Published : 20 Jun 2019 11:19 AM
Last Updated : 20 Jun 2019 11:19 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 82: சமய ஜனநாயகம் வாழ்க

சிவனாரின் திருவுருவம் எத்தகையது? யாருக்குத் தெரியும்? யார் கண்டார்கள்?

காரைக்கால் அம்மை பாடுகிறாள்:

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்;

இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றுந்தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட்கு என்உரைப்பேன்

எவ்வுருவோ நின்உருவம் ஏது?

(அற்புதத் திருவந்தாதி, 61)

உன் திருவுருவம் இன்னதென்று தெரியாமலேதான் அன்று உனக்கு நான் ஆட்பட்டேன். ஆட்பட்ட பிறகும், இன்றுவரை உன் திருவுருவை இன்னதென்று கண்டதில்லை. என்றாவது ஒரு நாள், உன் இறைவன் திருவுருவம் எத்தகையது என்று யாரேனும் கேட்டால், உன் உரு அறியாத நான் என்ன விடை சொல்வேன் உன் உருவந்தான் எது? விடை சொல்லவாவது உருவம் காட்ட மாட்டாயா என்று பாடும் காரைக்கால் அம்மை இந்த உருவக் குழப்பத்துக்கு விடை காணும் முகமாகத் தானே ஒருவாறு தேறி,

ஒருபால் உலகுளந்த மால்அவனாம் மற்றை

ஒருபால் உமைஅவளாம் என்றால் – இருபாலும்

நின்உருவம் ஆக நிறம்தெரிய மாட்டோமால்

நின்உருவோ மின்உருவோ நேர்ந்து?

(அற்புதத் திருவந்தாதி, 41)

- என்று பாடிப் பார்க்கிறாள். உன் உருவத்தின் ஒரு பகுதி திருமாலாம்; மறுபாதி உமையாளாம். இருபாதி உருவமும் உன் உருவம் அல்ல என்றால், உன் உருவம் எது? ஒருவேளை நீ ஒன்றிக் கலந்துபோன உமையாளின் உருவம்தான் உன் உருவமோ? தெளிவு காண முயன்றாலும் உருவத்தைப் பற்றிக் குழப்பமே மிஞ்சுகிறது.

பண்ஏறு மொழிஅடியர் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கின்

கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்

காட்டுஎன்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ?...

(திருவருட்பா, முதல் திருமுறை, சீவசாட்சி மாலை 1)

உன் திருவடி அழகைப் பலரும் போற்றிப் பாடுகிறார்கள்; ஆனால் நான் பார்த்ததே இல்லை. ஏன்? பார்த்தால்தான் என்ன? கண்ணேறு பட்டுவிடுமா? அதனால்தான் கனவில்கூடக் காட்டாமல் வைத்திருக் கிறாயா? இதுதான் உன் அருளா என்று இறைவனின் திருவடி காணமுடியாமல் போனது பற்றி வள்ளலாரும் பரிதவிக்கிறார்.

மொத்த உருவத்தையும் காட்டு என்றா கேட்டேன்? வெறும் பாதத்தைத் தானே காட்டச் சொல்லிக் கேட்டேன்? அதுவும்கூட நனவில் காட்டச் சொல்லிக் கேட்கவில்லை; கனவில் காட்டினாலும் போதும் என்றுதான் வேண்டுகிறேன்; மிக எளிய விண்ணப்பம் தானே? அதைக் கூடவா நிறைவேற்றித் தரமாட்டாய் என்று புலம்புகிறார். என்றாலும் பாதம் தேடும் கருத்தைப் பின்னாளில் மாற்றிக்கொண்டு உயிர் இரக்கத்தையே கடவுளாகவும் ஒளிச் சுடரையே வடிவமாகவும் தேற்றித் தெளிந்தார்; பிறரையும் தேற்றுவிக்க முயன்றார்.

என்ன குற்றம்?

