Published : 06 Jun 2019 11:12 AM
Last Updated : 06 Jun 2019 11:12 AM

மனிதனுக்குள் நடக்கும் குருஷேத்திரப் போர்

பகவத் கீதையின் சாராம்சங்களை ஆராய்ந்து தான் தெளிந்தவற்றை 1897-ல் ஸ்ரீராமகிருஷ்ண சங்கத்தின் தலைமையகமாக அப்போதிருந்த ஆலம்பஜார் மடத்தில் சுவாமி விவேகானந்தர் வங்க மொழியில் சொற்பொழிவாக நிகழ்த்தியுள்ளார். இதை ஈடா ஆன்செல் என்னும் அமெரிக்கப் பெண்மணி சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்திருந்தார். தொடர்ந்து, 1900 மே 26, 28, 29 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகளை, ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.

1986-ம் ஆண்டு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தால் ‘கீதை சொல்லும் பாதை’ என்ற தலைப்பில் இது நூல் வடிவில் வெளியாகியுள்ளது. இதில் கீதையை ஒரு சாதாரண மனிதனின் கோணத்திலிருந்து விவேகானந்தர் ஆராய்ந்து கூறியுள்ளதாவது:

எது குருஷேத்திரப் போர்?

“ஒரு போர்க்களத்தில் இரு பெருஞ்சேனைகள் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க ஆயத்தமான நிலையில் ஞானம், பக்தி யோகம் பற்றி அவ்வளவு பெரிய உரையாடல் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் ஒவ்வொரு சொல்லையும் எழுதி வைத்துக்கொள்ள அங்கு சுருக்கெழுத்தாளர் இருந்தாரா? குருஷேத்திரப் போர் ஒரு உருவகக் கதை என்று சிலர் கருதலாம். ஆனால், மனிதனுக்குள் இருக்கும் நல்ல மற்றும் தீய இயல்புகளுக்கு இடையே இடைவிடாமல் நிகழும் போரையே குருஷேத்திரப் போர் குறிக்கிறது என்பதுதான் அதிலுள்ள உட்கருத்தாகும். இந்தக் கருத்து அறிவுபூர்வமானதே.

பலருக்குப் பயன்படக்கூடிய ஒரு நல்ல செய்தியைப் போதிக்க உதவும் பட்சத்தில் ஒருபொய் சொல்வதில் தவறில்லை. அதாவது நோக்கம் நல்லதாக இருந்தால், வழி எதுவாக இருந்தாலும் அது நியாயமே.

குணங்களில் வேற்றுமை

பலர் தங்களை சத்வகுணம் படைத்தவர்கள் என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் தமோ குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். தூய்மையற்ற வாழ்க்கை வாழும் பலர், தங்களை பரமஹம்சர்களாக எண்ணிக் கொள்கின்றனர். ஏனென்றால், பரமஹம்சர்கள் ஜடத்தைப் போல், பித்தனைப் போல் இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பரமஹம்சரைக் குழந்தைக்கு ஒப்பிடுவார்கள். இதில் ஒரு பக்கம்தான் சரி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் ஞானத்தைக் கடந்த நிலைக்குச் சென்றுவிட்டார். மற்றவருக்கோ ஞானம் என்பது அரும்பவேயி்ல்லை. சத்வ மற்றும் தமோ குணங்கள் சில விஷயங்களில் ஒன்றுபோல் இருந்தாலும் அவற்றுக்கு இடையே மலையளவு வேற்றுமை உள்ளது.

பாவம், புண்ணியம்

உலகில் பாவமும் இல்லை. துயரமும் இல்லை. பாவம் என்ற ஒன்று இருக்குமேயானால் அது பயம்தான். உங்களிடம் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் எந்தச் செயலும் புண்ணியம் ஆகும். எது உடலையும் மனத்தையும் பலவீனப்படுத்துகிறதோ அதுதான் பாவம்.

மிக இழிந்த பாவியையும் வெறுக்கக் கூடாது. அவனது வெளிப்புறத்தைப் பார்க்காமல் பார்வையை உள்ளே செலுத்தும் போது, அங்கே பரமாத்மா உறைந்திருப்பதைக் காணலாம்.

