முல்லா கதைகள்: நான் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்

முல்லா கதைகள்: நான் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்
Updated on
1 min read

ஒருநாள் முல்லா, ‘சில பேர் இருக்கிறார்கள், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, இறந்துபோனதுபோல் தெரிந்தாலும் உயிரோடு இருப்பார்கள். ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை எப்படிச் சொல்வது?’ என்று கேட்டார்.

கடைசி வரியை மட்டும் மீண்டும் சத்தமாகச் சொன்னதால், அதை அவர் மனைவி கேட்டுவிட்டார்.

‘அட, முட்டாள் மனுஷா! ஒருத்தனோட கைகளும் பாதங்களும் ஜில்லென்று ஆகிவிட்டால், அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்’ என்றார் அவருடைய மனைவி.

சில நாட்களுக்குப் பிறகு, முல்லா காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நிலவிய கடுங்குளிரால் அவரது உறுப்புகள் அனைத்தும் ஜில்லென்று ஆகிவிட்டன.

‘அய்யோ, மரணம்! இப்போது எனக்கு வந்துவிட்டது. இறந்தவர்கள் மரம் வெட்டமாட்டார்கள்; அவர்களால் இயங்கமுடியாது என்பதால், அவர்கள் அமைதியாகப் படுத்துகொள்வார்கள்’ என்றார் அவர்.

அவர் மரத்தின் கீழேயே படுத்துகொண்டார்.

அப்போது, கடுங்குளிரால் பாதிக்கப்பட்டு அந்தப் பக்கமாக வந்த ஓநாய்க் கூட்டம், அங்கே படுத்திருந்த மனிதன் இறந்துவிட்டான் என்று நினைத்து, முல்லாவின் கழுதையை அடித்துத் தின்றுவிட்டன.

‘இதுதான் வாழ்க்கை! ஒன்றோடு ஒன்று எப்படித் தொடர்புடையதாக இருக்கிறது. நான் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்களால் என் கழுதையிடம் இப்படி உரிமை எடுத்துகொண்டிருக்க முடியாது’ என்று நினைத்தார் முல்லா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in