சிவனார்க்கு இத்தனை பெயர்களையும் உருவங்களையும் சொல்கிறார்களே அருளாளர்கள்? அவரவர்கள் அறிந்த வகை, அவரவர்கள் உகந்த வகை  சொல்கிறார்கள். ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமங்களும் அறுபத்து நான்கு திருவுருவங்களும் சொன்னால்தான் என்ன குற்றம்?

எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த

வலம்பன் மணிமுடி வானவர் ஆதி

எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்

எலும்பும் கபாலமும் இற்றுமண் ஆமே

(திருமந்திரம் 371)

- என்று இறைவனுக்கு உருவம் சொல் கிறார் திருமூலர். எலும்பும் கபாலமும் ஏந்திய திருவுருவத் துக்குக் கங்காளத் திருவுருவம் என்று பெயர். கங்காளம் என்றால் எலும்புக்கூடு. எலும்பையும் கபாலத்தையும் மூட்டையாகக் கட்டி அதை வலம்பம் என்னும் முதுகெலும்புக் கழியில் கோத்துக் காவடியாக்கித் தோளில் சுமந்தவன் இறைவன். ஏன் எலும்பும் கபாலமும் சுமக்க வேண்டும்? சுமக்கவில்லை என்றால் உடல்கொண்டு வாழ்கிறவர்கள் எலும்பும் கபாலமும் ஆகி இற்று மண்ணாய்ப் போவார்கள்.

இதென்ன கூத்து? கடவுளுக்கு வடிவம் கற்பிக்கிறவர்கள் எலும்பும் கபாலமுமாக ஒரு கடவுளைக் கற்பிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

நங்காய்! இதுஎன்னதவம்

நரம்போடு எலும்புஅணிந்து

கங்காளம் தோள்மேலே

காதலித்தான் காணேடீ?

கங்காளம் ஆமாகேள்!

காலஅந் தரத்துஇருவர்

தம்காலம் செய்யத்

தரித்தனன்காண் சாழலோ!

(திருவாசகம், திருச்சாழல், 11)

‘சிவனார் பகட்டான பட்டாடைப் புனை கோலத்தை விரும்புகிறவர் அல்லர்; எளிய தவக்கோலத்தையே விரும்புகிறவர் என்று சொன்னாய்! நல்லது! ஆனால் இதென்னடீ கிறுக்குத்தனம்? நரம்பில் எலும்பைக் கோத்து மாலை போட்டுக்கொள்வதும், எலும்பையும் கபாலத்தையும் மூட்டை கட்டித் தோள்மேலே காவடி தூக்கிக்கொள்வதும், இதுவும் தவக்கோலந்தான் என்பாயா?’ என்று மணிவாசகப் பெண் ஒருத்தி கேட்க, மற்றொருத்தி சொல்கிறாள்: ‘ எலும்பைத் தூக்கிச் சுமப்பது ஏன் என்று சொல்கிறேன் கேள்! உலகம் முடியும் காலத்தில் காக்கும் கடவுள் என்று சொல்லப்படுகிற திருமால், படைக்கும் கடவுள் என்று சொல்லப்படுகிற நான்முகன் உட்பட அனைத்தையும் அழித்தான் கடவுள். மீண்டும் உலகம் உருவாகும் காலத்தில் அவர்களையும் உருவாக்க வேண்டாமா? ஆகவே அவர்களது எலும்புகளைச் சேகரித்து வைத்துச் சுமந்து திரிகிறான்.

கங்காளத் திருவுருவம்

இறைத் திருவுருவங்கள் பெரும்பாலும் சமயச் சண்டை களின் அல்லது சமய முதன்மை கோரல்களின் அடையாளங்கள். சிந்து சமவெளிக் காலப் பழைமை உடையது சைவம். அதன் முதல்வனும் தொல்முது கடவுளு மாகிய சிவனைச் சுடுகாட்டுக்கு அனுப்பி எலும்பும் கபாலமும் சாம்பலும் ஆக்கிவிட்டதாக வைதிகம், வைணவம் உள்ளிட்ட புதிய சமயங்கள் பெருமை பிதற்றின.