வேதங்கள்

அபூர்வ சக்திகள் உள்ள வெறும் வார்த்தைகளே வேதங்கள். அவற்றைச் சரியான முறையில் உச்சரித்தால் விளைவுகளை உருவாக்க வல்லவை. ஓர் உச்சரிப்புத் தவறினாலும் பயன் உண்டாகாது. உலகில் உள்ளவையெல்லாம் எண்ணத்தின் வெளி்ப்பாடே. எண்ணமோ சொற்களின் மூலம்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும். தோன்றா நிலையில் உள்ள எண்ணம் வெளிப்படும் சொற்களின் தொகுதியே வேதங்கள். ஆனால், நான்கு புத்தகங்களையே வேதம் என்று சொல்வதுதான் பிரச்சினை.

படைப்பின் ஆரம்பம் ஒலி

ஒலிதான் படைப்பின் ஆரம்பம். உயிர்களின் படைப்புக்குக் காரணியாக மூல உயிரணுக்கள் இருப்பதுபோல், ஒலிகளுக்கும் மூல ஒலி ஒன்று இருக்க வேண்டும். வேதங்களில் மூட நம்பிக்கைக்கும் அறியாமைக்கும்கூட இடமுண்டு.

மாமனிதர்கள் சிந்திப்பதற்கும், நீங்களும், நானும் சிந்திப்பதற்கும் வேற்றுமை உள்ளது. நாம் சிந்திப்பதை நமது உடல் பின்பற்றுவதில்லை. நமது செயல்கள் எண்ணங்களுடன் இயைந்து போவதில்லை. நமது சொற்கள் வேதங்களின் சொற்களைப் போல் ஆற்றல் பெறவில்லை. அவர்கள் எது எண்ணினாலும் உடனே நிறைவேறும். ‘இதை நான் செய்வேன்’ என்று அவர்கள் கூறினால், உடல் அப்படியே செய்கிறது. அதுதான் பரிபூரணமான கீழ்ப்படிதல்.

மனம்

ஒருமைப்பட்ட மனமே வெற்றிபெறும். இரண்டாயிரம் பொருட்களில் சிதறிப்போன மனம் தனது ஆற்றலை இழந்து விடுகிறது.

ஞானி

ஆமை தன் கால்களை உள்ளே இழுத்துக்கொண்ட பின் நாம் எவ்வளவு அடித்தாலும் ஒரு கால் கூட வெளியே வராது. அதுபோல், ஞானியால் தன் புலன்களை எல்லாம் உள்ளே இழுத்துக்கொள்ள முடியும். எந்த விருப்பமும் அவனை அசைக்காது. பிரபஞ்சமே இடிந்து விழுந்தாலும், அவனது மனத்தில் அது ஒரு சிறு அலையைக்கூட எழுப்பாது.

துன்பத்தின் சிறப்பு

வாழ்க்கையில் நமக்கு படிப்பினை தரக்கூடிய அனுபவத்தைத் தவிர வேறு எதிலும் மதிப்பு இல்லை. பல நேரம் நமக்கு ஏற்படும் துன்பங்களே இன்பங்களைவிட சிறந்த அனுபவத்தை அளிக்கின்றன.

அறிஞன்

எவனுடைய ஒவ்வொரு முயற்சியும் பலனில் விருப்பமில்லாமல், சுயநலத்தில் நாட்டமில்லாமல் பற்றற்றதாக இருக்கிறதோ அவனே அறிஞன். சுயநல நாட்டம் உடையவர்களாக நாம் இருக்கும்வரை உண்மை அறிவு நமக்கு ஒருபோதும் வராது.

அச்சம் தவிர்க்க வழி

எங்கே ஒருவன் மற்றொன்றைக் காண்கிறானோ, கேட்கிறானோ, எதுவரை இரண்டு உண்டோ, அதுவரை எல்லாத் துன்பங்களுக்கும் பிறப்பிடமான அச்சம் இருந்தே தீரும். எங்கே ஒருவன் மற்றொன்றைக் காணவில்லையோ, எங்கே ஒன்று மட்டும் உள்ளதோ அங்கே துயரத்தை அனுபவிக்கவும், துன்புறவும் யாருமில்லை. இரண்டற்ற ஒன்றுதான் உள்ளது. எனவே, அஞ்சாதீர்கள், விழித்துக் கொள்ளுங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நிற்காதீர்கள்’’.

தொகுப்பு: வே. இசக்கிமுத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x