Last Updated : 07 Jun, 2019 09:28 AM

 

Published : 07 Jun 2019 09:28 AM
Last Updated : 07 Jun 2019 09:28 AM

கேட்ட வரம் தரும் வைகாசி சஷ்டி!

வைகாசி மாத சஷ்டி நாளைய தினம் 8.6.19 சனிக்கிழமை. எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து தரிசியுங்கள். நம் கஷ்டங்களையும் வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.

மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

சஷ்டி திதியில் கந்தனை வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

நாளை சனிக்கிழமை 8.6.19 முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x