அவற்றின் கடவுளராகிய நான்முகனையும் திருமாலையும் எலும்பும் கபாலமும் ஆக்கி, மூட்டை கட்டி, முதுகெலும்பைக் காவுதடியாக்கிக் கோத்துச் சுமந்து திரிந்தான் கங்காளன் ஆகிய சிவன். சாம்பலில் இருந்தும் தன்னால் எழமுடியும் என்று சைவம் தன் புத்துயிர்ப்பைக் காட்ட முன்வைத்த உருவமே கங்காளத் திருவுருவம்.

சமயங்களின் அரசியலில் சைவம் பின்தங்கிவிடாது இருக்கவும், சைவத்தின் பின்பற்றாளர்கள் புறச்சமயப் போட்டிகளால் எலும்பும் கபாலமும் ஆகி மண்ணோடு மண்ணாக இற்றுப் போய் விடாமல், மண்ணில் நல்லவண்ணம் வாழவுமே இறைவன் எலும்பும் கபாலமும் ஏந்தினான் என்பதைச் சைவம் பழங்கதைகளால் மட்டுமல்லாது வடிவங்க ளாலும் முன்வைக்கிறது.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வீரே யாம்ஆகில்,

தங்கா வினைகளும்; சாரும் சிவகதி;

சிங்காரம் ஆன திருவடி சேர்வீரே.

(திருமந்திரம் 1666)

எலும்புக்கூடு சுமக்கும் கடவுள் சாம்பலைமட்டும் விடுவானா? புத்துயிர்ப்பின் அடையாளமாக அதையும்தான் பூசித் திரிகிறான். அவன் பூசியதால் திருநீறாகிவிட்ட சாம்பலை நீங்களும் பூசுக; பூசினால் புத்துயிர்ப்பீர்கள்; கடினப்பாடுகள் விலகும்; சிவகதி கிடைக்கும்; பண்ணேறு மொழி அடியார் பரவி வாழ்த்தும் சிங்காரத் திருவடிப் பேறு கிடைக்கும்.

இவ்வாறு சமயங்களின் அரசியலில் சைவம் வெல்வதற்காகப் பக்தி செய்யச் சொல்லிப் பேசினாலும், திருமூலர் பகுத்தறிவும் பேசுவார் இல்லையா? பேசுகிறார்:

எவ்வாறு காண்பான் அறிவு தனக்குஎல்லை

அவ்வாறு அருள்செய்வன் ஆதி அரன்தானும்;

ஒவ்வாத மன்றுஉள் உமைகாண ஆடிடும்

செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.

(திருமந்திரம் 130)

இறைவனை நீங்கள் எவ்வாறு அறிய விரும்புகிறீர்களோ அவ்வாறே அறிவீர்கள்—கங்காளனாய்க் காண விரும்பினோர் கங்காளனாயும் பங்காளனாய்க் காண விரும்பினோர் பங்காளனாயும்; இருப்பதாய் நம்பினோர் இருப்பதாயும் இல்லாதாய் நம்பினோர் இல்லாதாயும்.

உமை அவனை ஆட்டக்காரனாய் அறிய விரும்பியபோது ஆட ஒரு மேடை இல்லையே என்று சாக்குச் சொல்லாது, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்; பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்’ என்று ஆடிக் காட்டினான் செவ்வானத்துச் செழுஞ்சுடர் மாணிக்கம்.

உலகியல் விரும்பினார் உலகியல் காண்பார்; அருளியல் விரும்பினார் அருளியல் காண்பார். அவரவர் திசைவழி அவரவர்க்கு என்னும் சமயச் சனநாயகம் வாழ்க.

(விசாரணை தொடரும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x