Last Updated : 06 Jun, 2019 11:14 AM

 

Published : 06 Jun 2019 11:14 AM
Last Updated : 06 Jun 2019 11:14 AM

உட்பொருள் அறிவோம் 18: தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை

தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை பற்றிப் பல விளக்கங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை நம்பிக்கையின் பாற்பட்டவைகளாகத்தாம் இருக்கின்றன. அதாவது நாம் அந்த விளக்கத்தை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொண்டாக வேண்டியிருக்கிறது. நாம் உடனடியாக, அனுபவபூர்வமாகப் பரிசீலித்துப் பார்க்க முடியாதவையாக அந்த விளக்கங்கள் இருக்கின்றன.

சின்முத்திரையின் அமைப்பு என்னவாக இருக்கிறது? கையின் கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டபடி இருக்கின்றன, இல்லையா? இதில் ‘தொடுதல்' என்பது பிரதானமாக இருக்கிறது. ‘தொடுதல்' என்பது என்ன? அடிப்படையில் ‘தொடுதல்' என்பது அறிந்துகொள்ளுதல். பொருள்களைத் தொட்டு அறிகிறோம். ‘அறிதல்' தொடுதல் மூலமாக மட்டுமின்றி, ‘காணுதல்', ‘கேட்டல்', ‘சுவைத்தல்', ‘முகர்தல்' என ஐந்து புலன்களாலும், அவை ஒன்றுகூடும் ‘மனம்' என்னும் ஆறாவது அறிவாலும் நிகழ்கிறது, இல்லையா?

இந்த ஐந்து புலன்களில் ‘தொடுதல்' மிகவும் அடிப்படையானது. பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் முதலில் தோன்றிய புலன் உணர்வு ‘தொடுதல்'தான். மனிதன் தோன்றுவதற்கு முன்னாலேயே, ஏன், விலங்குகள் தோன்றுவதற்கு முன்னமேயே, செடிகொடிகளுக்கு முன்பே, ஒரு செல் உயிரினங்களிலேயே முதலில் தோற்றம் கொண்ட புலனுணர்வு தொடுதல்தான் என்று சில ஆராய்ச்சிகள் விஞ்ஞானபூர்வமாக நிரூபித்துள்ளன.

தொடுதல் மூலமாக, அதாவது ஸ்பரிசம் மூலமாக, ஒரு பொருள் இருப்பதை அறிந்துகொள்கிறோம். அறிந்துகொள்வது யார்? ‘நான்' ஒரு பொருளைத் தொடுகிறேன். தொடுதல் வழியாக ‘நான்' அந்தப் பொருள் இருப்பதை அறிந்துகொள்கிறேன். அந்தப் பொருள் அசேதனப் பொருளாக இருக்கும் பட்சத்தில் நான் அதைத் தொடுவது அதற்குத் தெரிவதில்லை.

மாறாக, ‘நான்' இன்னொருவரைத் தொடுகிறேன். அவருடன் கைகுலுக்கு கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அவரும் ஒரு ‘நான்', இல்லையா? நாங்கள் இருவரும் கைகுலுக்கும்போது எங்கள் இரண்டு கைகளுக்கிடையில் ஏற்படும் ஸ்பரிசம் ஒன்றென்றாலும், அது ஒரே நேரத்தில் இருவராலும் உணரப்படுகிறது. இரு வேறு ‘நான்கள்' அந்த ஸ்பரிசத்தைத் தனித்தனியே அனுபவம் கொள்கின்றன. ‘என்' அனுபவத்தை அவர் உணர்வதில்லை. ‘அவர்' அனுபவத்தை நான் உணர்வதில்லை. இங்கு இரண்டு அனுபவ மையங்கள் இருக்கின்றன. என் கோணத்திலிருந்து பார்க்கும்போது ‘நான்' அவரைத் தொடுகிறேன். 'அவர்' என்னால் தொடப்படுகிறார். இங்கு இருமை (துவந்தம்) இருக்கிறது.

ஆனால், என் இடது கையை என் வலது கையால் நானே குலுக்கிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த அனுபவம் யாருடையது? வலது கையின் அனுபவம் என்னுடையது. அதே நேரத்தில் இடது கையின் அனுபவமும் என்னுடையது தானே? ஒரே ‘நான்' இந்த இரண்டு கைகளின் அனுபவத்தையும் ஒரே கணத்தில் அடைகிறது இல்லையா? இதில் அனுபவ மையம் ஒன்றாக இருக்கிறது.

சரி, இப்போது சின்முத்திரையில் என்ன நடக்கிறது? கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கும்போது, அனுபவம் யாருடையது? இங்கு அனுபவ மையம் எது? இந்த இரண்டு விரல்களில் தொடும் விரல் எது, தொடப்படும் விரல் எது? இது இருமை கடந்த நிலையல்லவா?

இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, சின்முத்திரையின் உட்பொருள் என்ன? நம் கைவிரல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும் போது தொடும் நான், தொடப்படும் நான் என்று 'இரண்டு' இல்லாமல் போகிறது.

