07 Jun 2019 12:49 PM
Last Updated : 07 Jun 2019 12:49 PM

குளியலறையில் கல் உப்பு; கண் திருஷ்டி, தரித்திரம் விலகும்!

கல்லடி பட்டாலும் படலாம். ஆனால் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அதாவது கண் திருஷ்டி என்பதுதான் மிக மோசமானது என்பதை வலியுறுத்துவதற்காக இப்படிச் சொல்லிவைத்தார்கள்.

’அவங்க பாக்கறதே சரியில்ல. நாம வண்டி வாங்கிட்டோம்னு பொறாமை’ என்பார்கள். ‘நாம வெளியேதெருவுக்கு சேர்ந்து போறதே பெரியவிஷயம். ஆனா நாம கிளம்பும்போது, எதிர்த்த வீட்ல அப்படிப் பாக்கறாங்க’ என்று சொல்லக் கேட்டிருப்போம்.

‘உங்க பொண்ணு பொசுக்குன்னு வளர்ந்துட்ட மாதிரி இருக்குது’ என்றாலே, ‘பாரும்மா, எப்படியெல்லாம் நம்ம பொண்ணை வாட்ச் பண்ணிட்டிருக்காங்க’ என்று கவலைகொள்வோம்.

இங்கே பளிச்சென்று நாலு பேர் பார்க்கவும் பாராட்டவும் உடுத்திக்கொள்ள ஆசைப்படுவதும் அப்படி உடுத்திக்கொண்டதைப் பற்றி எவரேனும் சொல்லிவிட்டால், திருஷ்டி என்றும் சொல்லி வருந்துவதும் வாழ்வில் இயல்பானதுதான்.

அதற்குக் காரணமும் இருக்கிறது. கணவனும் மனைவியும் சேர்ந்து போய்விட்டு வந்தாலே, அதை எதிர்வீடு பக்கத்து வீடு வைத்த கண் வாங்காமல் பார்த்தாலே, இருவரில் யாருக்காவது உடம்புக்கு முடியாமல் வந்துவிடும். புடவை நன்றாக இருக்கிறது என்று சொன்ன நாலாம் நாள், புடவையில் ஏதோ ஜாக்கெட்டோ உள்பாவாடையோ கர்ச்சீப்போ பட்டு, சாயமாகி, புடவையின் அழகே பறிபோயிருக்கும்.

இப்படிச் சொல்லுவதற்கு, ஒவ்வொருவரும் உணர்ந்த பல காரணங்கள் இருக்கின்றன.

வீட்டார் மட்டுமின்றி, மொத்த வீடானது திருஷ்டியில் இருந்து நீங்கி, நலம் பெறுவதற்கு பல வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வீட்டின் தரித்திர நிலை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் பெருகுவதற்கான வழியாகவும் இவை சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில்... உப்பு மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.

வீட்டு பாத்ரூமில்... அதாவது குளியலறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை எடுத்து, தண்ணீர் படாத இடமாகப் பார்த்து வைத்துவிடுங்கள். அதாவது, சோப், ஷாம்பூ, பிரஷ் என வைத்திருக்கும் மேற்பகுதியில் வைத்துவிடுங்கள்.

இப்போதெல்ல்லாம், கழிவறையும் குளியலறையும் சேர்ந்துதான் கட்டப்படுகின்றன. பாத்ரூமில், ஹார்பிக் மாதிரியான பொருட்களை வைப்பதற்கு ஒரு ஷெல்ப் அல்லது மேடையைப் பயன்படுத்துவோம். அதேபோல், குளிப்பதற்கான பைப் உள்ள இடத்துக்கு மேல் பகுதியில் ஷெல்ப் அல்லது சிறிய மேடையில், சோப், மஞ்சள், ஷாம்பூ முதலான் ஐட்டங்களை வைத்திருப்போம். இந்த இடத்தில்தான் அதாவது குளிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் கொண்ட இடத்தில்தான், கிண்ணத்தில் கல் உப்பை வைத்து வைக்கவேண்டும்.

தண்ணீர் படாத மூலையாகப் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். ஆனாலும் உப்பு கரையத்தானே செய்யும். இப்படிக் கரையக் கரைய, கிண்ணத்தில் ஒவ்வொரு நாளும் உப்பை நிரப்பி வாருங்கள். அந்த உப்பு கரையும். மீண்டும் உப்பு நிரப்புங்கள். அதுவும் கரையும். இப்படித் தொடர்ந்து செய்யச் செய்ய, கண் திருஷ்டி விலகும். திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகும். வீட்டின் தரித்திரம் அனைத்தும் விலகும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x