அஷ்டமியில் பைரவ வழிபாடு; கஷ்டமெல்லாம் தீரும்!

அஷ்டமியில் பைரவ வழிபாடு; கஷ்டமெல்லாம் தீரும்!
Updated on
1 min read

கலியுகத்துக்கு காலபைரவரே துணை என்பார்கள். இது சத்திய வாக்கு. இப்போது நடக்கும் கலியுகத்தில், மனதில் பயம், மனக்குழப்பம் என்றெல்லாம் தவித்து மருகிக் கொண்டிருக்கும் வேளையில், காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

தேய்பிறை அஷ்டமியில், அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!

மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை விலக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள்.

இன்று (25.6.19) செவ்வாய்க்கிழமை, அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. இன்றைய தினம், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பைத் தரும். முடிந்தால், தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் யாவும் விலகும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in