இந்த உலகம் இருப்பதை நாம் நம் புலன்களின் வழியாக அறிகிறோம். அறிவது யார்? இந்தப் புலன்களுக்குப் பின்னால், மனத்தின் பின்னால் நின்று அனுபவம் கொள்ளும் 'நான்' என்பது என்ன? என் நானுக்கும் உன் நானுக்கும் இந்தத் தளத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது? நம் இருவருக்குள்ளும் 'நான்' என்று உணர்வு கொள்ளும் பிரக்ஞையின் தன்மை ஒன்றேயல்லவா? பெண்ணானாலும், ஆணானாலும், பிச்சைக்காரனானாலும், குபேரனானாலும், வயதில் இளைஞ னானாலும் வயோதிகனானாலும், ‘நான்' என்னும் இந்தச் சுயவுணர்வு ஒன்றாகத்தானே இருக்கிறது?

நம் ஒவ்வொருவரின் பிரக்ஞைக்கும் பின்னால் இருந்து, நம் புலன்கள், மனங்கள் வழியாக இந்தப் பிரகிருதியை (உலகத்தை) அனுபவம் கொள்ளும் ‘நான்' ஒன்றே அல்லவா? ஒரு கையின் பல விரல்கள்போல, ஒரு மூலப் பிரக்ஞையின் பல உடல்-மனங்களென இயங்கிவரும் மனிதப் பிறவிகளாகிய நாம் அடிப்படையில் ஒன்று என்னும் தத்துவம்தான் சின்முத்திரையின் உட்பொருள்.

நம் அனைவரின் உடல்-மனங்கள் வழியாகவும் இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு அனுபவம் கொள்ளும் ‘நான்' ஒன்றே. ஒரே சூரியனின் ஒளி, பல கண்ணாடித் துண்டுகளில் பிரதிபலிப்பது போல, ஒவ்வொரு கண்ணாடித் துண்டிலும் ஒரு சூரியன் தெரிவதுபோல, பிரபஞ்சத்தின் ஒரே ‘நான்' பல உடல்-மனங்கள் வழியாகப் பிரக்ஞை கொண்டு இயங்கிவரும் அற்புதத்தைத்தான் ‘சின்முத்திரை' நமக்கு எடுத்துச் சொல்ல விழைகிறது.

‘நான்தான் பார்க்கிறேன்' என்று ஒருவன் அல்லது ஒருத்தி நினைத்துக் கொள்வது, நம் விரல் ஒன்று, ‘நான்தான் தொடுகிறேன்' என்று நினைப்பதைப் போல இருக்கிறது. அந்த விரல்கள் வழியாக ஒரு ‘நான்' இருந்து தொடுவதைப் போல நம் பிரக்ஞைக்குப் பின்னால் இருக்கும் ‘நான்' நம் பிரக்ஞை, புலன்கள், மனம் வழியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

காண்பவன்-காணுதல்-காட்சி என்று மூன்றாக இருப்பதில் காணுதல் என்பது ஒன்றுதான் அடிப்படையில் உண்மை என்பது நமக்கு அப்போது தெளிவாகப் புரியவரும். பார்க்கும் கணத்தில் ‘நான்' பார்க்கிறேன் என்ற பிரக்ஞை இருப்பதில்லை. பார்த்து முடிந்த கணத்தில்தான் ‘நான்' பார்த்தேன் என்பதும், இதைப் பார்த்தேன் என்பதும் மனத்தில் உருவாகிறது. பார்த்த நானும் பார்க்கப்பட்ட காட்சியும் ‘பார்வை' முடிந்த பிறகு மனத்தில் உதித்த எண்ண உருவங்கள்.

சின்முத்திரையின் ஸ்பரிச உணர்வில் கவனம் குவிந்து உள்ளே ஒருமை கூடும்போது, காண்பவனும் காட்சியும் காணுதலில் ஐக்கியமாகி, காண்பவன் என்று தனியே யாரும் இல்லாத ‘காணல்' மட்டுமே விகசித்து இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அந்தக் காணல் பிரபஞ்சத்தின் முழுமுதற்பிரக்ஞையின் காணல் என்று உணர்ந்துகொண்டு உள்ளே உறையும் எல்லையற்ற மௌனத்தில் இரண்டறக் கலந்து போய்விட முடியும்.

தட்சிணாமூர்த்தியை ‘மௌன குரு' என்றும் அவரது உபதேசத்தை ‘மௌன உபதேசம்' என்று சொல்கிறோம் இல்லையா? மேலே நாம் பார்த்த உண்மையைப் புரிந்துகொள்வதற்குச் சொற்கள் எதற்கு? கண்களை மூடிக்கொண்டு, சின்முத்திரையில் மனம் லயித்து, அந்த இரண்டு விரல்களின் ஸ்பரிசத்தில் நம் சொற்களற்ற கவனத்தைக் குவித்து அமர்ந்திருந்தோமானால், நம் ஆன்மாவென வியக்தி கொண்டிருக்கும் பரம்பொருளை உணர்ந்து கொண்டுவிட முடியாதா?

(ஆக்கம் பயில்வோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x