Published : 20 Jun 2019 10:46 am

Updated : 27 Jun 2019 11:03 am

 

Published : 20 Jun 2019 10:46 AM
Last Updated : 27 Jun 2019 11:03 AM

இறைத்தூதர் கதைகள் 01: நபிகளின் வசனங்களால் ஈர்க்கப்பட்டவர்

01

இறைத்தூதர், மக்காவில் தன் பணிகளைத் தொடங்கியவுடன், மெதுவாக மக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடவுளின் ஒருமைத்தன்மையைப் பற்றிய செய்தியைக் கேட்டவுடன், அதிலிருந்த உண்மையை உடனடியாக அவர்கள் உணரத் தொடங்கினர்.

சிலர் உருவ வழிபாடுகள் செய்வதிலிருந்து விலகத் தொடங்கினர். அவர்கள் இஸ்லாத்தின்மீது நம்பிக்கையுடைய வர்களாக மாறினர். இறைத்தூதரின் மனைவி கதிஜா, அவரின் பால்ய நண்பர் அபு பக்கர், உறவினர் அலி இபின் அபி தாலிப், ஒரு நேரத்தில் அவருக்குக் கடுமையான எதிரியாக இருந்த உமர் இபின் கத்தாப் ஆகியோர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முன்னோடிகள். இவர்கள் அனைவரும் இறைத் தூதரின் பணியைத் தீவிரமாக அணுகத் தொடங்கினர். இஸ்லாத்தின் செய்தியைப் பரப்புவதில் இவர்கள் முக்கியப் பங்காற்றினர்.


மற்றவர்கள், சிரியா, பாலஸ்தீனம் பயணம் சென்றுவந்த கிறிஸ்தவ, யூத பாதிரியார்கள், அறிஞர்கள் மூலம் அரேபியாவில் விரைவில் ஓர் இறைத்தூதர் தோன்றவிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தனர். அவர்கள் இறைத்தூதர் முஹம்மதைப் பார்த்தவுடன், அவரின் உன்னதமான பண்பாலும், திருச்செய்தியாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தனர்.

நபிகள், எப்படி இறைத்தூதர் ஆனார் என்பதையும் இஸ்லாம் மார்க்கம் பரவிய வரலாறும், அவரைப் பின்தொடர்ந்தவர்கள் குறித்தும் கதைகள் வடிவத்தில் இத்தொடரில் வெளிவரும்…

உத்மன் இபின் அஃப்பன்,

 கி.பி. 576-ம் ஆண்டு அரேபியாவின் தைஃப் என்ற நகரத்தில் பிறந்தார். அவர், இறைத்தூதர் முஹம்மதைவிட, ஆறு வயது இளையவர். அவரது பெற்றோர் இருவருமே இறைத்தூதரின் தூரத்து உறவினர்கள். உத்மன் அடிப்படைக் கல்வியைக் கற்று, மக்காவில் எழுதப் படிக்கத் தெரிந்த சில பேரில் ஒருவராக இருந்தார்.

மக்காவில் செல்வச் செழிப்பு, பிரபலமாக வாழ்ந்துவந்த நபர்களில் ஒருவராக உத்மன் இருந்தார். அவர் தன் தந்தையிடமிருந்து அந்தச் செல்வச் செழிப்பைப் பெற்றிருந்தார். அவர் தன் தந்தையைப் போலவே வணிகரானார்.

அவரது நேர்மையும், வணிகத் திறன்களும் அவரை விரைவிலேயே குரைஷ் பகுதியின் செல்வந்தராக மாற்றியது. இந்தக் குரைஷ் பழங்குடியைச் சேர்ந்தவர்தான் இறைத்தூதர். அவர் ‘உத்மன் கனி’, ‘செல்வந்தர் உத்மன்’ என்று அறியப்படலனார்.

அடக்கம், நற்பண்புகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் உத்மன். அவர் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்புகூட, சூதாடியதோ மது அருந்தியதோ கிடையாது. அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். விதவைகள், ஆதரவற்றவர்கள், ஏழைகளுக்குத் தன்னால் முடிந்தவரை, உதவிகள் செய்துவந்தார். அவர் தன் உறவினர்களிடம் கனிவாக நடந்துகொண்டார்.

ஒருநாள், உத்மன் தன் அத்தை அர்வா உடல்நலமற்று இருப்பதாக அறிந்து, அவரைப் பார்க்கச் சென்றிருந்தார். அங்கே இறைத்தூதர் முஹம்மதும் உடனிருந்தார். சுற்றியிருந்த மக்கள், இறைத்தூதர் முஹம்மதைப் பற்றியே அதிகமாகப் பேசிக்கொண்டிருந்ததால், உத்மன் அவரை ஆர்வத்துடன் பார்த்தார். இதைக் கவனித்த இறைத்தூதர், “என்ன விஷயம், உத்மன்?” என்று கேட்டார்.

“நாங்கள் முன்பு உங்களைக் கவுரவித்து உயரிய இடத்தில் வைத்திருந்தோம். ஆனால், இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று கேட்டார் உத்மன்.

குரைஷ் பழங்குடியினர், இறைத்தூதரின் சமயப் பணிகள் காரணமாக அவரை எதிர்ப்பதைப் பற்றி உத்மன் குறிப்பிடுகிறார்.

இதற்குப் பதிலளிப்பதற்காக, இறைத்தூதர் முஹம்மது, குர்ஆனின் சில வசனங்களை ஒப்புவித்தார்.

அந்த வசனங்களின் சாராம்சத்தால் ஈர்க்கப்பட்ட உத்மன், இறைத்தூதருடன் அவரது வீட்டுக்குச் சென்று, அங்கே இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார்.

தொடக்கக் கால இறைத்தூதரின் பயணத்தில், இப்படித்தான் மக்கள் அவரிடம் சென்றடைந்தனர். இப்படித்தான், மக்காவின் மக்கள் இஸ்லாம் மார்க்கத்துடன் தங்களை இணைத்துகொண்டனர்.

தற்போதைய குர்ஆனுக்கு ஒருமித்த வடிவத்தை வழங்கியவர் , உத்மன் இபின் அஃப்பன் தான்.

(பயணம் தொடரும் )

- தமிழில்: என். கௌரி

(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ புத்தகம்,

குட்வர்ட் பதிப்பகம்,

தொடர்புக்கு: 96001 05558)


புதிய தொடர்இறைத்தூதர் கதைகள்மக்காகுரைஷ் பழங்குடியினர் இஸ்லாம்உருவ வழிபாடுஇறைத்தூதர்நபிகள்நபிகளின் வசனங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author